Published:Updated:

``எடப்பாடி கேட்கும் நாற்காலி விவகாரம் ஒன்றும் உயிர்போகும் பிரச்னை இல்லை” - விளாசும் இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி

தி.மு.க மாணவரணி மாநிலத் தலைவர் இராஜீவ் காந்தி நேர்காணல்...

``எடப்பாடி கேட்கும் நாற்காலி விவகாரம் ஒன்றும் உயிர்போகும் பிரச்னை இல்லை” - விளாசும் இராஜீவ் காந்தி

தி.மு.க மாணவரணி மாநிலத் தலைவர் இராஜீவ் காந்தி நேர்காணல்...

Published:Updated:
இராஜீவ் காந்தி

ஆளுநருடனான மோதல், சட்டப்பேரவையில் எடப்பாடி, ஓ.பி.எஸ் பிரச்னையில் நடந்துகொள்ளும்விதம், சேது சமுத்திர திட்டம், அண்ணாமலைக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து தி.மு.க மாணவரணி மாநிலத் தலைவர் இராஜீவ் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி
படம் : ஶ்ரீனிவாசலு

``அரசியலுக்காக ஆளுநருடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருப்பதாக காட்டவேண்டிய கட்டாயம் திமுக-வுக்கு இருக்கிறதா?”

``ஆளுநரை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை தி.மு.க-வுக்கு இல்லை. இதுவரை இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் மாநில அரசு கொடுத்த உரையை, அதுவும் தான் ஒப்புதல் கொடுத்த உரையைப் படிக்காமல் தான்தோன்றித்தனமாகச் சிலவற்றைச் சேர்த்தும், நீக்கியும் படித்திருக்கிறார் ஆர்.என்.ரவி. அதைத் தட்டிக்கேட்க வேண்டிய கடமை ஒரு மாநில அரசாக திமுக-வுக்கு இருக்கிறது. அப்படிக் கேட்பதை அரசியல் காரணம் எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.”

``அதற்காக ஆளுநரைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வது சரியா?”

``தி.மு.க தலைவர் கொள்கைரீதியில் எதிர்த்தவர்களைக்கூட நண்பர்களாகத்தான் பார்ப்பார். ஆளுநருக்குக் கொள்கை இருக்கக் கூடாது என்கிறது சட்டம். ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் சுயமாக எதையும் செய்யக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் சொல்படி கேட்டு நடக்கக் கூடியவர்கள். முதல்வர், பிரதமர்மீது கூட வழக்கு தொடரலாம். ஆனால், ஆளுநர், குடியரசுத் தலைவர்கள்மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது. ஆளும் அரசின் பிரதிபலிப்பாக அவர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஆர்.என்.ரவி அப்படி இல்லாமல் சனாதனம், சாதி, மதம் குறித்துப் பேசுவது, அறிஞர்களை அவமரியாதை செய்வது, மத ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது எனச் செயல்படும்போது அதைத் தட்டிக்கேட்கிறோம். அதைக் கடுமையான விமர்சனம் எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்.”

சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் ஆளுநர்
சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் ஆளுநர்

``மத்திய அரசுமீது முரண்பட்டுவிட்டு உங்களுக்கு வேண்டுமெனும்போது அங்கே தஞ்சமடைவது சரியா?”

“ஆளுநர் மாளிகையைப் பூட்டுப்போட்டுப் பூட்ட முடியாது. ரவி நடந்துகொள்வதற்கு அரசியலமைப்பின்படிதான் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான உட்சபட்ச அதிகாரம் குடியரசுத் தலைவரிடம்தான் இருக்கிறது. ஆளுநரைக் கேள்வி கேட்கும் இடத்தில் குடியரசுத் தலைவர் மட்டுமே இருக்கிறார். சட்டரீதியில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நினைக்கிறோம். அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் குறித்துப் பேசவேண்டாம் எனச் சொல்லிவிட்டு, எங்கள் கட்சியின் பொருளாளர், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மூலம் ஆளுநரை மாற்றுங்கள் எனக் கோரிக்கை மனு கொடுக்கிறோம். பின்னாளில் சட்டரீதியில் அணுகும்போது எந்த இடையூறும் வரக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம்.”

``கடந்த காலத்தில் ஆளும் கட்சி எழுதிக் கொடுத்ததை ஆளுநர் வாசிக்கிறார் என நீங்கள் வெளிநடப்பு செய்தீர்களே, அதற்கு..?”

