Published:Updated:

`ரஜினி குறித்த கேள்வி; நழுவிய ராமதாஸ்!' -பா.ம.க, தே.மு.தி.க-வைத் தயார்படுத்துகிறதா டெல்லி?

ரஜினி - மோடி
ரஜினி - மோடி

`கட்சியே ஆரம்பிக்காத ஒருவருடன் பா.ம.க கூட்டணி சேரும் என்று சொல்லும்போதே மருத்துவர் ராமதாஸ் ஆவேசப்பட்டிருக்க வேண்டாமா?'

அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் தொடர்ந்து ஆளும்கட்சியை விமர்சனம் செய்து வருகின்றன. இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதோடு, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ரஜினியை மையப்படுத்தி கூட்டணி அமைக்கும் வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

அழகிரியுடன் ரஜினி
அழகிரியுடன் ரஜினி

ஆண்டுதோறும் பா.ம.க சார்பில் நிழல் நிதி அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடப்பது வழக்கம். அந்த வரிசையில், 2020-21-ம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி தி.நகரில் உள்ள பா.ம.க தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

பா.ம.க நிதிநிலை அறிக்கை
பா.ம.க நிதிநிலை அறிக்கை

``பா.ம.க ஒவ்வொரு ஆண்டும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கையின் மையக் கரு வேளாண்மை, தோட்டக்கலை சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுதான். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்பது அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கும்போது, வைக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. இதற்காகப் போராடியவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறவேண்டும் என்று சொல்லியிருந்தோம். அதன் பெயரில் ஒவ்வொன்றாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கப் பல திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது" என்றவர், ``ஆளும் கட்சி, எதிர்க்கட்சி செய்யவேண்டிய வேலைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

ஹெச்.ராஜா, பொன்னார்
ஹெச்.ராஜா, பொன்னார்

அதைத்தொடர்ந்து, `ரஜினியோடு பா.ம.க கூட்டணி சேரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் தமிழருவி மணியன் கூறியுள்ளாரே?' என்று பத்திரிகையாளர்கள் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ``இன்னும் தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்கிய பின், எங்களுடைய கருத்தைச் சொல்கிறேன். அவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் தற்போதைக்குத் தொடங்கவில்லை.

பிரேமலதா
பிரேமலதா
என்.ஜி.மணிகண்டன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க ஆட்சியைப் பிடிக்கும் என்று நான் சொல்லியிருக்கிறேன். அதற்காகத் தொண்டர்களைக் கடுமையாக உழைக்க அறிவுறுத்தியுள்ளேன்"என்று சொல்லிக் கூட்டத்தை நிறைவு செய்தார்.

`32 வருஷம்; 80 சீட்டுகள்; 2021-ல் ஆட்சி!' -பா.ம.க கூட்டத்தில் கணக்குப் போட்ட ராமதாஸ்

ராமதாஸின் பேட்டி தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், `` சமீபகாலமாகவே அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் கடுமையாக ஆளும் கட்சியை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். பொன்னார், வானதி சீனிவாசன், நரேந்திரன் உள்ளிட்டோர் தமிழக அரசை விமர்சனம் செய்து பேசினர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அதைத் தொடர்ந்து பா.ம.க-வும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களை எதிர்த்துத் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அறிவித்தார்கள். `நம்மை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுவிட்டது, எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்' எனக் கூறி செங்கோட்டையன் மூலமாக இப்பிரச்னைக்குத் தீர்வுகண்டது, ஆளும்கட்சி.

அதேபோல் தே.மு.தி.க தரப்பிலும், ``நாங்கள் குட்டக்குட்ட குனிய மாட்டோம். எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு" என்று அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் பிரேமலதா. இந்த மூன்று கட்சிகளும் இத்தனை நாள்கள் இல்லாமல் இப்போது அ.தி.மு.க அரசைப் பகிரங்கமாக விமர்சனம் செய்யவும் காரணம் உண்டு" என விவரித்தவர்கள்,

ரஜினி - மோடி
ரஜினி - மோடி

`` வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ரஜினியை மையப்படுத்தி பா.ம.க, தே.மு.திக, பா.ஜ.க போன்ற கட்சிகளை ஒன்றிணைத்துத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று டெல்லி வட்டாரம் முடிவு செய்து காய்நகர்த்தி வருகிறதாம். அவர்கள் போட்டுக்கொடுக்கும் பிளான்படியே இக்கட்சிகள் நடந்துகொள்வதாகவும் சொல்கிறார்கள். அதன் முன்னோட்டமாகத்தான் ரஜினி பிறந்தநாளன்று அன்புமணியை போனில் பேசி வாழ்த்துகளைச் சொல்ல வைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தமிழருவி மணியனும், `கண்டிப்பாக ரஜினியோடு பா.ம.க அணி சேரும்' என்று சொல்லியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், கட்சியே ஆரம்பிக்காத ஒருவருடன் பா.ம.க கூட்டணி சேரும் என்று சொல்லும்போதே மருத்துவர் ராமதாஸ் ஆவேசப்பட்டிருக்க வேண்டாமா.. ஆனால் பெரிதாக எதிர்ப்புகளைக் காட்டாமல், `அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். பிறகு எங்களுடைய கருத்துகளைச் சொல்கிறோம்' என்று பட்டும்படாமலும் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். பா.ஜ.க-வின் செயல்திட்டம் இனி மெல்ல மெல்ல அரங்கேறும்" என்கின்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு