Published:Updated:

ராம நவமி, அனுமன் ஜயந்தி ஊர்வலங்களில் வன்முறைகள்: மலியும் மதக் கலவரங்களின் பின்னணி என்ன?

அனுமன் ஜயந்தி ஊர்வலத்தில் கலவரம் ( ட்விட்டர் )

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த ராம நவமி, அனுமன் ஜயந்தி ஊர்வலங்கள் வன்முறையில் முடிந்திருக்கின்றன. இதனால், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் போன்ற வட மாநிலங்களில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.

ராம நவமி, அனுமன் ஜயந்தி ஊர்வலங்களில் வன்முறைகள்: மலியும் மதக் கலவரங்களின் பின்னணி என்ன?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த ராம நவமி, அனுமன் ஜயந்தி ஊர்வலங்கள் வன்முறையில் முடிந்திருக்கின்றன. இதனால், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் போன்ற வட மாநிலங்களில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.

Published:Updated:
அனுமன் ஜயந்தி ஊர்வலத்தில் கலவரம் ( ட்விட்டர் )

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக நடந்த ராம நவமி, அனுமன் ஜயந்தி ஊர்வலங்கள் வன்முறையில் முடிந்திருக்கின்றன. இதனால், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. ஊர்வலம் மசூதிகள் இருக்கும் பகுதிகள் வழியே செல்லும்போது இஸ்லாமியர்கள்தான் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள் என இந்துத்துவா தரப்பினரும், ஊர்வலமாக வந்தவர்கள் மசூதிப் பகுதிகளை நெருங்கியவுடன் இஸ்லாமியர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் மசூதிகளில் காவிக்கொடி ஏற்றி சேதப்படுத்தியதும்தான் கலவரத்தைத் தூண்டினார்கள் என இஸ்லாமியர்கள் தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிவருகின்றனர்.

வீடுகள் இடிப்பு
வீடுகள் இடிப்பு
ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராம நவமி:

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் ஊர்வலங்கள் நடத்தினர். இந்த ஊர்வலத்தின்போது பல்வேறு மாநிலங்களில் இந்துக்கள்- இஸ்லாமியர்கள் இடையே மோதல் வெடித்தது. குறிப்பாக, மத்தியப்பிரதேசத்தில் கர்கோன் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான பொதுச் சொத்துகள் சேதமடைந்தன. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, சிறுவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு மாநில பா.ஜ.க அரசு இடித்து அகற்றியது. பின்னர் ஆக்கிரமிப்புதான் அகற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதேபோல, பீகார் மாநிலத்திலும் ராம நவமி ஊர்வலத்தின்போது, முசாபர்பூர் பகுதி மசூதி கோபுரத்தின்மீது இந்து அமைப்பினர் காவிக்கொடி ஏற்றிய சம்பவத்தில் வன்முறை ஏற்பட்டது. ஏராளமான வீடுகள், கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்தக் கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, இரண்டு பேர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்தகா பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 12 பேர் காயம் அடைந்ததோடு, ஒருவர் உயிரிழந்தார். இதுதவிர, மும்பை மன்குர்த் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் ஏழு பேர் கைது, குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள், மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் சிவ்பூர் பகுதியில் மோதல், டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல்கள் எனப் பல்வேறு மாநிலங்களில் பலவிதமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

அனுமன் ஜெயந்தி ஊர்வலம்
அனுமன் ஜெயந்தி ஊர்வலம்

அனுமன் ஜயந்தி:

அதேபோல, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட அனுமன் ஜயந்தி ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது. குறிப்பாக, டெல்லியிலுள்ள ஜஹாங்கிர்புரி எனும் இடத்தில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது இந்து-இஸ்லாமியர்கள் இடையே வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் கற்களாலும் கட்டைகளாலும் தாக்கிக்கொண்டனர். கலவரத்தைத் தடுக்க முயன்ற காவல்துறையினரும் பலத்த காயமடைந்தனர். மேலும், இந்தக் கலவரத்தில் துப்பாக்கிகளும் பிரயோகிக்கப்பட்டன. இந்தக் கலவரம் தொடர்பாக 23 பேர் கைதுசெய்யப்பட்டனர். உ.பி., ம.பி., டெல்லி போன்ற வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவிலும் அனுமன் ஜயந்தி அன்று கலவரங்கள் மூண்டன.

ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை
ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை
ட்விட்டர்

கலவரத்துக்கு யார் காரணம்?

தற்போது, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், கலவரச் சம்பவங்கள் தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``இஸ்லாமியர்களிடம் சகிப்புத்தன்மை இல்லாமல் போனதுதான் முதன்மைக் காரணம். இந்துக்களின் ஊர்வலமோ, திருவிழாக்கால சாமி ஊர்வலமோ எதுவாக இருந்தாலும் மசூதி இருக்கும் தெருக்கள் வழியாக செல்லக் கூடாது என இஸ்லாமியர்கள் நிர்பந்தித்துவருகின்றனர். வடமாநிலங்களில் மட்டுமல்ல... தமிழகத்திலும்கூட சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் மசூதி வழியாக, சாமி ஊர்வலம் செல்வதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காவல்துறையினரும் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிக்குள் ஊர்வலம் நடத்த வேண்டாம், கலவரம் வெடிக்கும் என அறிவுரை வழங்குகின்றனர்.

இதன் மூலம் யார் கலவரத்தைத் தொடங்கிவைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆக, ராம நவமி, அனுமன் ஜயந்தி ஊர்வலங்களின்போது இந்துக்கள் மசூதிகளில் காவிக்கொடி ஏற்றினார்கள், வன்முறையைத் தூண்டினார்கள் என்று சொல்வதெல்லாம் ஏற்புடையதல்ல. முதலில் இஸ்லாமியர்கள், பெரும்பான்மை இந்துக்களுடன் சேர்ந்து வாழ முன்வர வேண்டும். பெரும்பான்மையினராக இந்துக்களின் ஊர்வலத்துக்கு சிறுபான்மை இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகத்துக்கே எதிரானது" எனத் தெரிவித்தார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து த.பெ.தி.க பொதுச்செயலார் கு.ராமகிருட்டிணனிடம் பேசினோம். ``மதவெறி அரசியலையும், இஸ்லாமிய வெறுப்பு அரசியலையுமே கொள்கையாக வைத்து பா.ஜ.க செயல்பட்டுவருகிறது. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து, ராமர் அரசியலைக் கையிலெடுத்த பா.ஜ.க அதில் வெற்றிபெற்று, ஆட்சியையும் பிடித்துவிட்டது. தங்களின் நீதிமன்றத்தால் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று தற்போது அந்த இடத்தில் ராமர் கோயிலையும் கட்டிவருகிறது. அதனால், திரும்ப ராமரையே தங்களின் அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, நடந்து முடிந்த உத்தரப்பிரதேசத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றபோதிலும், முன்பு தனக்கிருந்த எண்ணிக்கை, செல்வாக்கை கணிசமாக இழந்திருக்கிறது. இது, 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பா.ஜ.க அஞ்சுகிறது. எனவே, தனது அடுத்தகட்ட அரசியலுக்காக அனுமனையும் இப்போது கையிலெடுத்திருக்கிறது. பா.ஜ.க-வால் திட்டமிட்டு, நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த ஊர்வலத்தின் நோக்கமே, மதக் கலவரத்தை ஏற்படுத்தி, அதில் அரசியல் செய்து, தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்துகொள்வதற்காகத்தான்!" என்றார்.

கு.ராமகிருட்டிணன்
கு.ராமகிருட்டிணன்

மேலும், ``தமிழகத்தில் பத்து லட்சம் மக்கள் கலந்துகொண்ட மதுரை கள்ளழகர் திருவிழாவில் ஏற்படாத கலவரம், ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் கலந்துகொள்ளும் ராம நவமி, அனுமன் ஜயந்தி ஊர்வலத்தில் நடைபெறுகிறதென்றால் அதற்கு யார் காரணம்? கோவையில் இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் கொலைச் சம்பவத்தின்போது ஊர்வலம் நடத்திய பா.ஜ.க., இந்துத்துவ கூட்டத்தினர் இஸ்லாமியர்களின் வீடுகள்மீது கற்களை வீசியும், கடைகளை அடித்தும் நொறுக்கினார்கள். இதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட இஸ்லாமியர்கள், பெரிய கலவரம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகவும் அமைதியாக, சகிப்புத்தன்மையோடு நடந்துகொண்டனர். அதேபோல, வடமாநிலங்களில் ஊர்வலம் எனும் பெயரில் மசூதியை நெருங்கியவுடன் வேண்டுமென்றே இஸ்லாமியர்களை ஆத்திரப்படுத்தும்விதமாக கோஷங்கள் எழுப்பியும், உடைமைகளைச் சேதப்படுத்தியும் கலவரத்தைத் தூண்டிவிடுகின்றனர். இஸ்லாமியர்களின் கோபம் அவர்களுக்கு லாபம்! அதுதான் அவர்களுக்கு வேண்டும். அதைவைத்துத்தான் வெறுப்பரசியல் செய்து, தேர்தலில் வெற்றிபெற முயல்கிறார்கள்!" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism