Published:Updated:

அஸ்ஸாம் - மிசோரம்: மோதிக்கொண்ட முதல்வர்கள்; தொடரும் எல்லைப் பிரச்னை - பின்புலம் என்ன?

அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை
அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை

அஸ்ஸாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே தொடரும் எல்லைப் பிரச்னை... என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடுகளுக்கு இடையே எல்லை மோதல் நடைபெறுவதைப்போல மாநிலங்களுக்கு இடையேயும் எல்லை மோதல்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அஸ்ஸாம் - மிசோரம் இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டு, அது வன்முறையாக மாறும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும். பல ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் இந்த எல்லைப் பிரச்னை குறித்து, பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன.
அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை
அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை
எல்லை பிரச்னை:`கொல்லப்பட்ட அஸ்ஸாம் காவலர்கள்; கைதட்டிக் கொண்டாடும் மிசோரம்?!'-என்ன நடக்கிறது அங்கே?

இந்தநிலையில், கடந்த சில நாள்களாக அங்கு மிகப்பெரும் வன்முறைகள் நிகழ்ந்துவருகின்றன. எல்லைப் பிரச்னையைக் காரணம் காட்டி, இரு மாநிலத்தவரும் மோதலில் இறங்கியதால் உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. திங்கள் (ஜூலை 26) அன்று மிசோரம் மாநில நிர்வாகம் எல்லைப் பகுதியில் 6.5 கி.மீ அளவுக்கான இடத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, அதை அகற்றுவதற்காகக் களமிறங்கினர் அஸ்ஸாம் மாநில அதிகாரிகள். இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் மிசோரம் அதிகாரிகள். இதனால் எல்லையில் வன்முறைகள் அரங்கேறின. அரசுப் பேருந்துகளும், வாகனங்களும் தீ வைக்கப்பட்டன. இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் 80-க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். அஸ்ஸாம் காவல்துறையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முன்னதாக இரு மாநில முதல்வர்களும் ட்விட்டரில் மோதிக்கொண்டதும் இந்த கலவரத்துக்கு ஒரு விதையாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, ``அப்பாவி மக்கள் சச்சார் மாவட்டம் வழியாக மிசோரமுக்குள் வரும்போது தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது பொருLகள் அங்கிருந்த குண்டர்களால் சூறையாடப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?'' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, ``முதல்வர் சோரம்தங்கா அவர்களே, எங்கள் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சாவடிகளை அகற்றுமாறு மிசோரம் மாநிலம் கோலாசிப் மாவட்ட போலீஸ் எஸ்.பி கூறிவருகிறார். இப்படிச் செய்தால் நாங்கள் எப்படி அரசை நடத்த முடியும்? நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்னையைத் தீர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்'' என்று கூறியிருந்தார்.

சோரம்தங்கா, ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா
சோரம்தங்கா, ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா

இந்தநிலையில், `இரு மாநில முதல்வர்களும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தி, பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. முன்னதாக கடந்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மிசோரம் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரிசோதனை மையம் அமைத்தது. இதற்கு அஸ்ஸாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பெரும் வன்முறை வெடித்தது. குடிசைகள், வாகனங்கள் தீக்கிரையாகின. பலரும் காயமடைந்தனர். இது போன்ற எல்லை மோதல்கள் அங்கு தொடர்கதையாகவே இருந்துவருகின்றன.

எதற்காக இரு மாநிலங்களும் அடிக்கடி மோதிக்கொள்கின்றன... எல்லைப் பிரச்னை எப்போது, எதற்காகத் தொடங்கியது என்பதை இனி வரும் பத்திகளில் விரிவாக அலசலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிசோரம், மாநிலமானது!

ஆரம்பத்தில் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்ததுதான் மிசோரம். அப்போது `லுஷாய் ஹில்ஸ்' என்ற பெயரில் அஸ்ஸாமின் ஒரு மாவட்டமாக இருந்தது. அங்கு `மிசோ' என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வாழ்ந்துவந்தனர். 1972-ம் ஆண்டு அஸ்ஸாமிலிருந்து பிரிக்கப்பட்டு மிசோரம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 1987, பிப்ரவரி 20 அன்று தனி மாநிலமானது மிசோரம்.

பிரச்னை என்ன?

அஸ்ஸாம்-மிசோரம் ஆகிய மாநிலங்கள் 164.6 கி.மீ எல்லைப் பகுதியைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இரு மாநிலங்களுக்குமிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி , எல்லைப் பகுதியிலுள்ள நிலங்களை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், இரு மாநிலத்தவரும் இதைப் பல சமயங்களில் மீறியதால் வன்முறைகள் அரங்கேறின.

அஸ்ஸாம் - மிசோரம் எல்லை
அஸ்ஸாம் - மிசோரம் எல்லை

கடந்த ஆண்டு அஸ்ஸாம் மாநிலம், லைலாப்பூரிலுள்ள மக்கள் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சில தற்காலிக குடிசைகளை அமைத்தனர். அந்தக் குடிசைகளை மிசோரம் மக்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அதேநேரத்தில், அந்தப் பிரச்னைக்குரிய இடம், ஆவணங்களின்படி அஸ்ஸாம் மாநில நிர்வாகத்துக்குக் கீழ் வருவதாக அஸ்ஸாம் அதிகாரிகள் கூறுகின்றனர். அஸ்ஸாம் அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடினாலும், `அந்த நிலத்தில் பல காலமாக விவசாயம் செய்துவந்தது எங்கள் விவசாயிகள்தாம்' என்கிறது மிசோரம் தரப்பு. இது போன்ற அந்த சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியை இரு மாநிலத்தவரும் ஒப்பந்தங்களை மீறி சொந்தம் கொண்டாடுவதால்தான் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.

மேலும், 1933-ம் ஆண்டு எல்லைகள் பிரிக்கப்பட்டபோது மிசோ சமூகத்தினரைக் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி, கடந்த காலங்களில் எல்லை வரையறைக்கு எதிராக வாதாடி வந்தனர் மிசோ தலைவர்கள். எனவே, அப்போது பிரிக்கப்பட்ட எல்லைகளை மிசோ மக்கள் ஏற்கவில்லை. ஆனால், அஸ்ஸாமோ 1933-ல் பிரிக்கப்பட்ட எல்லை நிர்ணையத்தைதான் பின்பற்றிவருகிறது. இதுதான் இரு மாநிலத்தவருக்கும் இடையேயான எல்லை மோதல்களுக்கான தொடக்கப்புள்ளி என்று சொல்லப்படுகிறது.

வேறு காரணம்..?

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்தான் இந்த வன்முறைகளுக்குக் காரணம் என்றும் சிலர் தகவல் சொல்கின்றனர். இது குறித்து மிசோரமிலுள்ள மாணவர் அமைப்பின் தலைவர் வன்லால்தானா கடந்த ஆண்டு சில கருத்துகளைக் கூறியிருந்தார்.

எல்லைப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்கள்தான். அவர்கள்தான் எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்கின்றனர், எங்கள் குடிசைகளுக்கு தீ வைக்கின்றனர்.
வன்லால்தானா

வடகிழக்கு மாநிலங்களும் எல்லைப் பிரச்னைகளும்!

அஸ்ஸாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே மட்டும்தான் எல்லைப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று கேட்டால், `இல்லை’ என்பதுதான் பதில். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநிலமாக இருந்தது அஸ்ஸாம். காலப்போக்கில் ஒவ்வொன்றும் தனித் தனி மாநிலமாகின.

இந்த ஒவ்வொரு மாநிலத்துடனும் அஸ்ஸாமுக்கு எல்லைப் பிரச்னைகள் இருந்துவருகின்றன. அஸ்ஸாமுடன் மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களும் எல்லை விவகாரத்தில் மோதிக்கொள்கின்றன. இதனால் இந்த மாநிலங்களின் எல்லைகளில் பலமுறை வன்முறை வெடித்திருக்கிறது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் எட்டப்படவில்லை. ஒப்பந்தப்படி அங்கிருக்கும் மக்களும் அதிகாரிகளும் நடந்துகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகின்றன.

அஸ்ஸாம் மிசோரம்
அஸ்ஸாம் மிசோரம்
இந்திய மாநிலங்களின் வரலாறு: வெடித்தது உண்ணாவிரதப் போராட்டம்! பிறந்தது மொழிவாரி மாநிலங்கள்|பகுதி -2
``வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிகழும் எல்லைப் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகள் உட்கார்ந்து பேசி ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும்'' என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு