Published:Updated:

`எங்க பக்கம் வாங்கன்னு தி.மு.க, காங்கிரஸ் எம்.பி-க்கள் அழைத்தனர்!' - தேனி கூட்டத்தில் ரவீந்திரநாத்

எம்.கணேஷ்

தேனி நாடாளுமன்றத் தொகுதியை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். அதற்காகத்தான் `விஷன் தேனி' என்கிற புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Ravindranath kumar M.P
Ravindranath kumar M.P

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தேனி தொகுதிக்கு வந்த எம்.பி., ரவீந்திரநாத்குமார், இன்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பெரியகுளத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி வளர்ச்சிக்காக ’விஷன் தேனி’ என்கிற புதிய அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

Vision Theni
Vision Theni

ஆலோசனைக் கூட்டத்தின்போது பேசிய ரவீந்திரநாத்குமார், `` தமிழகத்தின் சார்பாக நான் ஒரு நபராக மக்களவையில் இருப்பதை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். அனைத்து மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் எனது செயல்பாடுகள் இருக்கும். தேனி மாவட்டத்தின் நீண்டநாள் திட்டமான போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் இத்திட்டம் முழுமைபெறும். அதற்கு அடுத்தபடியாகத் திண்டுக்கல் - லோயர் கேம்ப் புதிய ரயில் பாதைத் திட்டம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கான ஆரம்பகட்டப் பணிகளும் தற்போது நடைபெற்றுவருகிறது" என்றவர், தொடர்ந்து பேசும்போது,

இளைஞர்களின் இதயநாயகன் ஓ.பி.ஆர்... யார் சொன்னா? - அவரேதான்! - ரவீந்திரநாத் எஸ்.டி.டி. வரலாறு

`` நாடாளுமன்றத்துக்குள் சென்றவுடன், தி.மு.க மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வணக்கம் வைத்தேன். அவர்களும் எனக்கு வணக்கம் வைத்தார்கள். பின்னர், `எங்கள் பக்கம் வந்துவிடுங்கள்’ என அழைத்தார்கள். `அண்ணே… உங்க வேலைய நீங்க பாருங்க… என் வேலையை நான் பார்க்கிறேன்’ என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன்.

Ravindranath kumar
Ravindranath kumar

தேனி நாடாளுமன்றத் தொகுதியை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். அதற்காகத்தான் விஷன் தேனி (TPCD - Theni Parliamentary Constituency Development) என்கிற புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படும். விரைவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதனைத் தொடங்கி வைப்பார்” என்றார் உற்சாகமான குரலில்.