Published:Updated:

`நான் ஈழப் படுகொலை பற்றியே பேசிக்கொண்டிருக்க முடியாது!' - சொல்கிறார் தி.மு.க இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி ( AKSHITHATEKKI )

அண்மையில் தி.மு.க-வில் இணைந்துள்ள இராஜீவ் காந்தி, ``பாசிச பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்கு இதுதான் சரியான நேரம். இப்போதும் நான் ஈழப் படுகொலை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. ஆனாலும், இனப் படுகொலையை நிரூபிப்பதற்கான என் பணிகள் தொடர்கின்றன'' என்கிறார்.

`அது ஒரு பேரின்ப கனாக்காலம்! அனைவருக்கும் நன்றி! நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறேன்!' என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே விடைபெற்றுக் கிளம்பிய `நாம் தமிழர் கட்சி'யின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இராஜீவ் காந்தி, தற்போது தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``நாம் தமிழர் கட்சியிலிருந்து இராஜீவ்காந்தியும் கல்யாணசுந்தரமும் வெளியேறிவிட்டனர் என்று சொல்லக் கூடாது; நாங்கள்தான் அவர்களை வெளியேற்றிவிட்டோம்'' என்று காத்திரமாக விமர்சித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பிமார்களும் ``ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்தத் தமிழ்த் துரோகிகளைக் களத்தில் எதிர்த்து நின்று வேரடி மண்ணோடு வீழ்த்துவதுவதுதான் எங்கள் கடமை'' என்று இணையம் வழியே உணர்ச்சி பொங்க உரையாற்றிவருகின்றனர்.

இந்தநிலையில், தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கும் இராஜீவ் காந்தியிடம் பேசினோம்...

சீமான்
சீமான்

``ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் என்ற தத்துவ நிலைப்பாட்டோடு அரசியல் களமாடிவந்த நீங்களே இன்றைக்கு திராவிடக் கட்சியில் அடைக்கலமாகிவிட்டீர்களே?''

`ஆரியமும் திராவிடமும் ஒன்றல்ல.... இந்தப் புரிதல் எனக்கு 2009-லேயே இருந்தது. ஆனாலும், அப்போது தி.மு.க மீதிருந்த கோபமே, `தனிக்கட்சியாக வந்து நம்மால் சாதிக்க முடியும்' என்று விரும்பி `நாம் தமிழர்' என்றொரு கட்சியைக் கட்டினோம். அதாவது, என் கோபம் அரசியலாகவும் மாறியதால்தான் மாற்று அமைப்புக்குள் போனேன். 'கொலை செய்த காங்கிரஸ், துணைபோன தி.மு.க' என்று பிரசாரமும் செய்தேன். ஆனால், `நீ இருந்தால் இரு... இல்லாவிட்டால் போ... நான் சொல்வதுதான் சரி' என்றெல்லாம் நாம் தமிழர் கட்சித் தலைமையின் ஜனநாயகத் தன்மையற்ற போக்கைக் கண்ட பிறகு, `நாம் தவறு செய்துவிட்டோமோ...' என்ற எண்ணம் இப்போது வருகிறது. இது தத்துவத்தின் மீது ஏற்பட்ட தவறு அல்ல. தவறான தலைமையின் மீது நான்வைத்திருந்த நம்பிக்கைப் பிழை இது.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று பேசிய சமூகம் இது. ஆனால், சக மனிதனையே `நீ கன்னடன், மலையாளி, தெலுங்கன் வெளியேறு' எனப் பேசுகிறபோது, இந்த உணர்ச்சி எனக்கு பேராபத்தாகப்படுகிறது. இந்தச் சூழலில்தான் `இனி இது சரியாகப் போகாது' என்ற புரிதலோடு திரும்பவும் திராவிட இயக்கப் பாதைக்கே திரும்பியிருக்கிறேன். ஆரியத்தை எதிர்த்து இட ஒதுக்கீடு, சமூகநீதி பற்றியெல்லாம் பேசுவதற்கு மக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு வலிமையான தலைமையாக மு.க.ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார்!''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``தமிழ்த் தேசியமும்கூட நீங்கள் எதிர்க்கிற ஆரியத்துக்கு எதிராகத்தானே வேலை செய்துகொண்டிருக்கிறது?’’

``இன்றைய சூழலில், ஆரியத்துக்கு எதிராக தமிழியம் வேலை செய்துகொண்டிருந்தாலும்கூட அதற்குப் போதிய மக்கள் வலிமை இல்லை; ஒற்றைத் தலைமையின் கீழாகவும் அது கட்டப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், மக்கள் ஆதரவுபெற்ற தி.மு.க-வில் இணைந்து நமது பணியைச் செய்யலாம் என்ற நம்பிக்கையில்தான் நான் தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்.''

தூத்துக்குடி: மதுபோதையில் ரகளை; கண்டித்த எஸ்.ஐ மீது லாரி ஏற்றிக் கொலை! - என்ன நடந்தது?

``கடந்த பத்தாண்டுகளாக, தமிழீழம், இனப்படுகொலை என தமிழ்த் தேசிய அரசியல் பேசிவந்த இராஜீவ் காந்திக்கு இப்போதுதான் இந்தப் புரிதல் ஏற்பட்டிருக்கிறதா?''

``பெரியார், 'என் அறிவுக்கு எட்டியவரை... சரியாக இருப்பதைப் பேசுகிறேன்... இதுதான் என் அறிவு நாணயம்' என்று அடிக்கடிப் பேசுவார். அதாவது, ஈரோட்டில் மஞ்சளைப் பற்றிப் பேசிய பெரியார், நாமக்கல்லுக்கு வரும்போது முட்டையைப் பற்றித்தான் பேசியிருக்கிறார்... மஞ்சளைப் பற்றிப் பேசவில்லை.

அதேபோல், 2009-ல் இந்திய வெளியுறவுக் கொள்கையில் இருந்த தவறான கொள்கைகளைப் பின்பற்றி அன்றைய ஆட்சியாளர்களும் தவறு செய்துவிட்டனர். ஆனால், இன்றைக்கு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துக்கொண்டு, சர்வ வல்லமையுடன் மத்தியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க `ஒற்றை ஆட்சியே போதும்' என்ற சர்வாதிகாரத்துக்கு வந்து நிற்கிறது. இதனால், என் சமூகநீதி, மதச்சார்பின்மை, மானுட நீதி என அனைத்தும் பறிபோகின்றன.

நரேந்திர மோடி - அமித் ஷா
நரேந்திர மோடி - அமித் ஷா

வேளாண் சட்டங்களால் விவசாயிகளை வதைத்துக்கொண்டும், மாநில அரசுகளின் வரி வருவாயைப் பிடுங்கிக்கொண்டும் பாசிச ஆட்சியை நடத்திவருகிற பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்கு இதுதான் சரியான நேரம். இந்த நேரத்திலும்கூட நான் ஈழப் படுகொலை பற்றியே பேசிக்கொண்டிருக்க முடியாது. அதேசமயம், 2009-ல் உள்ள கோபம் எனக்கு இன்னமும் இருக்கிறது. காரணம்... அந்தக் கோபத்துக்கான தீர்வு இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, இராஜீவ் காந்தி என்ற அந்தத் தனிமனிதன் அதற்கான வேலைகளை இப்போதும் செய்துகொண்டேதான் இருக்கிறான்.

அதாவது, இன அழிப்புக்கு எதிராக இன்றைக்கும் பல அமைப்புகளோடு இணைந்து ஒரு வழக்கறிஞராக என் பணியை செய்துகொண்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையில், இது குறித்த ஓர் ஆவணங்கள் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் என் தனிப்பட்ட வேலைகள்.''

சசிகலா: டிஸ்சார்ஜுக்குப் பின்... முழுவீச்சில் தயாராகும் ஓசூர் ரிசார்ட்?

``தி.மு.க-வில் இணைந்து இனப்படுகொலை குறித்து எந்தவிதமான முன்னெடுப்புகளைச் செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்?''

``இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பேசியபோது எல்லோரும் அதை வரவேற்றுக் கொண்டாடினார்கள். ஆனால், இந்தியாவில், திருமாவளவனைத் தாண்டி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருமே இது இனப்படுகொலைதான் என்று பேசவில்லை.

இந்தநேரத்தில், இனப்படுகொலையை நிரூபிப்பதற்காக தனியே ஒரு வழக்கறிஞர் குழுவைக் கட்டி ஐ.நா-வுக்காக நாங்கள் வேலை பார்த்துவருகிறோம். இந்தவகையில் எங்கள் பணிசார்ந்து இயங்க எங்களுக்கு ஓர் அரசியல் முகமும் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், `இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான்' என்று ஒப்புக்கொள்கிற தி.மு.க என்ற மக்கள் அமைப்பின் வழியே பேசவைக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஐ.நா-வின் 49-வது அமர்வில் இது குறித்துப் பேசுவதற்காக அண்மையில்கூட தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆக, நான் வெளியே நின்று கத்தி எதுவுமே ஆகாமல் நிற்கிறபோது, தி.மு.க-வின் தலைவர் மற்றும் இளைஞரணிச் செயலாளரிடம் இது குறித்துப் பேசி, புரியவைத்து, பெரிய அளவில் எடுத்துச் செல்ல முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.''

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

``பொதுவாக ஈழ விவகாரங்களில், ஒதுங்கிச் சென்றுவிடுகிற தி.மு.க., அண்மையில் '800' பட சர்ச்சையின்போதும்கூட கருத்து எதுவும் தெரிவிக்கவில்லையே..?''

``எனக்கும்கூட அந்தச் சமயத்தில், இப்படியொரு பார்வைதான் தி.மு.க மீது இருந்தது. பொதுவாக ஈழ விவகாரத்தில், துரோகம் செய்த கட்சி தி.மு.க என்று திரும்பத் திரும்ப இங்கே பரப்புரை செய்யப்பட்டுவந்திருக்கிறது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சி இந்தப் பரப்புரையை இன்னும் தீவிரமாகச் செய்திருக்கிறது... இதில் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இப்படியொரு சர்ச்சை இருந்துவருகிறபோது, தி.மு.க-வினரேகூட `நம்மைக் காயப்படுத்துகிறார்களே...' என்ற உணர்வில் அந்நியப்பட்டு நின்றுவிடுகிறார்கள்.

அடுத்தகட்டமாக, `இதைப் பற்றிப் பேசாமலேயே கடந்துவிடலாம்' என்று முடிவெடுத்தபோதும்கூட, 'தனித் தமிழீழம் வேண்டும்' என்ற முடிவில் தி.மு.க-வினர் எப்போதும் உறுதியாகவே நிற்கிறார்கள். ஆக, பெருந்திரளான மக்கள் அமைப்பான தி.மு.க-வை ஒதுக்கிவிட்டு, சிறு குழுவாக இருப்பவர்கள் மட்டுமே `ஈழம்' குறித்தும், `இனப்படுகொலை' குறித்தும் பேசி சாத்தியப்படுத்திவிட முடியாது. `சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது' என்ற கதையாகத்தான் அது முடியும். அதனால், சிறுபிள்ளைகள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்களிடம் சரியான திட்டமிடல்கள் இருக்காது. இதுதான் கடந்த பத்தாண்டுக்கால அரசியலில் எனக்குக் கிடைத்த படிப்பினை. இனிவரும் காலங்களில் ஈழம் குறித்து தி.மு.க-வை மிகப்பெரிய அளவில் பேசவைக்க முடியும் என்று நம்புகிறேன்!''

அடுத்த கட்டுரைக்கு