அதிமுக சட்டமன்ற கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரும் துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், பல ஆண்டுகளாக தான் குறிவைத்த ஓ.பி.எஸ்ஸின் இடத்தை ஆர்.பி.உதயக்குமார் ஒருவழியாக அடைந்திருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக, கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கூட்டத்தில் கட்சியிலிருந்து ஓ.பி.எஸ்-ஸை நீக்கியதைத் தொடர்ந்தது அவர் வகித்துவந்த பொருளாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக-வின் மூத்த தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கட்சியின் பல புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கான அறிவிப்புகள் கடந்தவாரம் வெளியானது.
அதன்படி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், தலைமை நிலையச் செயலாளராக வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது அவைத்தலைவராக இருக்கும் தமிழ்மகன் உசேன் வகித்துவந்த அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக மூத்த தலைவர் பொன்னையனும், அமைப்புச் செயலாளர்களாக, செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேரும் அறிவிக்கப்படனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் வகித்துவந்த எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரும், மனோஜ் பாண்டியன் வகித்து துணைச் செயலாளர் பொறுப்புக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராகியிருக்கிறார் ஆர்.பி.உதயகுமார்.
ஒற்றைத் தலைமை விவாதம் கட்சிக்குள் எழுந்து, அதிமுக தலைவர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்ததற்கு முன்பாகவே, எடப்பாடிதான் பொதுச்செயலாளர் என ப்ளக்ஸ் வைத்து அதிரடியாகக் களமிறங்கியவர் என்கிற வகையில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஆர்.பி.உதயகுமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு பின்னணியில் பல அரசியல் கணக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இலை வட்டாரத்தில் இதுகுறித்துப் பேசும்போது,
``தென்மாவட்ட அதிமுகவின் அடையாளமாக, முக்குலத்தோர் சமூகப் பிரதிநிதியாக அம்மா காலத்தில் இருந்தே பார்க்கப்படுபவர் ஓ.பி.எஸ். ஆனால், அந்த இடத்துக்கு வருவதற்கு பல ஆண்டுகளாக முட்டிமோதி வருபவர் ஆர்.பி.உதயக்குமார். கட்சியில் மாணவரணியிலதான் முதன்முதல்ல பொறுப்புக்கு வர்ற ஆர்.பி.உதயக்குமார், 2011 தேர்தல்'ல, சாத்தூர் தொகுதியில ஜெயிச்சு எம்.எல்.ஏவாகுறாரு. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியும் அப்பொ அவருக்குக் கிடைக்குது. ஆனா, மின்பற்றாக்குறை உச்சத்தில் இருந்த நேரத்தில், திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை வரவேற்று எட்டு கி.மீ தூரத்துக்கு இவர் அமைத்த மின் விளக்கு அலங்காரங்கள், அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தது. ஆனா இந்தச் சம்பவத்துக்குப் பின்னாடி ஓ.பி.எஸ் இருக்குறதா ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தவிர, தனக்கு ஆதரவா அம்மாகிட்ட பேசலைங்கிற கோபமும் ஓ.பி.எஸ் மேல இருந்தது. அப்போதிருந்தே ஓ.பி.எஸ்ஸுக்கும் அவருக்கும் இடையில் ஒரு பனிப்போர் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. தவிர, தென்மாவட்டத்தில் ஓ.பி.எஸ் இடத்துக்கு தான் வரவேண்டும் என்கிற தீவிர முனைப்புடனும் இருந்தார் ஆர்.பி.உதயகுமார்.
ஒற்றைத்தலைமை விவகாரம் கட்சிக்குள் வெடிச்ச நேரம், ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்ட எடப்பாடி முடிவெடுக்க அதற்கு முதன்மையான ஆயுதமா பயன்படுத்திகிட்டது ஆர்.பி.உதயக்குமாரைத்தான். காரணம், சமூக ரீதியாக ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவா கட்சியினர் திரண்டுவிடக்கூடாது என்பதற்காக அதே சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் களமிறங்கப்பட்டார். ஆர்.பி.உதயகுமாரும் ஓ.பி.எஸ் கட்சிக்கு என்னென்ன துரோகங்களைச் செய்தார் என்கிற பட்டியலை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் ஆர்.பி.உதயகுமாரை கடுமையாக விமர்சிக்க, அவர் பதிலுக்கு கடும்கோபத்துடன் விமர்சித்து வீடியோ வெளியிட்ட சம்பவமெல்லாம் நடந்தது.

ஓ.பி.எஸ் கட்சியில் வகித்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. கட்சியில் சட்டமன்றத்தில் அவர் வகித்த பதவியை அதே சமூகத்தைச் சேர்ந்தவருக்குக் கொடுப்பதன்மூலம் பெரிய அதிருப்திகள் எழாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பதே எடப்பாடியின் திட்டம். அதேபோல, கட்சியில் ஓ.பி.எஸ் இருக்கும்வரை, தான் அந்த இடத்துக்கு வரமுடியாது என நினைத்த ஆர்.பி.உதயகுமார், கட்சியை விட்டு அவர் வெளியேறியதும் அந்த இடத்துக்கு வந்துவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் நினைத்ததைச் சாதித்துவிட்டார்'' என்கிறார்கள்.