Published:Updated:

ராணிப்பேட்டை: அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர் காந்தியின் மகன்கள்! - சர்ச்சையைக் கிளப்பும் அதிமுக

காந்தியின் இளைய மகன் சந்தோஷ் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி.
காந்தியின் இளைய மகன் சந்தோஷ் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி.

எந்தவொரு பொறுப்பிலும் இல்லாத அமைச்சர் காந்தியின் இரு மகன்களும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தி.மு.க-வினர் மற்றும் அரசு அலுவலர்களுடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, தி.மு.க சார்பில் நான்காவது முறை சட்டமன்றத்துக்குத் தேர்வாகியிருப்பவர் ஆர்.காந்தி. சட்டமன்றத்திலுள்ள மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான காந்தி, முதன்முறையாக அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் காந்திக்கு வினோத், சந்தோஷ் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் சர்வதேச தரத்திலான ஜி.கே என்ற பள்ளியின் இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள். நேரடி அரசியலுக்குள் காந்தியின் மகன்கள் இன்னும் வரவில்லை. இருந்தாலும், அவர்கள் இருவரும்தான் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-வில் அதிகாரம் செலுத்திவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

அமைச்சர் காந்தி
அமைச்சர் காந்தி

காந்தி, மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், கட்சிப் பணிகளில் அவரின் மகன்கள் தலையீடு அதிகம் இருக்கிறதாம். பல்வேறு சமயங்களில் தந்தைக்கு பதிலாக அவருடைய மகன்கள்தான் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குகிறார்களாம். இதனால், தி.மு.க-வினர் மட்டுமன்றி, அரசு அலுவலர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. ராணிப்பேட்டை தி.மு.க-வின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலும் காந்தியின் மகன்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கட்சிப் பொறுப்பில் இல்லாதவர்கள் குறித்து தி.மு.க-வின் அதிகாரபூர்வ பக்கங்களில் பதிவிடுவது, தி.மு.க மூத்த நிர்வாகிகளையும் கடுப்படையச் செய்திருக்கிறது.

இந்தநிலையில், வாலாஜாபேட்டை தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில், அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரின் இளைய மகன் சந்தோஷ் கலந்துகொண்டு துணை ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார். அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ள அமைச்சரின் மகனுக்கு என்ன தகுதியிருக்கிறது என்று அ.தி.மு.க கேள்வி எழுப்பி, கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அ.தி.மு.க சட்டப்பேரவைத் துணை கொறடாவும், அந்தக் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளருமான சு.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடக்கிறதா, மக்களாட்சி நடக்கிறதா என்றே தெரியவில்லை. இந்த ஆட்சியில், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அடங்கிக் கிடக்கிறதா அல்லது அடக்கப்படுகிறதா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. அரசு விழாவில், அமைச்சர் மகன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நலத்திட்ட உதவி வழங்கும் அமைச்சர் காந்தியின் இளைய மகன் சந்தோஷ்...
நலத்திட்ட உதவி வழங்கும் அமைச்சர் காந்தியின் இளைய மகன் சந்தோஷ்...

இப்படியான செயல், ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாகியிருக்கிறது. அமைச்சரின் மகனான சந்தோஷ் மாவட்ட ஆட்சித் தலைவரா இருக்கிறாரா அல்லது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறாரா அல்லது உள்ளாட்சியில் ஏதேனும் தலைவராவது இருக்கிறாரா? அமைச்சரின் மகன் என்ற ஒரே தகுதியைத் தவிர அவருக்கு வேறு எந்தவொரு தகுதியும் கிடையாது. கூட்டாட்சித் தத்துவத்தைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க-வுக்கு ஒருபோதும் தகுதியில்லை என்பதை மேற்படி நடந்திருக்கும் செயல் எடுத்துக்காட்டுகிறது. அ.தி.மு.க ஆட்சியில், சட்டம் பேசிய அதிகாரிகளெல்லாம் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். அவர்களெல்லாம் அடங்கிப் போய்விட்டார்களா அல்லது அடக்கப்படுகிறார்களா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். இதை மக்களும் உணர வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில், மன்னர் ஆட்சி நடத்தும் அமைச்சர் காந்தியையும், மாவட்ட நிர்வாகத்தையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் செயல் தொடர்ந்தால், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அ.தி.மு.க மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும்’’ என்று கூறியிருக்கிறார்.

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பாக அமைச்சர் காந்தியின் இளைய மகன் சந்தோஷிடம் பேசினோம். ``அ.தி.மு.க தரப்பில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதேபோல், கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்வது பற்றிய விழிப்புணர்வு என்னிடமில்லை. இது தொடர்பாகப் பின்னர் பேசுகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு