Published:Updated:

`விடிய விடிய தர்ணா; தேநீர் எடுத்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவர்!’ - மறுத்த எம்.பி-க்கள்

தேநீர் எடுத்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவர்
தேநீர் எடுத்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவர்

``ஹரிவன்ஷ் ஜி, சக உறுப்பினராக எங்களைப் பார்க்க வந்ததாகவும் மாநிலங்களவை துணைத் தலைவராக வரவில்லை என்றும் கூறினார். எங்களுக்காகத் தேநீரும் ஸ்நாக்ஸ் வகைகளும் எடுத்து வந்தார்.

இந்தியாவில் எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவை
மாநிலங்களவை

இந்த மசோதாக்கள் தொடர்பான விவாதததின்போது எதிர்க்கட்சியினர், அவையின் மையப்பகுதிக்கு வந்து, அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தைக் கிழித்து வீசினர். இதனால் அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. `மாநிலங்களவையில் மத்திய பா.ஜ.க அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து, குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக’ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவையை நடத்திய துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனு அளித்தனர் எதிர்க்கட்சியினர்.

புதிய வேளாண் சட்டங்கள்... ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க எம்.பி! - விவசாயிகளுக்கு நன்மையா, தீமையா?

இந்த நிலையில் நேற்று காலை அவை கூடியதும், ஞாயிறு அன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்டது தொடர்பாக கடும் அதிருப்தி தெரிவித்தார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்களை ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

வெங்கய்ய நாயுடு
வெங்கய்ய நாயுடு

இந்த நிலையில் தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எட்டு எம்.பி-க்களும் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்கள் எட்டு பேரும் இரண்டாவது நாளாக இன்றும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், `மாநிலங்களவை விதிகளை மீறும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நடந்துகொண்டனர். இந்தச் சம்பவம் நடந்த நாள், நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான நாள்’ என்று கடுமையாகச் சாடினார்.

'சிஏஏ., முத்தலாக், வேளாண் சட்டங்கள்'... தொடரும் இரட்டை நிலைப்பாடு-அ.தி.மு.க-வின் அரசியல் தந்திரமா?

இன்று இரண்டாம் நாள் போராட்டத்தில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்தார். போராட்டத்தில் ஈபட்டிருக்கும் உறுப்பினர்களுக்கு அதை வழங்குவதற்காகக் கொண்டு வந்தார். ஆனால் அவர் கொண்டு வந்த தேநீரை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எம்.பிக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ரிபன் போரா, ``ஹரிவன்ஷ் ஜி, சக உறுப்பினராக எங்களைப் பார்க்க வந்ததாகவும், மாநிலங்களவை துணைத் தலைவராக வரவில்லை எனவும் தெரிவித்தார். எங்களுக்காகத் தேநீரும் ஸ்நாக்ஸ் வகைகளும் எடுத்து வந்தார். நாங்கள் எங்கள் இடைநீக்கத்துக்கு எதிராகப் போராடிவருகிறோம். இரவு முழுவதும் இங்கேயேதான் இருந்தோம். அரசுத் தரப்பிலிருந்து யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்து பேசினார்கள். இந்தப் போராட்டத்தை நாங்கள் தொடரப் போகிறோம்” என்றார்.

இந்தநிலையில் மசோதா நிறைவேற்றத்தின்போது எம்.பி-க்கள் தன்னை அவமதித்ததாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஹரிவன்ஷ். மேலும், ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு