Published:Updated:

ராணிப்பேட்டை: `திமுக-வுடன் சேர்ந்து உள்ளடி வேலை?!’ -அதிமுக நிர்வாகி நீக்கப்பட்ட பின்னணி

சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற உள்ளடி வேலைப் பார்த்த குற்றச்சாட்டில், ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க-வின் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரான முரளி, கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட காரணத்தினால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள். ‘‘முரளி, அப்படியென்ன அவப்பெயரை ஏற்படுத்தினார்?’’ என்பதை தெரிந்துகொள்ள ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

அ.தி.மு.க-வின் செய்திக்குறிப்பு
அ.தி.மு.க-வின் செய்திக்குறிப்பு

‘‘சட்டமன்றத் தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய எஸ்.எம்.சுகுமார் தி.மு.க-வின் வெற்றிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார். அ.தி.மு.க-வில், ராணிப்பேட்டை மாவட்ட புரட்சித் தலைவி பேரவைப் பொருளாளராகவும் சுகுமார் பொறுப்பு வகிக்கிறார். `உள்ளடி’ அரசியலால் அவர் தோல்வியடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்த தி.மு.க வேட்பாளர் ஆர்.காந்தியே மீண்டும் வெற்றிபெற்றார். காந்தி தற்போது, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சராக இருக்கிறார்.

அ.தி.மு.க வேட்பாளர் சுகுமாருக்கு எதிராக உள்ளடி வேலைப் பார்த்தவர்களில் ஒருவர்தான் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரான முரளி. அமைச்சர் காந்தியின் ஆதரவாளர் ஒருவரிடம் முரளி பேசியதாக சொல்லப்படும் ஆடியோ உரையாடல் ஒன்றும் வெளியாகி, அ.தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன. அந்த ஆடியோவில் பேசும் அ.தி.மு.க-வின் முரளி எனச் சொல்லப்படும் நபர், ‘காந்தி ஜெயிப்பதற்காக என்னால் முடிஞ்சதை செய்கிறேன். அ.தி.மு.க தலைமை எங்களை களத்தில் இறங்கி வேலைச் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. மறுபடியும் நம்ம ஆட்சிதான்னு ஆசை பெருமைப் பேசுகிறார்கள்.

முரளி
முரளி

என்ன இருந்தாலும், சுகுமார் வெற்றிபெறக் கூடாது. காந்தி நல்லவர். சுகுமார் என்னென்ன செய்கிறார்? என்று தகவல் சொல்கிறேன்’ என்கிறார். எதிர் தரப்பில் பேசும் தி.மு.க புள்ளியோ, ‘அண்ணன் காந்தி, உங்களை தனியாக ரெண்டு நிமிஷம் பார்க்க வேண்டும் என சொல்கிறார்’ என்கிறார். ‘பிறகு வருகிறேன். இப்போது வருவதை யாராவது பார்த்துவிட்டதால் எனக்குதான் பிரச்னை’ என்று முரளி சொல்வதோடு ஆடியோ உரையாடல் முடிகிறது.

அதற்கேற்ப, அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தோல்வியடைந்துவிட்டார். உள்ளடி வேலைப் பார்த்த நிர்வாகிகள் பெயர் பட்டியலை மாவட்டச் செயலாளர் சு.ரவி தலைமைக்கு அனுப்பி வைத்த நிலையில்தான் முரளி கட்சியின் அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்’’ என்றனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து முரளியிடம் கேட்டபோது, ‘‘எதற்காக என்னை நீக்கினார்கள் என்றே தெரியவில்லை’’ என்று ஒற்றை வரியில் பதில் அளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு