Published:Updated:

நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... மீண்டும் தொடங்கிய எடப்பாடி, பன்னீர் யுத்தம்!

எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வராது என்கிற எண்ணம் பல சீனியர்களிடம் உள்ளது. எனவே, இப்போதுள்ள ராஜ்யசபா சீட்டை வாங்கி, சத்தமில்லாமல் அடுத்த சில ஆண்டுகள் பவரில் இருந்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. அடுத்தகட்டமாக, இரண்டு கழகங்களிலும் சீட் வாங்கும் யுத்தம் தொடங்கிவிட்டது. இரட்டைத் தலைமையில் இயங்கும் அ.தி.மு.க-வில், இந்த சீட்பேரம் உச்சத்தில் இருப்பதாகப் புலம்புகிறார்கள், அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

2019-ம் ஆண்டு ஜீலை மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க இரண்டு இடங்களிலும், தனது கூட்டணிக் கட்சியான பா.ம.க-வுக்கு ஓர் இடத்தையும் விட்டுக்கொடுத்தது. மே மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பே பா.ம.க-வுடன் நடந்த கூட்டணி ஒப்பந்தப்படி ஓர் இடத்தை அப்போது விட்டுக்கொடுத்தது. இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு நோ சீட் என்பதில் உறுதியாக இருக்கிறது அ.தி.மு.க. ஆனால் பிரேமலதாவோ, சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

ராஜ்யசபா தேர்தலில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது...
ராஜ்யசபா தேர்தலில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது...

ராஜ்யசபாவில் 55 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது. தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்வுகள் மூலம் இந்த இடங்களுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் டி.கே.ரங்கராஜன், சசிகலா புஷ்பா, செல்வராஜ், விஜிலா சந்தியானந்த் ஆகிய நால்வருக்கும், தி.மு.க சார்பில் திருச்சி சிவா, முத்துக்கருப்பன் உள்ளிட்ட ஆறுபேரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

ஜெயலலிதா இருந்தவரை ராஜ்யசபா வாய்ப்பு என்பது அ.தி.மு.க வில் அதிரடியாகவே இருக்கும். யாருக்கு வாய்ப்பு என்பதை யூகிக்க முடியாத நிலையே இருந்தது. கட்சியில் அறிமுகமே இல்லாதவர்களுக்குக்கூட ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இறுதியாக எடப்பாடி முதல்வரான பிறகு, கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது சீட்டைப் பிடிக்க பலரும் முயன்றார்கள். கட்சிக்குள் பலரும் சீட்டு கேட்டதால், இரட்டைத் தலைமைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. இரண்டு சீட்டை முடிவுசெய்ய 20 நாள்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். கடந்த முறை, பன்னீர் தன்னுடைய ஆதரவாளர் ஒருவருக்கு ஒரு சீட்டையும், எடப்பாடி சார்பில் ஒரு சீட்டையும் பிரித்துக்கொள்ளத் திட்டமிட்டார்.

அ.தி.மு.க-நிர்வாகிகள்
அ.தி.மு.க-நிர்வாகிகள்
சாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க? - ஒரு விரிவான அலசல்!

எடப்பாடியோ, இரண்டு இடங்களையும் தன்வசம் வைத்துக்கொண்டார். தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்கும், சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் முகமது ஜானுக்கும் வழங்கினார். அப்போதே பன்னீர் தரப்பினர் அப்செட்டில் இருந்தார்கள். குறிப்பாக, பன்னீர் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. கடைசி நேரத்தில் முதல்வர் கை ஓங்கியதில் பன்னீர் அப்செட்டில் இருந்தார். இப்போது, ஆறு இடங்களுக்கான உறுப்பினர் தேர்தலுக்கு, வரும் மார்ச் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், அ.தி.மு.க சார்பில் மூன்று உறுப்பினர்களைத் தேர்வுசெய்யலாம். இந்த முறை, மூன்று உறுப்பினர்களைத் தேர்வு செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தான் இருந்தும், தனது ஆதரவாளர்களுக்கு ஒன்றும் செய்யமுடியாமல் திண்டாடி வருகிறார் பன்னீர். நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெரிதாகத் தனது ஆதரவாளர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. பன்னீர் அணியில் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் இப்போது சோர்வடைந்துவிட்டார்கள். பன்னீரால் பலன் இல்லை என்று பலர் எடப்பாடி பக்கம் தாவிவிட்டார்கள்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

இந்நிலையில், பன்னீர் பின்னால் அணிவகுத்த சில மூத்த நிர்வாகிகள், இப்போது அவருக்கு நெருக்கடிகொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இப்போது ராஜ்யசபா சீட்டுக்கு முட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மற்றொருபுறம், சீனியர் என்கிற அடிப்படையில் தம்பிதுரை எடப்பாடியிடமே எனக்கு ஒரு சீட் வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

ஏற்கெனவே, இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டதால், இந்த முறை கிறுஸ்தவ சமூகத்தின் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதை, தனக்கு வாங்கி தரவேண்டும் என்று மனோஜ்பாண்டியன் பன்னீரை பதறவிடுகிறார். “நாடார் சமூகம் கிறுஸ்தவ மதம்... கட்சியின் சின்னத்தை மீட்டதில் தன் பங்கு உள்ளது” என்று தனக்கான வாதங்களை முன்வைக்கிறார். அதேபோல், பன்னீர் அணியிலிருந்த கே.பி.முனுசாமி, “ஒருங்கிணைப்பாளர்களில் எல்லோரும் பதவியில் இருக்கீங்க. நான் மட்டும் கட்சிப் பதவியில் இருக்கேன். எனக்கு எம்.பி பதவி கொடுத்துவிட வேண்டும்” என்று கச்சைகட்டிவருகிறார்.

 நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

இந்த அழுத்தங்களால், பன்னீர் தரப்பு கடும் நெருக்கடியில் உள்ளது. அதேநேரம், எடப்பாடி தெளிவாக இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு கொடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று முடிவு எடுத்துள்ளார். மீதி உள்ள இரண்டு இடங்களில் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளர் ஒருவருக்கும், ஓர் இடத்தை பன்னீர் செல்வத்தின் தரப்புக்கும் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பன்னீர்செல்வம் சொல்லும் நபரை நிறுத்திக்கொள்ள கிரீன் சிக்னல் காட்டும் மூடில் இருக்கிறார். ஆனால், பன்னீர் தரப்பில்தான் அதற்கு பலத்த போட்டியுள்ளது. மற்றொருபுறம், ஜெயலலிதா இருந்த வரை பன்னீருக்கு அடுத்த நிலையில் இருந்த நத்தம் விஸ்வநாதன், தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார். சீனியரான அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பினால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சீனியர்களைக் களத்தில் இறக்க, திண்டாட்டம் ஆகிவிடும் என்று எண்ணுகிறது கட்சித் தலைமை.

இறுதி ஆண்டில் எடப்பாடி ஆட்சி...
அ.தி.மு.க நிர்வாகிகள்
அ.தி.மு.க நிர்வாகிகள்

“அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வராது என்கிற எண்ணம் பல சீனியர்களிடம் உள்ளது. எனவே, இப்போதுள்ள ராஜ்யசபா சீட்டை வாங்கி, சத்தமில்லாமல் அடுத்த சில ஆண்டுகள் பவரில் இருந்துவிட்டுப் போகலாம்“ என்கிற நினைப்பில் பலரும் இருக்கிறார்கள். இந்த யுக்தியை எடப்பாடியும் தெரிந்துவைத்திருக்கிறார். அதனால் புதியவர்களுக்கு வாய்ப்பளித்துவிட்டு, சீனியர்களை சட்டமன்றத் தேர்தல் களத்தில் நிறுத்திவிடலாம் என்று எண்ணுகிறார்” என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். அடுத்த வாரம், அ.தி.மு.க-வில் ராஜ்யசபா ரணகளம் ஆரம்பிக்கப்போகிறது!

அடுத்த கட்டுரைக்கு