Published:Updated:

`ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி...'- மத்திய அரசுக்கு கைகொடுக்க முன்வந்த ஆர்.பி.ஐ!

மலையரசு

நிதிப் பற்றாக்குறையைச் சுட்டிக்காண்பித்த மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த வருடம் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியின் பெரும் பகுதியைத் தனக்கு மாற்றுமாறு கோரி வந்தது. இதற்கு, அந்த வங்கியின் முந்தைய கவர்னரான உர்ஜித் படேல் உடன்படவில்லை.

Reserve Bank of India
Reserve Bank of India

சந்தைகளில் உயர்வு ஏற்படும்போது ரிசர்வ் வங்கி அதிக அளவு உபரி நிதியை மத்திய அரசுக்குக் கொடுக்க முடியும். உலக அளவில் பல நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் 14 சதவிகிதம் மட்டும் உபரி நிதியை இருப்பாக தங்கள் வசம் வைத்துக்கொண்டு மீதம் உள்ள தொகையை அரசுகளுக்கு கொடுத்துவிடுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை 28 சதவிகிதம் உபரி நிதியை தன்வசம் வைத்துக்கொண்டு, மீதத்தை தான் மத்திய அரசுக்கு கொடுத்துவந்தது. உலக நாடுகளின் செயல்களையும், நிதிப் பற்றாக்குறையையும் சுட்டிக்காண்பித்த மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த வருடம் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியின் பெரும் பகுதியைத் தனக்கு மாற்றுமாறு கோரி வந்தது. இதற்கு, அந்த வங்கியின் முந்தைய கவர்னரான உர்ஜித் படேல் உடன்படவில்லை.

urjit patel
urjit patel

இருப்பினும் மத்திய அரசு தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி கவர்னர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து வரும் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில், ஆர்பிஐ முன்னாள் துணை கவர்னர் ராகேஷ் மோகன், நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார் உள்ளிட்ட ஆறு பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். பல்வேறு சாராம்சங்களை ஆராய்ந்த இந்தக் குழு சமீபத்தில் ரிசர்வ் வங்கியிடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அதில், ``ஆர்பிஐ தன்னிடம் இருக்கும் உபரி நிதியை சிறு தவணைகளாக மத்திய அரசுக்கு வழங்கலாம். இதை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு கொடுக்கலாம்'' என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கிடையே, ஆர்.பி.ஐ-யின் ஆகஸ்ட் மாத நிர்வாகக் குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் பிமல் ஜலான் அறிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது (2016-17-ல்) 30,659 கோடி ரூபாயை மட்டுமே உபரி நிதியாக ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு கொடுத்தது.

sakthi kantha das
sakthi kantha das

அடுத்த வருடம் உபரி நிதியாக 50,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதன்பிறகு நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க நிதி கேட்டது மத்திய அரசு. அதற்கு மறுப்பு தெரிவித்த உடல்நிலையைக் காரணம்காட்டி உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய சக்திகந்த தாஸ் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். சக்திகந்த தாஸ் நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக மத்திய அரசுக்குக் கொடுத்தது ஆர்.பி.ஐ. இந்த நிலையில்தான் தற்போது மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது ஆர்.பி.ஐ.