Published:Updated:

ராமநாதபுரம்: ஆ.ராசா கொடும்பாவி எரிப்பு - தி.மு.க - அ.தி.மு.க தொண்டர்கள் மோதல்!

ராமநாதபுரம் - ஆ.ராசா கொடும்பாவி எரிப்பு
ராமநாதபுரம் - ஆ.ராசா கொடும்பாவி எரிப்பு ( உ.பாண்டி )

ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் அ.தி.மு.க தலைவர்களை அவதூறாகப் பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அ.தி.மு.க-வினர் திடீரென ஒன்று கூடினர். அங்கு அவர்கள், ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

ராமநாதபுரத்தில் தி.மு.க எம்.பி ஆ.ராசாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க-வினர் எரித்ததால் இரு கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் செருப்பு, காய்கறி, கற்களை வீசித் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

ராமநாதபுரம்: ஆ.ராசா கொடும்பாவி எரிப்பு
ராமநாதபுரம்: ஆ.ராசா கொடும்பாவி எரிப்பு
உ.பாண்டி

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழலில் ஈடுபட்டதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விடும் வகையில் பேசியிருந்தார். இதைக் கண்டித்து அ.தி.மு.க-வினர் நேற்று விருதுநகரில் ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து விருதுநகரில் அ.தி.மு.க - தி.மு.க இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. போலீஸ் தடியடி நடத்தி இரு கட்சியினரையும் கலைத்தனர்.

அ.தி.மு.க - தி.மு.க மோதல்.
அ.தி.மு.க - தி.மு.க மோதல்.
உ.பாண்டி

இன்று காலை ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் அ.தி.மு.க தலைவர்களை அவதூறாகப் பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அ.தி.மு.க-வினர் திடீரென ஒன்று கூடினர். அங்கு ஆ.ராசாவின் உருவ பொம்மையையும் அவர்கள் எரிக்க முயன்றனர். இதைத் தடுத்து நிறுத்த போலீஸார் முயன்றனர். ஆனால், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போதே சிலர் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்தனர். இதையடுத்து போலீஸார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க-வினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். திடீரென அந்தப் பகுதியிலிருந்த காய்கறிக் கடையில் இருந்த காய்கறிகளை எடுத்து அ.தி.மு.க-வினரை நோக்கி வீசினர். மேலும், அவர்களை நோக்கி செருப்புகளையும் வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க-வினர் தி.மு.க-வினரை நோக்கிக் கடுமையான சொற்களால் வசைபாடியதுடன், பதிலுக்குக் கற்களை வீசினர். இதனால் அங்கு திடீரென பதற்றம் நிலவியது.

போலீஸாருடன் வாக்குவாதம் செய்த அ.தி.மு.கவினர்.
போலீஸாருடன் வாக்குவாதம் செய்த அ.தி.மு.கவினர்.
உ.பாண்டி

இதையடுத்து அங்கிருந்த ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் போலீஸார் அ.தி.மு.க-வினரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பினர். மறுபுறம் உதவிக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார் தி.மு.க-வினரைத் தடுத்து நிறுத்தி வன்முறை ஏற்படாதவாறு கலைந்து போகச் செய்தனர். அரண்மனைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால், அங்கு அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு