Published:Updated:

ரஞ்சன் கோகோய்: வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக நியமனம்!

மோடியுடன் ரஞ்சன் கோகோய்
மோடியுடன் ரஞ்சன் கோகோய்

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீப காலத்திய சர்ச்சையின் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் ரஞ்சன் கோகோய். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நாற்காலியில் அமர்ந்த பிறகு, பல சர்ச்சைகளில் இவர் சிக்கினார். அதில் முக்கியமானது, தனது அலுவலகத்தில் பணியாற்றிய 35 வயதுடைய பெண் ஒருவர் ரஞ்சன் கோகோய் மீது அளித்த பாலியல் புகார். தன் புகாரை சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்கு அந்தப் பெண் கடிதம் எழுதினார்.

 ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய்

தமக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு ரஞ்சன் கோகோயால் பரிந்துரைக்கப்பட்டு, தற்போது அந்தப் பதவியில் இருக்கும் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்தப் பெண்ணின் புகாரை விசாரித்தது. ரஞ்சன் கோகோய் மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லி அந்தப் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.

ரஃபேல் விமான பேர வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, அயோத்தி பாபர் மசூதி - ராம ஜென்மபூமி வழக்கு எனப் பல முக்கிய வழக்குகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுகள்தான் தீர்ப்புகள் வழங்கின. இவர் அளித்த தீர்ப்புகள் மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணி ஓய்வுபெற்ற இவர், அடுத்த நான்கு மாதங்களில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

 ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய்

நீதிபதிகள் சிலர், பணி ஓய்வுக்குப் பிறகு மிகப்பெரிய ஊதியத்தையும் பல்வேறு சலுகைகளையும் அதிகாரத்தையும் தரக்கூடிய உயர் பதவிகளுக்கு செல்வதற்காக ஆட்சியாளர்களுக்கு சாதமாகத் தீர்ப்புகள் வழங்கும் போக்கு நிலவுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இத்தகைய போக்கானது, நீதித்துறையின் மாண்புகளைக் குலைக்கக்கூடியதாகவும் நீதித்துறையின் சுயேச்சையான செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

ராமர் கோயில் பூமி பூஜை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட அதே நாளில்... வருகிறாரா மோடி?

இந்நிலையில், ஓய்வுபெற்ற நான்கு மாதங்களில் எம்.பி பதவியை ரஞ்சன் கோகோய் பெற்றது, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் வழங்கிய தீர்ப்புகள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. தற்போது, வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோதிராதித்யா சிந்தியா
ஜோதிராதித்யா சிந்தியா

அதேபோல, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்து, பா.ஜ.க-வுக்குத் தாவிய ஜோதிராதித்யா சிந்தியா, மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். அவர் தற்போது மனிதவள மேம்பாட்டுக்கான குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு