Published:Updated:

கூட்டணிக்கு மூன்று தகுதிகள்... அண்ணாமலைக்கு இராஜீவ் காந்தி சொன்ன பதில்!

அண்ணாமலை - இராஜீவ் காந்தி

கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த மூன்று தகுதிகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் இராஜீவ் காந்தி பதிலளித்திருக்கிறார்.

கூட்டணிக்கு மூன்று தகுதிகள்... அண்ணாமலைக்கு இராஜீவ் காந்தி சொன்ன பதில்!

கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த மூன்று தகுதிகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் இராஜீவ் காந்தி பதிலளித்திருக்கிறார்.

Published:Updated:
அண்ணாமலை - இராஜீவ் காந்தி

``பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸோடு தி.மு.க குறைந்தபட்ச சமரசம்கூட செய்துகொள்ளாது” என்று திருமாவின் மணிவிழாவில் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``ஆர்.எஸ்.எஸ்-ஸோடு சமரசம் செய்துகொள்வதற்கோ, பாஜக-வுடன் கூட்டணி வைப்பதற்கோ குறைந்தபட்ச தகுதி வேண்டும். அந்தக் குறைந்தபட்ச தகுதி என்னவென்றால் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது. ஊழலற்ற அரசாங்கத்தைக் கொடுக்க வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி செய்வதற்கான ஆட்சியாக இருக்க வேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த மூன்றுமே தி.மு.க-வுக்கு இல்லாதபோது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு, குறைந்தபட்ச சமரசம் பற்றிப் பேசுவார்கள். அருகதை இல்லை என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

`அண்ணாமலையின் மூன்று தகுதிகள் குறித்த பேச்சுக்கு தி.மு.க-வின் பதிலென்ன?’ அக்கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினோம். ``செய்தியின் நாயகனாக உருவாக வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணாமலை. அதனால், அவரே கேள்வியை உண்டுபண்ணி, பதிலையும் சொல்கிறார். நல்ல அரசியல் படித்தால் சரியாகிவிடுவார்” என்றவர், தொடர்ந்து அண்ணாமலை குறிப்பிட்ட மூன்று தகுதிகளுக்குமான விளக்கத்தை அளித்தார்.

இராஜீவ் காந்தி, தி.மு.க
இராஜீவ் காந்தி, தி.மு.க

`குடும்ப ஆட்சியல்ல, கொள்கை ஆட்சி!’

``தி.மு.க-வில் இருப்பது குடும்ப ஆட்சியல்ல, கொள்கை ஆட்சிதான். கொள்கையைத்தான் குடும்பமாகப் பார்க்கிறோம். கலைஞர் குடும்பத்தில் எத்தனையோ பேர் இருந்தபோதிலும், திராவிடக் கொள்கை, சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் தலைவர் ஸ்டாலின் மட்டுமே நிலைத்து நிற்கிறார். அதே ஆற்றலுடன்தான் இன்று உதயநிதி அண்ணனும் வருகிறார். குடும்ப ஆட்சி என்றால், மக்கள் நிராகரித்திருப்பார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதியை மக்கள் வெல்ல வைத்தார்கள். பாஜக-விலும் தலைவர்களின், அமைச்சர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருகிறார்கள்தானே..?

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

உலகிலேயே பணக்காரக் கட்சி பா.ஜ.க-தான்!

ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு பா.ஜ.க-வுக்குத் தகுதியே இல்லை. அரசு தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று இருக்கிறது. அது 5ஜி சேவையைப் பெறுவதற்கு தகுதியே இல்லை என்ற நிலையில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த 5ஜி ஏலத்தில் கற்பனையாகப் பார்த்தால்கூட 3 லட்சத்து 80,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கும். ஆனால். `நாங்கள் வெரி க்ளீன் பார்ட்டி’ என்கிறார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.க-வின் அக்கவுன்ட் என்ன... இன்று உலகிலேயே பணக்காரக் கட்சி பா.ஜ.க-தான்.

இந்தப் பணமெல்லாம் சாதாரண மக்கள் கொடுத்த பணமா... டாட்டாவும், அதானியும், அம்பானியும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை வாங்கிக்கொண்டு கொடுத்த பணம்தானே... டெண்டரில் கமிஷன் பெறுவது ஊழல் என்று சொல்கிறார் அண்ணாமலை. அப்படிப் பார்த்தால், பெரு முதலாளிகளிடம் பணம் பெறுவதும் ஒருவகையில் ஊழல்தானே!

மோடி அமித்ஷா
மோடி அமித்ஷா

ராணுவத்தில் ஊழல் செய்த கட்சி பா.ஜ.க. ரஃபேல் விமானங்கள் பிரான்ஸுக்கு ஒரு விலை, சிங்கப்பூருக்கு ஒரு விலை, இந்தியாவுக்கு ஒரு விலை என்றால் இதுதான் ஊழல். பூட்டை உடைத்துக் கொள்ளையடிப்பது என்பதல்ல ஊழல். இங்கு 10 ரூபாய்க்கு விற்கும் பொருளை, கர்நாடகத்தில் 90 ரூபாய்க்கு விற்கிறேன் என்றால் அந்த அதீத லாபம்தான் ஊழல்.

பிற மாநிலங்களை ஒப்பிடவே முடியாது!

மக்களுக்கான நல்லாட்சி எது என்பது பற்றி வாருங்கள் பேசுவோம் என்று அண்ணாமலையை அழைக்கிறேன். இந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியைப்போல, பா.ஜ.க ஆளும் எந்த மாநிலத்தையாவது காட்ட முடியுமா... குஜராத்தைப் போன்று ஒரு குரூப் மட்டுமே வளரும் பொருளாதாரம் அல்ல இங்கு. எல்லோருக்குமான வளர்ச்சி. தமிழ்நாடு அரசு போன்ற ஒரு மாடல் அரசை வேறு எங்குமே காட்ட முடியாது.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

மத்திய அரசை சொல்லக் கூடாது, அது ஏற்கெனவே ஃபெயிலியரான மாடல். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80 ரூபாய்க்கு வந்துவிட்டது, பெட்ரோல் விலை நூறைத் தாண்டிவிட்டது, உலகத்தில் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் 116-ல் இருந்து 146-க்குச் சென்றுவிட்டோம். எல்லோருக்கும் வீடு என்று சொன்னார்கள். ஆனால், எல்லையில் சீனாக்காரன்தான் முழுக்க ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியிருக்கிறான். 15 லட்ச ரூபாய் போடுவேன் என்று சொல்லிவிட்டுப் போடவில்லை, இருந்த மானியத்தை நிறுத்திவிட்டனர்.

லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் பாருங்கள் என்று தமிழ்நாட்டை வெளிநாடுகளுடன் ஒப்பிடப்படுகிறதே தவிர, உத்தரப்பிரதேசத்தை, பீகாரை, குஜராத்தைப் பாருங்கள் என்று யாரும் பிற மாநிலங்களைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுவதில்லை. ஐ.பி.எஸ் படித்திருக்கும் அண்ணாமலை, குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களுக்குப் பாதையாத்திரை சென்றுவ்வந்தால் இப்படிப் பேச மாட்டார்!” என்று முடித்தார்.