Published:Updated:

`திமுக-வை வீழ்த்த யாருடனும் கூட்டணிக்குத் தயார்' - தினகரன் அறிவிப்பின் பின்னணி என்ன?

டி.டி.வி.தினகரன்

தினகரனின் தொடர்ச்சியான கூட்டணி அழைப்புக்குக் காரணம் என்ன?

`திமுக-வை வீழ்த்த யாருடனும் கூட்டணிக்குத் தயார்' - தினகரன் அறிவிப்பின் பின்னணி என்ன?

தினகரனின் தொடர்ச்சியான கூட்டணி அழைப்புக்குக் காரணம் என்ன?

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

``கூட்டணி அமைத்தால்தான் திமுக-வை வீழ்த்த முடியும். திமுக-வுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பதற்கு நாங்கள் எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம்'' என மீண்டுமொருமுறை அறைகூவல் விடுத்திருக்கிறார், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். கடந்த சில நாள்களுக்கு முன்பாக, ``திமுக-வை வீழ்த்த அதிமுக-வுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்'' எனப் பேசியிருந்தார் தினகரன். இப்படி, தொடர்ச்சியாகக் கூட்டணி குறித்துப் பேசிவரும் தினகரனின் அரசியல் கணக்குதான் என்ன?

அ.ம.மு.க
அ.ம.மு.க

`அதிமுக-வை மீட்பதே லட்சியம்' என்கிற முழக்கத்தோடு 2018, மார்ச் 15-ம் தேதி `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். முதன்முறையாக 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சி கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அதிமுக-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அ.ம.மு.க. குறிப்பாக, ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றியை மடைமாற்றியது. தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் அந்தக் கட்சி மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. 2019 தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட அந்தக் கட்சி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது.

தொடர்ச்சியாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட்டது. இந்த நிலையில் `வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்’ என சமீபத்தில் அறிவித்தார் தினகரன். பாஜக-வுடன் தினகரன் கூட்டணிவைக்க முடிவுசெய்துவிட்டார் என்கிற தகவல்கள் அப்போது வெளியாகின. 2021 தேர்தலிலேயே, பாஜக-வின் அழைப்பின்பேரில், அதிமுக-வுடன் கூட்டணிவைக்க தினகரன் தயாராக இருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. அதை சமீபத்தில் உறுதிசெய்து தொடர்ச்சியாகப் பேசிவரும் தினகரன், அதிமுக-வுடனும் கூட்டணிவைக்கத் தயார் எனவும் வெளிப்படையாகப் பேசினார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

மின்கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அமமுக சார்பில் கடந்த மாதம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், ``திமுக என்கிற தீயசக்தியை எதிர்ப்பதற்காக 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே விட்டுக்கொடுத்து கூட்டணிவைக்கத் தயாராக இருந்தேன். ஆனால், ஒருசிலரின் ஆணவம், அகங்காரம், ஆட்சி அதிகாரம், பணத்திமிரால் கோட்டைவிட்டார்கள். வருங்காலத்தில் எல்லோரும் திருந்துவார்கள். அமமுக-வைப் பொறுத்தவரை திமுக-வை வீழ்த்த அதிமுக-வுடன் கூட்டணிவைக்கத் தயாராக இருக்கிறோம்'' எனப் பேசினார். தொடர்ச்சியாக கூட்டணி குறித்துப் பேசிவந்த தினகரன், கடந்த 6-ம் தேதி தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, `` ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணிவைக்க வேண்டும்'' என மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தினகரனின் தொடர்ச்சியான இந்தக் கூட்டணி அழைப்புக்குக் காரணம் என்ன?

அமமுக மாநில செய்தித் தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியனிடம் பேசினோம்.

``திமுக தமிழ்நாட்டின் சாபக்கேடு. திராவிட இயக்கங்களின் ஆட்சியில் திமுக ஆட்சிசெய்த காலங்கள்தான் தமிழ்நாடு, வளர்ச்சியில் பின்னடவைச் சந்தித்தது. குறுநில மன்னர்களைப்போல, திமுக-வினர் செய்த அதிகாரத் துஷ்பிரயோகங்களால் மக்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. திமுக-வினரின் ரெளடியிசம் வரம்பு மீறியிருக்கிறது. அதனால், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்பதற்காகவே யாருடனும் கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவோம் என எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். திமுக-வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று நினைக்கும் எந்தக் கட்சிக் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அதிமுக மட்டுமல்ல, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக, பாமக, விசிக என எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலிலும் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். அதற்கான அழைப்பே இது'' என்கிறார்.

வீரவெற்றி பாண்டியன்
வீரவெற்றி பாண்டியன்

தினகரனின் அழைப்பு குறித்து, அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம்.

``தினகரனுக்கு அரசியல் அடையாளம் ஏற்படுத்திக்கொடுத்த அவரின் சித்தி சசிகலாவுடன் அவர் முதலில் சேர்ந்து அரசியல் பயணம் செய்யட்டும். அதற்குப் பிறகு அவர் மற்றவர்களுடன் இணைந்து அரசியல் செய்வதைப் பற்றிப் பேசலாம். சசிகலாவுடன் இணந்து பயணம் செய்யாதது மட்டுமல்ல, தன் கட்சியில் அவருடன் யாராவது தொடர்பில் இருந்தால் அவர்களையும் கட்சியியைவிட்டு நீக்கி சர்வாதிகாரிபோலச் செயல்பட்டுவருகிறார் தினகரன். அவர் எதற்காக மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் இருக்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெளிவாகச் சொல்லிவிட்டார்.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

தேர்தல் நேரத்தில் யாரைச் சேர்த்துக்கொள்வது என்பது குறித்து முடிவெடுத்துக்கொள்வோம். ஆனால், தினகரன் எங்களுடன் இணைந்து பயணம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நிறைவேறாத ஆசை'' என்கிறார் அவர்.

இந்த நிலையில், திமுக-வின் மீதான தினகரனின் விமர்சனம் குறித்து, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம்.

``ஆறு மாதங்கள் அரசியலிலும், ஆறு மாதங்கள் ஓய்விலும் இருக்கும் ஒரு சீஸனல் அரசியல்வாதி டி.டி.வி.தினகரன். அதிமுக-வின் இன்னொரு கிளைதான் அமமுக. எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன் அனைவரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் நாங்கள் கருதுகிறோம். புள்ளிவிரவரங்களுடன் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்காமல் போகிற போக்கில் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார் தினகரன். திமுக ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல தினகரனுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அவரைக் கட்சியின் பொருளாளராக, நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கிய ஜெயலலிதா அம்மையாருக்குத் துரோகம் செய்தவர் அவர். அதனால்தான், அவரைக் கடைசிவரை அம்மையார் ஒதுக்கியே வைத்திருந்தார். தேர்தலில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துவருபவர் தினகரன். அவருக்கு, நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுவரும் திமுக-வைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?'' என்றார் அவர்.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

அரசியல் கட்சிகளின் கருத்துகள் ஒருபுறமிருக்க,``தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துவரும் தினகரன், அதிலிருந்து மீள்வதற்காகவே, கூட்டணிக்கு அறைகூவல் விடுத்துக்கொண்டிருக்கிறார். கட்சியைக் காப்பாற்றுவதற்கான யுக்தியே தவிர வேறொன்றுமில்லை'' என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.