Published:Updated:

சீண்டிய விஜய பிரபாகரன்; கொதித்த அ.தி.மு.க! -ராஜ்ய சபா ரேஸில் தே.மு.தி.க-வை ஓரம்கட்டிய பின்னணி

விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் தே.மு.தி.க-வை தக்கவைப்பதைவிட, பா.ம.க-வே போதும் என்று எடப்பாடி முடிவெடுத்திருக்கிறார்.

சீண்டிய விஜய பிரபாகரன்; கொதித்த அ.தி.மு.க! -ராஜ்ய சபா ரேஸில் தே.மு.தி.க-வை ஓரம்கட்டிய பின்னணி

தமிழகம் முழுவதும் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் தே.மு.தி.க-வை தக்கவைப்பதைவிட, பா.ம.க-வே போதும் என்று எடப்பாடி முடிவெடுத்திருக்கிறார்.

Published:Updated:
விஜயகாந்த்

அ.தி.மு.க-வில் உள்ள மூத்த நிர்வாகிகளின் நெருக்கடி ஒருபுறம், மறுபுறம் கூட்டணிக் கட்சிகளின் மிரட்டல் என நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, ராஜ்ய சபா வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. கடைசி நேரத்திலாவது தே.மு.தி.க-வுக்கு சீட் கிடைத்துவிடும் என்று அதீத நம்பிக்கையிலிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்காமல், ஜி.கே.வாசனுக்கு டிக் அடித்திருக்கிறார் முதல்வர். காரணம், விஜய பிரபாகரனின் பேச்சும் அவர்கள் நடந்துகொண்ட விதமும்தான் அ.தி.மு.க தலைமையை அதிகமாகக் காயப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்.பி-க்களுக்கான தேர்தலில், தி.மு.க 3 இடங்களிலும் அ.தி.மு.க 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க, தங்களுக்கு ஒரு எம்.பி சீட் கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்திவந்தது. அ.தி.மு.க-வில் உள்ள கட்சியின் சீனியர்கள், தங்களுக்கு இந்தத் தடவை எம்.பி சீட் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில், தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய பிறகும் அ.தி.மு.க-வால் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. கட்சியின் சீனியர்களிடமும் சீட் கேட்டவர்களிடமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், `கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும்' எனக் கூறிவந்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலை நேற்று கட்சித் தலைமை அறிவித்தது. அதில், கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.

மோடியுடன் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ்
மோடியுடன் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ்

கடைசி வரை சீட் கிடைக்கும் என்று நம்பிக்கைகொண்டிருந்த தே.மு.தி.க-வுக்கு சீட் கிடைக்காதது பெரும் மன வருத்தத்தையும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பிரேமலதா ஆலோசனை நடத்த இருக்கிறாராம். இந்த நிலையில், ஊடகங்களிடம் பேசிய தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஷ், ``ராஜ்யசபாவில் வாய்ப்பு அளிக்காதது வருத்தமளிக்கிறது. தே.மு.தி.க-வுக்கு அளித்த வாக்குறுதியை அ.தி.மு.க நிறைவேற்றவில்லை” என்று மனக்குமுறலை வெளிப்படுத்திவிட்டுச் சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ``ராஜ்யசபா சீட் தொடர்பாக பா.ம.க தவிர வேறு எந்த கூட்டணிக் கட்சியுடனும் அ.தி.மு.க ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. கூட்டணிக் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் சீட் கேட்பது இயல்புதான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கூட்டணிக் கட்சிகளின் இயல்பறிந்து தலைமை முடிவு செய்திருக்கிறது. தே.மு.தி.க இப்போது வரை எங்களுடன்தான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பார்ப்போம்” என்றார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ``கொஞ்ச நாளாகவே தே.மு.தி.க-வின் போக்கு ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது. இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். சமீபத்தில், கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தே.மு.தி.க-வுக்கு இரண்டு சதவிகிதம் வாக்குகள்தான் உள்ளது எனவும், விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இருப்பதால் நிர்வாகிகள் தொய்வு அடைந்திருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போ, நீங்க ஏங்க எங்க வீட்டுவாசலில் கூட்டணிக்காக நின்றீர்கள்? எங்ககிட்ட வச்சிக்காதீங்க, கொடுக்கிறத வாங்குற கட்சி இல்ல. நாங்கள் ஓங்கிக் கொடுக்கிற கட்சி. வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் உங்களது ஆட்சி இல்லை" என்று ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியுள்ளார். அதோடு, பிரேமலதாவும் தலைமையை எச்சரிக்கும் வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு வாக்கு வங்கியே இல்லாதபோதே இப்படி நடந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் என்ன செய்வார்கள்? என்று வெளிப்படையாக அ.தி.மு.க-வினரே பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதோடு, `தமிழகம் முழுவதும் தங்களது கட்சிக்கு செல்வாக்கு உள்ளது' என தே.மு.தி.க சொல்லிக்கொண்டாலும் விஜயகாந்த்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு தே.மு.தி.க நிர்வாகிகள் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் தே.மு.தி.க-வை தக்கவைப்பதைவிட, பா.ம.க-வே போதும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்திருக்கிறார். மேலும், இந்த ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க-வின் கோரிக்கையை ஏற்று ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்ததன்மூலம் தமிழகத்தில் பா.ம.க, த.மா.கா ஆகிய கட்சிகளையும், டெல்லியில் பா.ஜ.க-வையும் திருப்திப்படுத்தியிருக்கிறார் முதல்வர். தே.மு.தி.க கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்தவித பயனும் இல்லை என்று முதல்வர் முடிவு எடுத்துவிட்டார்" என்கிறது கோட்டை வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism