Published:Updated:

`நெருக்கும் தே.மு.தி.க-பா.ஜ.க; அழுத்தம் கொடுக்கும் உதயநிதி!'- யார் யாருக்கு ராஜ்ய சபா எம்.பி சீட்?

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

"ராஜ்ய சபா சீட் கொடுத்தால்தான் அ.தி.மு.க-வோடு வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கப்படும் என்று மறைமுக மிரட்டலில் ஈடுபடுகிறார்கள்."

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது. இப்பதவிகளைப் பெறுவதற்காக தி.மு.க, அ.தி.மு.க-வில் உள்ள நிர்வாகிகள் போட்டிப் போட்டுக்கொண்டு கட்சித்தலைமையை நாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தே.மு.தி.க ஒரு படி மேலே போய் அ.தி.மு.க-விடம் சீட் கேட்டு நெருக்கடிகொடுக்கும் படலத்தை ஆரம்பித்திருப்பதாகக் கோட்டை வட்டாரத்தினர் புகார் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ராஜ்ய சபா தேர்தல்
ராஜ்ய சபா தேர்தல்

தி.மு.க, அ.தி.மு.க-வில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறது. தே.மு.தி.க அப்படி என்ன நெருக்கடியை ஆளும் கட்சிக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று விசாரிக்கத் தொடங்கினோம். ``நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 55 ராஜ்ய சபா எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த திருச்சி சிவா, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், சசிகலா புஷ்பா (தற்போது பா.ஜ.க), விஜிலா சத்தியானந்த், மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் இந்த இடங்களுக்கு வரும் மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் தலா மூன்று இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது. தற்போது தி.மு.க-வில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். காரணம் டெல்லி லாபியில் இவரைத்தவிர விவரம் தெரிந்தவர் யாரும் இல்லை என்றும் தி.மு.க தலைமை நம்புகிறது. அத்தோடு ஸ்டாலின் குட் புக்கில் இடம் பெற்றிருக்கிறார். அதனால் இவருக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும் இரண்டு பதவிகளுக்கான போட்டியில் என்.ஆர்.இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முகமது அலி ஜின்னா போன்ற முன்னணி தலைவர்கள் இந்த ரேஸில் இருக்கிறார்கள். இதுபோக உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியிலிருந்து ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று தலைமையை நாடிக்கொண்டிருக்கிறாராம். இளைஞரணிக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் கட்சியைப் பலப்படுத்த முடியும் என்ற ஸ்டாராங்கான வார்த்தைகளைத் தலைமையிடம் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறாராம். இவர்கள் தவிர தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தரப்பில் ஒரு இடத்தை விட்டுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாக சொல்கிறார்கள்.

அ.தி.மு.க சார்பில் எம்.பி-யாக இருந்த சசிகலா புஷ்பா இப்போது பா.ஜ.க-வுக்குத் தாவிவிட்டார். தற்போது தம்பிதுரை, கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா என மூவரும் எடப்பாடியிடம் சீட் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதே போல் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க, தே.மு.தி.க இருவரும் ஒரு இடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படி தே.மு.தி.க-வுக்கு ஓர் இடம் கிடைத்தால் பிரேமலதா ராஜ்ய சபா எம்.பி-யாகும் கனவில் இருக்கிறாராம். இதற்காக அவர்களும் தங்களால் முடிந்த நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார்கள்" என்றவர்களிடம்,

பிரேமலதா
பிரேமலதா

அ.தி.மு.க-வுக்கு தே.மு.தி.க என்ன விதமான நெருக்கடிகளைக் கொடுக்கிறது என்று அ.தி.மு.க வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். "ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெறுவதற்காக தே.மு.தி.க ஆளுங்கட்சியினருக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. `உள்ளாட்சித்தேர்தலின் போது அ.தி.மு.க அரசு செய்த உள்ளடி வேளைகளால் எங்களது தொண்டர்கள் கடுமையாக வருத்தத்தில் இருக்கிறார்கள். இதைத் தலைமைதான் கண்டிக்க வேண்டும்' என்று தே.மு.திக நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க அரசை எதிர்த்து விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.

அத்தோடு பிரேமலதாவும் `நாங்கள் குட்ட குட்ட குனிய மாட்டோம் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு என்றதோடு கூட்டணிக்கு நாங்கள் மரியாதை கொடுக்கிறோம்' என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்தார். தொடர்ந்து இது போன்று வார்த்தை விளையாட்டுகளால் கடுமையாக அ.தி.மு.க அரசை எதிர்த்துக்கொண்டிருக்கிறது தே.மு.தி.க. "ராஜ்ய சபா சீட் கொடுத்தால்தான் அ.தி.மு.க-வோடு வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கப்படும் என்று மறைமுக மிரட்டலில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு