Published:Updated:

பூலான் தேவிக்கு இல்லாத எதிர்ப்பு ரஞ்சன் கோகாய்க்கு ஏன்?

Ranjan Gogoi
Ranjan Gogoi ( Rajya sabha TV )

நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்ப்புகளுடன் பதவிப்பிரமாணம் ஏற்ற எம்.பி என்கிற புதிய அத்தியாயத்தைப் படைத்திருக்கிறார் ரஞ்சன் கோகாய்.

எதிர்க்கட்சியோ ஆளும்கட்சியோ சுயேச்சையோ யாராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் பதவியேற்கிறார் என்றால், அது ஒரு மகிழ்வான தருணம். குறைந்தபட்சம் அவருக்கேனும் அது கொண்டாட்ட தினம்! ஆனால், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கிடைத்த எதிர்மறை வரவேற்பு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் யாருக்குமே வாய்த்ததில்லை. அவ்வளவு எதிர்ப்புகளுடன் பதவிப்பிரமாணம் ஏற்றிருக்கிறார் ரஞ்சன் கோகாய்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த வருடம் மார்ச் 19-ம் தேதி ராஜ்யசபா எம்.பி-யாகப் பதவியேற்றார். தலைமை நீதிபதி பதவியை விட்டு இறங்கிய 123-வது நாள் அவர் எம்.பி-யாகி விட்டார்.

பாலியல் வன்கொடுமை மற்றும் போலீஸ் அடக்குமுறையால் சம்பல் கொள்ளைக்காரியாக அவதாரம் எடுத்த பூலான் தேவி, இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு `மக்களால்' தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்தக் `கொள்ளைக்காரி' பதவியேற்றபோதுகூட நாடாளுமன்றம் நகையாடவில்லை. அவரது கட்சியான சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றார்கள்.

பூலான் தேவி
பூலான் தேவி

2014 நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் ஜெயித்து எம்.பி ஆனவர் பப்பு யாதவ். இவர் மீது 24 கிரிமினல் வழக்குகள் அப்போது இருந்தன. இவர் பதவியேற்ற போதுகூட யாரும் வெளிநடப்பு செய்யவில்லை.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த எம்.பி-களில் ஜார்க்ண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி காமஸ்வர் பைதா மீதுதான் அதிக வழக்குகள் இருந்தன. அவர் மீது 46 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவரும் எந்த எதிர்ப்பு இல்லாமல்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

பப்பு யாதவ்
பப்பு யாதவ்

அவ்வளவு ஏன்... கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடுக்கி தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டீன் குரியோகோஸ். இவர் மீது 204 வழக்குகள் இருக்கின்றன. பி.ஜே.பி எம்.பி பாபு ராவ் சோயம் 52 வழக்குகளை வாங்கி வைத்திருக்கிறார். ஏன் பாலியல் வழக்குகளில் சிக்கியவர்கள்கூட மக்கள் பிரதிநிதிகளாகி நாடாளுமன்றத்துக்குள் இப்போது நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் பதவியேற்றபோது யாரும் பல்லிளிக்கவில்லை.

ஆனால், நீதித் துறையின் உச்சபட்ச பதவியான இந்தியாவின் தலைமை நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்துவிட்டு வந்த ரஞ்சன் கோகாய் பதவியேற்க எழுந்தபோது ஏற்பட்ட கடுமையான முழக்கங்கள் இதுவரை நாடாளுமன்றத்தில் நடக்காத ஒன்று. அவருடைய பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். உறுப்பினர் ஒருவர் பதவிப்பிரமாணத்துக்கு எதிர்ப்பு வந்தது நாடாளுமன்ற வரலாற்றில் இது முதன்முறை என்கிறார்கள்.

ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய்

``ரஞ்சன் கோகாயிடம் இல்லாத தீய குணங்கள் என எதுவுமில்லை. இந்திய நீதித்துறையில் பாலியல் வக்கிரமான ரஞ்சன் கோகாய் போல வெட்கமற்ற அவமானகரமானவரை நான் ஒருபோதும் அறிந்ததில்லை'' என ட்வீட் போட்டிருக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

ரஞ்சன் கோகாய் மீது ஏன் இவ்வளவு கோபம்? நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பாபர் மசூதி வழக்கில் ராமர் கோயில் கட்ட ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்புளித்தது. சி.பி.ஐ இயக்குநர் வழக்கு, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் அளித்த தீர்ப்புகளை வைத்துத்தான் இன்றைக்கு அவர் மீது விமர்சனங்களை அடுக்குகிறார்கள்.

``நான் நாடாளுமன்றத்தில் இருந்தால், நீதித்துறையின் கருத்துகளை அங்கு எடுத்துக்கூற முடியும். நாடாளுமன்றத்தின் கருத்தை நீதித்துறையிடம் எடுத்துச் சொல்லவும் முடியும். அதனால்தான் அந்தப் பதவியை ஏற்றேன்'' என விளக்கம் கொடுத்திருக்கிறார் ரஞ்சன் கோகாய்.

ரஞ்சன் கோகாயை ராஜ்யசபா எம்.பி ஆக்கியது மோடி அரசு. ``நீதித்துறையின் மாண்புகளைச் சுக்கு நூறாக்கி வருகிறது மோடி அரசு'' என எதிர்க்கட்சிகள் வாதங்களை முன் வைக்கின்றன. ஏன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே பி.ஜே.பி-யும் இந்த விமர்சனத்தை வைத்திருக்கிறது.

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி

மோடி முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த போது அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. மத்தியில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் அருண் ஜெட்லி. 2013 ஜனவரியில் பெங்களூருவில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில் அருண் ஜெட்லி பேசிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது.

``இந்தியாவின் சட்டமுறை சோம்பலானது. சிறந்த நீதிபதிகளை நியமிப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. நீதிபதிகள் நியமனம் மற்றும் அவர்களின் ஒழுக்கம் குறித்த நிலைப்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்'' எனப் பேசினார் அருண் ஜெட்லி.

ஆட்சியில் அமர்வதற்கு முன்பு நீதிபதிகளின் நியமனம் அவர்களின் ஒழுக்கம் பற்றிப் பேசிய அருண் ஜெட்லியின் கட்சிதான் ரஞ்சன் கோகாய்க்கு எம்.பி பதவி அளித்திருக்கிறது. பாலியல் புகார் சொல்லப்பட்ட ரஞ்சன் கோகாயின் ஒழுக்கம் பற்றிய நிலைப்பாடுகளை அருண் ஜெட்லி சொல்லியது போலக் கண்காணித்திருக்க வேண்டாமா?

பெங்களூருவில் அன்றைக்கு அப்படிப் பேசிய அருண் ஜெட்லி ஆட்சியில் அமர்ந்ததும் எப்படி நடந்து கொண்டார் தெரியுமா?

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி
`விரைவில் என்னை வரவேற்பார்கள்’ - கடும் எதிர்ப்புக்கு மத்தியில் எம்.பியாகப் பதவியேற்ற ரஞ்சன் கோகாய்

உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்வதற்காகத் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை அமைத்துச் சட்டம் இயற்றியது மோடி அரசு. `இந்த சட்டம் செல்லாது' என 2015 அக்டோபர் 16-ம் தேதி தீர்ப்பு எழுதியது உச்ச நீதிமன்றம். உடனே அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி எதிர்வினை ஆற்றினார்.

``தவறான தர்க்கத்தின் அடிப்படையிலானது இந்தத் தீர்ப்பு. நீதித் துறை சுதந்திரம் என்ற ஒரே ஒரு கட்டமைப்பைத் தீர்ப்பு நிலை நிறுத்தியிருக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தின் மற்ற ஐந்து கட்டமைப்புகளான நாடாளுமன்ற ஜனநாயகம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவை, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியவற்றை குறைப்படுத்தி விட்டது’’ என்றார் அருண் ஜெட்லி.