``ஆளுநர் உரைக்குத்தான் எதிர்ப்பு தெரிவித்தோமே தவிர ஆளுநருக்கு எதிராக நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை. அப்போது மட்டுமல்ல இப்போதும் ஆளுநருக்கு எதிராக இல்லை. மாநில உரிமைகள் மறுக்கப்படும்போது அதைத் தட்டிக்கேட்கிறோம். கடந்த காலங்களிலும் மாநில உரிமைக்கு எதிராக ஆளுநர் நடந்துகொண்டிருப்பாரானால் அப்போதும் முதல் ஆளாக அதைத் தி.மு.கதான் எதிர்த்திருக்கும். ரவி அவையை களங்கப்படுத்த வேண்டும் உள்நோக்கத்தோடு நடந்துகொண்டிருப்பதைப் பல்லிளித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார் எடப்பாடி. சமூகநீதி, மாநில உரிமை எப்படியாவது போகட்டும், உங்கள் வீட்டு முற்றத்தில் டீ குடிக்க ஒரு சேர் கொடுங்கள், அதில் பன்னீர்செல்வம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் போதும் என்றிருக்கிறார் எடப்பாடி.”

சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு!
சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு!

``சேது சமுத்திர திட்டத்தை இப்போது கையில் எடுத்திருப்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் நாடகமா?”

``சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டு மக்களின் கனவுத்திட்டம். முத்தமிழறிஞர் கலைஞர், வாஜ்பாய் காலத்திலேயே வலியுறுத்தி அதைக் கொண்டுவர முயன்றார். ஆனால், அது மனிதரால் கட்டப்பட்ட பாலம் என்ற கருத்துருவாக்கம் இருக்கிறது. அதை மறுத்து மீண்டும் கொண்டுவர முயல்கிறோம். தேர்தல் நேரத்தில் அதை நாங்கள் செய்தோம் எனச் சொல்லிக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?”

``சட்டப்பேரவையில் அ.தி.மு.க-வினரின் கோரிக்கையை ஏற்காமல் அவர்களை வைத்து அரசியல் நாடகம் ஆடுவதுபோல இருக்கிறதே?”

``மோடி நிர்வகிக்கும் ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையமே அவர்களை அங்கீகரிக்கவில்லை. அடுத்துவரும் தேர்தலில் அவர்களுக்குச் சின்னம் கிடைக்குமா இல்லையா என்பதே தெரியவில்லை. ஆரோக்கியமான, நல்ல திறனுடைய எதிர்க்கட்சியாக நடந்துகொள்ளுங்கள் என நாங்கள் அவர்களைப் பார்த்துக் கேட்கிறோம். அதெப்படி நாடகம் ஆகும்?”

எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்

``மத்திய அரசின் கடிதங்களில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என எடப்பாடியைக் குறிப்பிட்டிருக்கிறார்களே, அது அங்கீகாரம் தானே?”

``எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். ஒரு எஜமான் தன் அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன... அதுமட்டுமல்ல இவர்கள் கேட்கும் நாற்காலி விவகாரம் உயிர்போகும் பிரச்னை ஒன்றுமல்ல. சண்டையை முடித்துவிட்டுப் பார்க்கட்டும் என்றுதான் சொல்கிறோம்.”

``அ.தி.மு.க-வினரின் கருத்து மக்களிடம் சென்று சேராமல் இருக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கிறீர்களா?”

“மக்கள் மன்றத்துக்கு வர அச்சப்படும், கூச்சப்படும் இயக்கம் அ.தி.மு.க. சட்டப்பேரவையில் தாங்கள் பேச போதிய நேரம் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். அவர்களின் நாற்காலிச் சேர் அரசியலைப் பேசும் இடம் சட்டப்பேரவை இல்லை. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமைப்பு அ.தி.மு.க, அதன் அங்கமாக இருக்கும் பழனிசாமிக்கெல்லாம் எங்களைக் குறைசொல்ல எந்தத் தகுதியும் இல்லை.”

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்
அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

``அண்ணாமலைக்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்காகத்தானே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது?”

“பலரின் வீடியோ, ஆடியோவை அண்ணாமலை வைத்திருக்கிறார். தன்னுடைய வீடியோவை யாரும் எடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஒன்றிய அரசிடம் பேசி அந்தப் பாதுகாப்பை வாங்கியிருக்கிறார். நடிகை காயத்ரியின் மிரட்டலுக்காகக் கொடுக்கப்பட்டிருப்பதைப் பெரிதாக்கத் தேவையில்லை.”