Published:Updated:

`அப்போது உங்க ஆட்சிதான் நடந்தது!'- ஸ்டாலினுக்கு 2008-ஐ ராமதாஸ் சுட்டிக்காட்டுவது ஏன்?

சகாயராஜ் மு

தமிழ்நாட்டுக்குள் தேசியப் புலனாய்வு முகமை நுழைவதற்கு தடம் அமைத்துக் கொடுத்தது யார்? தி.மு.க தானே... அதை மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

"பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலனாய்வு முகமையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதை தி.மு.க. கண்டிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடம் போடுவதற்கு எடுத்துக்காட்டு இதுதான் என்று கூறும் அளவுக்குதான் ஸ்டாலினின் கருத்து அமைந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் சட்டங்களும், அவற்றின் மூலம் அமைக்கப்பட்ட அமைப்புகளும் பல தருணங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், அரசியல் பழிவாங்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் எவரும் மறுக்க முடியாது. ஆனால், அத்தகைய சட்டங்களும், அமைப்புகளும் உருவாக்கப்படுவதற்கும், அதில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்தவர்களே, அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்வதுதான் சந்தர்ப்பவாத அரசியலின் சிகரம்" என்று குற்றம்சாட்டியுள்ள ராமதாஸ்,

Vikatan

‘‘தமிழகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கென எனத் தனியாக ஒரு பிரிவு டி.ஜி.பி அலுவலகத்தில் செயல்படுகிறது. அதற்கு டி.ஐ.ஜி தலைமையில் ஒரு தனி அதிகாரியும் இருக்கிறார். துணைப் பிரிவுகளும் இருக்கின்றன. ‘க்யூ பிராஞ்ச்’ என்று சொல்லப்படுகின்ற அந்தப் பிரிவு மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது மட்டுமன்றி முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி, தேசியப் புலனாய்வு முகமையை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மத்திய அரசு அனுப்பி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது’’ என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்" என்று சுட்டிகாட்டியுள்ள ராமதாஸ்,

"மதத்தின் அடிப்படையில் ஒருவரின் செயல்களை தீர்மானிக்கக் கூடாது; தவறு செய்யாத அப்பாவிகள் யாரும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தண்டிக்கப்படக் கூடாது; அதேநேரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்பதுதான் பா.ம.க நிலைப்பாடு. ஆனால், தமிழ்நாட்டுக்குள் தேசியப் புலனாய்வு முகமை நுழைவதற்கு தடம் அமைத்துக் கொடுத்தது யார்? தி.மு.க தானே... அதை மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா?" என்று கேட்டுள்ளார்.

தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தை தி.மு.க முழுமையாக ஆதரித்தது. அதுமட்டுமன்றி, அப்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின்தான் துணை முதலமைச்சராக இருந்தார். அவரது தந்தை கருணாநிதிதான் முதலமைச்சராக இருந்தார்.
ராமதாஸ்

மேலும், "தேசியப் புலனாய்வு முகமை 2009-ம் ஆண்டில்தான் அமைக்கப்பட்டது. அதற்காக 2008-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விசாரணை நடத்தும் அதிகாரம் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்தச் சட்டத்தை இயற்றிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தை தி.மு.க முழுமையாக ஆதரித்தது. அதுமட்டுமன்றி, அப்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின்தான் துணை முதலமைச்சராக இருந்தார். அவரது தந்தை கருணாநிதிதான் முதலமைச்சராக இருந்தார். இப்போது மு.க.ஸ்டாலின் கூறும் ‘க்யூ’ பிரிவு காவல்துறை, அப்போது கருணாநிதியின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், ‘க்யூ’ பிரிவு காவல்துறையை மீறி தேசிய புலனாய்வு முகமை தமிழகத்துக்குள்ளும் நுழைந்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறித்து அப்போது யாரும் வாயைத் திறக்கவில்லை. இப்போதுதான் தி.மு.க.வுக்கு ஞானம் பிறந்திருக்கிறது" என விவரித்திருக்கிறார் ராமதாஸ். தொடர்ந்து,

ராமதாஸ்
ராமதாஸ்

"அதுமட்டுமன்றி, கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தில் நான்கு திருத்தங்களை செய்வதற்காக சட்ட முன்வடிவு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்தச் சட்டத்திருத்தங்களை தி.மு.க முழுமையாக ஆதரித்தது. அத்துடன் நிற்காமல் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற கொறடா மூலம் விளக்கமளித்த தி.மு.க, ‘ தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட நான்கு திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்தப் புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை என்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்தப் பிரிவுகளையும் கூடுதலாகச் சேர்க்கவும் இல்லை’ என்று கூறி வக்காலத்து வாங்கியது. தி.மு.க.வின் இந்த நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது" என்று கூறியுள்ள ராமதாஸ்,

"அதற்கெல்லாம் மேலாக, ‘ ஏதோ இந்தச் சட்டம் புதிதாக இப்போதுதான் கொண்டு வரப்படுவது போலவும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது போலவும், சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமைகளை மறுக்கும் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது போலவும், கொடூரமான வரம்பற்ற அதிகாரங்கள் காவல் அதிகாரிகளுக்கு புதிதாக அளிக்கப்பட்டுள்ளது போலவும், இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேண்டுமென்றே திரித்து செய்திகளை பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்றும் தி.மு.க கூறியிருந்தது. தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்திருத்தத்துக்கு ஆளுங்கட்சியைவிட தீவிரமாக வக்காலத்து வாங்கிய தி.மு.க, இப்போது அதை எதிர்ப்பதுபோல நாடகமாடுவது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் செயலுக்கு ஒப்பானதாகும். வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் பறிபோய்விடுமே என்ற பதற்றம்தான் இதற்கெல்லாம் காரணமாகும்" என்று குற்றம்சாட்டியுள்ளார் ராமதாஸ்.

தேசியப் புலனாய்வு அமைப்பு
தேசியப் புலனாய்வு அமைப்பு

` தி.மு.க.வின் இயல்பே இரட்டை வேடம்தான் என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்குப் புரியும். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்டு, ஆட்சியை இழந்தவுடன் அதைக் கடுமையாக எதிர்ப்பது, மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வு கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சியை இழந்த பின் அதை கடுமையாக எதிர்ப்பது போன்றவை தி.மு.க.வின் அரசியல் விளையாட்டுகள்" என்று கூறியுள்ளார் ராமதாஸ்.