அதோடு நிற்கவில்லை. ``இந்திய ஜனநாயகம் தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மையாகி விட முடியாது. தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பலவீனப்படுத்தப்படுகிறபோது, ஜனநாயகத்துக்கு அது ஆபத்தாக முடியும்'' எனச் சொன்னார்.

மோடியுடன் ரஞ்சன் கோகோய்
மோடியுடன் ரஞ்சன் கோகோய்

``இந்திய ஜனநாயகம் தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மையாகி விட முடியாது'' என அருண் ஜெட்லி சொன்னது நீதித் துறையைத்தான். நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால், அரசியல்வாதிகள் மக்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். அருண் ஜெட்லி சொன்ன கொடுங்கோன்மையைப் போக்கத்தான் நீதிபதிகளுக்கு அவர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகு பட்டாபிஷேகம் கட்டும் வேலையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டார்களா? கேரளாவின் கவர்னராக சதாசிவமும் மக்களவையின் எம்.பி-யாக ரஞ்சன் கோகாயும் நியமிக்கப்பட்ட போது எழுந்த விமர்சனங்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. அருண் ஜெட்லி சொல்வது போல இது ஜனநாயகத்துக்கு ஆபத்துதான்.

குஜராத் முதல்வராக நரேந்திரமோடி இருந்த போது 2013-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. அப்போது இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ``கோத்ராவில் என்ன நடந்தது என்பது இப்போதும் மர்மமாகவே இருக்கிறது. 2002-ம் ஆண்டு நடந்த சம்பவங்களில் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று சொல்வதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது. ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிக் கட்சியை அந்நாட்டு மக்கள் தவறாகத் தேர்வு செய்தனர். அதேபோன்ற தவற்றை நமது மக்களும் செய்துவிடக் கூடாது'' என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் கட்ஜூ.

மார்க்கண்டேய கட்ஜூ
மார்க்கண்டேய கட்ஜூ
இந்த நீதிமான்கள் செய்ததையும் ரஞ்சன் கோகோய் செய்ததையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள்! #MustRead

இதற்கு அருண் ஜெட்லியிடமிருந்து உடனே ரியாக்‌ஷன் வந்தது. '`கட்ஜு கருத்துகள் தனிப்பட்ட முறையில் பகைமையோடு எழுதப்பட்டிருக்கின்றன. அவர் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக அவர்களைவிட அதிக விசுவாசமாகச் செயல்படுகிறார். நீதிபதியாக இருக்கும் எவரும் அல்லது அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற எவரும் வெளிப்படையாகவோ, குரூரத்தன்மை கொண்டதாகவோ, ஆச்சர்யப்படத்தக்க விதத்திலோ, அதிகாரப் பேராசை கொண்ட வகையிலோ நடந்து கொள்ளக்கூடாது என்பது நியதி. ஒரு நீதிபதியின் தகுதியைக் கணிப்பதற்கான அனைத்துச் சோதனைகளிலும் கட்ஜூ தோற்றுப்போனவர்'' என்றார் அருண் ஜெட்லி.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

கட்ஜூ காங்கிரஸ்க்கு ஆதரவாளராக இருந்திருக்கலாம். ஆனால் கடைசிவரை அவர் எம்.பியாக பதவியேற்கவில்லை. அருண் ஜெட்லி இப்போது மறைந்துவிட்டார். அவர் மட்டுமல்ல... நீதித்துறையின் மாண்பு என்று அவர் சொன்ன கற்பிதங்களும் மறைந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது.

ரஞ்சன் கோகாய்... ஏதோ ஒரு விதத்தில் புதிய அத்தியாயம்தான்!

அடுத்த கட்டுரைக்கு