Published:Updated:

`டெல்லியில் தமிழர்களுக்காக ஒலித்த குரல்!’ - ராம்விலாஸ் பஸ்வானின் அரசியல் பாதை #RIP

ராம்விலாஸ் பஸ்வான், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று கின்னஸ் சாதனை படைத்தவர். பல்லாண்டு காலம் மத்திய அமைச்சர், ஆறு பிரதமர்களுடன் பணியாற்றியவர் எனும் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழர்களுக்காக ஒலித்த ஒரு சில வடஇந்தியத் தலைவர்களின் குரல்களில் மிக முக்கியமான குரலுக்குச் சொந்தக்காரரான ராம்விலாஸ் பஸ்வான், இன்று நம்மோடு இல்லை. உடல்நலக் குறைபாடு காரணமாக டெல்லி மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினர், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று கின்னஸ் சாதனை படைத்தவர், பல்லாண்டுகாலம் மத்திய அமைச்சர், ஆறு பிரதமர்களுடன் பணியாற்றியவர் எனும் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான ராம்விலாஸ் பஸ்வானின் அரசியல் பயணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ராம்விலாஸ் பஸ்வான்
ராம்விலாஸ் பஸ்வான்

பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்திலுள்ள சஹார்பானி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். எம்.ஏ., பி.எல் படிப்பை முடித்த பஸ்வானுக்கு, 1968-ம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் பணி கிடைத்தது. அப்போது கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது அவர் ஆற்றிய பணி, அவரை பொதுவாழ்க்கையின் பக்கம் திருப்பியது. முதன்முதலாக தனது 23 வயதில் சம்யுக்த சோஷலிசக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, 1969-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் பஸ்வான். 1974- ம் ஆண்டு லோக்தளம் கட்சி உருவானபோது, அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலைப் பிரகடனத்தை எதிர்த்து 15 மாதங்கள் சிறை சென்றார். வெளியில் வந்தவுடன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான ஜனதா தளம் சார்பில், ஹாஜிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 4.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். `உலகிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்’ என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியிலிருந்து 1980, 1984, 1989, 1996 மற்றும் 1998 ஆகிய ஐந்து முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2000-ம் ஆண்டில் ஜனதா தளத்திலிருந்து விலகி, லோக் ஜனசக்தி என்கிற கட்சியைத் தொடங்கினார்.

ஜெயபிரகாஷ் நாராயண்
ஜெயபிரகாஷ் நாராயண்

அதைத் தொடர்ந்து, நடந்த 2004 மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். தன் 33 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில், முதன்முறையாக 2009-ம் ஆண்டு ஹாஜீப்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார் ராம்விலாஸ் பஸ்வான். ஆனால், 2010-ல் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2014 -ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், மத்திய அமைச்சராகவும் சாதித்தவர் ராம்விலாஸ் பஸ்வான். வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் மோடி என ஆறு பிரதமர்களுடன் பணியாற்றியவர். முதன்முதலில் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து 1996-ம் ஆண்டு, தேவகவுடா தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சரானார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர். மோடி தலைமையிலான அமைச்சரவையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராகப் பணியாற்றிவந்தார். இந்தநிலையில்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் சில வாரங்கள் கழித்து மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை நடைபெறும் என அவருடைய மகன் சிராக் பஸ்வான் கூறியிருந்தார். இந்தநிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்தத் தகவலை அவரது மகன் சிராக் பஸ்வான், தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

வி.பி.சிங்
வி.பி.சிங்

ராம்விலாஸ் பஸ்வானுக்கு நல்ல மனிதர், ஏழை எளிய மக்களின் பால் மிகுந்த அன்பு கொண்டவர், சமூக நீதி சிந்தனையாளர் என தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு உண்டு. யாருடன் கூட்டணி வைத்தாலும், தன் கொள்கை, கோட்பாடுகளில் சிறிதளவும் பின் வாங்காதவர் எனத் தொண்டர்கள் மத்தியில் பெயரெடுத்தவர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையாக உரையாற்றினார். `நீங்கள் பா.ஜ.க கூட்டணியில்தான் அமைச்சராக இருக்கிறீர்கள்’ என பிரமோத் மகாஜன் எச்சரிக்கும்விதத்தில் பேச, ``நான் உங்கள் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறேனே தவிர, எனது கருத்தையும், எனது கொள்கையையும் உங்களிடம் விற்றுவிடவில்லை. பதவி முக்கியமா... மக்கள் முக்கியமா என்றால், எனக்கு இந்த நாட்டுமக்களின் நலன் மட்டும்தான் முக்கியம்’ என்று பதிலடி கொடுத்தவர் ராம்விலாஸ் பஸ்வான். அதேபோல, ஒடிசாவில், பாதிரியார் ஒருவர் குடும்பத்தோடு எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கூட்டணியிலிருந்து வெளியேறினார் பஸ்வான். அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ், முரசொலி மாறன் போன்றவர்கள் தடுத்தும், தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல், பா.ஜ.க-வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். ஆனால், கடைசிக்காலத்தில் அவர் பா.ஜ.க-வுடன் சமரசம் செய்துகொண்டதாகவும் அவர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.

பீகார்: 'பரபரப்பு நிலவரமும், பதறவைக்கும் சம்பவங்களும்' - எப்படியிருக்கிறது தேர்தல் களம்?

அதேநேரத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக அவர் கடைசிவரை திகழ்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முக்கியமான காரணகர்த்தாவாக இருந்தார். அதோடு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காக மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்த பஸ்வான் எடுத்த முயற்சிகள் போற்றத்தக்கவை.

தமிழகத்தில் நடந்த சாதி ஒழிப்பு மாநாடுகளில் பலமுறை கலந்துகொண்டவர் பஸ்வான். 1994-ம் ஆண்டு, அக்டோபர் 4-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் காரணையில் பிற சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த 633 ஏக்கர் பஞ்சமி நிலத்தை, 300 பட்டியலினக் குடும்பங்களுக்கு மீட்டுக் கொடுக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டார் பஸ்வான். தமிழகத்தில் நடந்த ஈழ ஆதரவுப் போராட்டங்களிலும் மாநாடுகளிலும் அதிக அளவில் கலந்துகொண்டவர். நாடாளுமன்றத்திலும் ஈழத் தமிழர்களுக்காக அவர் குரல் ஒலித்திருக்கிறது.

பஸ்வான் ஈழப்பேரணியில்
பஸ்வான் ஈழப்பேரணியில்

பஸ்வானின் மறைவு தேசிய அளவில் மட்டுமல்லாமல், தமிழகத்துக்கும் பேரிழப்பே. பஸ்வானின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு