Published:Updated:

`இரண்டு பேரில் ஒருவரை டிக் அடித்த எடப்பாடி!' - ஜெயலலிதா பாணியைக் கடைப்பிடித்த அ.தி.மு.க தலைமை

கருணாநிதி இருந்த காலத்திலேயே அ.தி.மு.க-வுக்கு வாக்களித்து வந்த கொங்குமண்டல பட்டியலின சமூக மக்கள், இந்தமுறை ஸ்டாலின் தலைமையை ஏற்று வாக்களித்துள்ளனர். இது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ராஜ்யசபா வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி காட்டிய அணுகுமுறையைக் கேள்வி கேட்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் சீனியர்கள். `ஜெயலலிதாவால் மட்டுமே கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு உயர்பதவியைக் கொடுக்க முடியும். அதேபாணியை வேட்பாளர் தேர்வில் கடைப்பிடித்துள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

அண்ணா தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், `அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.7.2019 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடும் 3 இடங்களில், இரண்டு இடங்களுக்குக் கழகத்தின் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக வேலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் முஹம்மத் ஜானும் மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரனும் நிறுத்தப்படுகிறார்கள். ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மற்றுமுள்ள ஓர் இடம் ஒதுக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, இந்தப் பதவியைக் குறிவைத்து அ.தி.மு.க-வின் சீனியர்கள் பலரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்த ரேஸில் தம்பிதுரை, தளவாய் சுந்தரம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன் எனப் பலர் இருந்தனர். கடந்த சில வாரங்களாகத் தினகரனின் அ.ம.மு.க-விலிருந்து பலரையும் அ.தி.மு.க-வில் இணைய வைக்கும் வேலைகள் நடந்து வந்தன. இதற்கான பணிகளைத் தளவாய் சுந்தரம் கவனித்து வந்தார். `இதற்குப் பிரதிபலனாக ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வேண்டும்' என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார் தளவாய். இதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமியும், `நல்லபடியாக முடித்துக்கொடுங்கள். நேரம் வரும்போது பார்க்கலாம்' எனப் பதில் அளித்தார்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

அதேபோல், கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போன கே.பி.முனுசாமியும் ராஜ்ய சபா கனவோடு இருந்தார். கடந்த சில நாள்களாகத் தலைமையின் முடிவில் மாற்றம் வருவதை உணர்ந்த கே.பி.முனுசாமி தரப்பினர், `ராஜ்ய சபா பதவியைக் கொடுக்கக் கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். அப்படிக் கொடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடக்கும்' என எச்சரித்தனர். கரூரில் காங்கிரஸ் ஜோதிமணியிடம் தோற்றுப்போன தம்பிதுரையும், `சீனியர் என்ற அடிப்படையில் ராஜ்ய சபா பதவி வேண்டும்' என்ற கோரிக்கையோடு காத்திருந்தார். மறுபுறம், இஸ்லாமியர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தனக்கு அந்தப் பதவி வேண்டும் என வலியுறுத்தி வந்தார் ராமநாதபுரம் அன்வர் ராஜா.

``கழகத்தின் முக்கிய சீனியர்கள் அனைவரும் வரிசையில் காத்துக் கிடந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெயலலிதா பாணியில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவர்களில் யார் ஒருவருக்குக் கொடுத்திருந்தாலும் மற்றவர்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பார்கள். இப்போது யாரும் கேள்வி கேட்க முடியாத வகையில் தேர்வை நடத்தி முடித்துவிட்டனர்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு விகிதங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகப்படியான அதிர்ச்சியைக் கொடுத்தது கொங்கு மண்டலம்.

கருணாநிதி இருந்த காலத்திலேயே அ.தி.மு.க-வுக்கு வாக்களித்து வந்த பட்டியலின சமூக மக்கள், இந்தமுறை ஸ்டாலின் தலைமையை ஏற்று வாக்களித்துள்ளனர். இப்படியொரு வாக்கு வங்கி பரிமாற்றத்தை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லை. எனவே, இந்தமுறை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்ய சபா சீட்டை ஒதுக்க வேண்டும் என முடிவு செய்தார். இதற்கான விவாதம் நடந்தபோது, சேலத்திலிருந்து இரண்டு பெயர்கள் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒருவர் சந்திரசேகர்; மற்றொருவர் அயோத்தியா பட்டினம் ரவி. இந்த இருவரில் சந்திரசேகர் பெயரை டிக் அடித்தார் எடப்பாடி.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அதேபோல், வேலூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவருக்குக் கொடுப்பதன் மூலம் தமிழக சிறுபான்மை மக்கள் மத்தியிலும் இந்த அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நம்புகிறார் முதல்வர். மூன்றாவது இடத்தைக் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அன்புமணிக்கு ஒதுக்கியிருக்கிறார். பா.ம.க-வுக்கு ஒதுக்கியதால்தான் கே.பி.முனுசாமிக்கு சீட் வழங்கப்படவில்லை. 3 இடங்களில் 2 இடங்களை வன்னியர் சமூகத்துக்கு ஒதுக்கினால் தேவையற்ற கேள்விகள் எழும் என்பதுதான் பிரதான காரணம். இப்படியொரு வித்தியாசமான தேர்வின் மூலம், ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். இதனால் தொண்டர்கள் மத்தியிலும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. ஒரு நகர செயலாளருக்கு ஜெயலலிதாவால்தான் உயர் பதவியைக் கொடுக்க முடியும் என்பதால் அதே அணுகுமுறையைத் தலைமையில் உள்ளவர்களும் கடைப்பிடித்துள்ளனர். இதனால் அதிருப்தியில் இருக்கும் சீனியர்களும் கேள்வி கேட்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்கின்றனர் இயல்பாக.