Published:Updated:

ஏன் மாற்றப்பட்டார் பீலா ராஜேஷ்..? எப்படி வந்தார் ஜெ.ராதாகிருஷ்ணன்?

பீலா ராஜேஷ்
News
பீலா ராஜேஷ்

சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கும் தமிழக சுகாதாரத்துறை நிர்வாகத்துக்கும் இடையே கடந்த இரண்டு மாதகாலமாகப் பனிப்போர் நிலவி வந்தது.

கொரோனா சீஸனில் தினமும் மீடியாக்களுக்குப் பேட்டி கொடுத்து வந்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென அங்கிருந்து மாற்றப்பட்டு வணிக வரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கொரோனா சிகிச்சை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பீலா ராஜேஷ் மாற்றப்படுவதற்கு முன்பு, கிளைமாக்ஸாக நடந்த விஷயம் குறித்துப் பேசும் அதிகாரிகள், ``அவருக்கும் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷுக்கும் இடையே நடந்த பவர் பாலிடிக்ஸ்தான் காரணம். இறுதியில் பிரகாஷ் ஜெயித்துவிட்டார். பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுவிட்டார்" என்கின்றனர்.

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஒமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கடந்த மார்ச் 25-க்குப் பிறகு ஜூன் 11-ம் தேதி வரை நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கும் பணிகளில் சமூக ஆர்வலர்கள் சிலர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதற்குக் காரணம், சுமார் 400 கொரோனா இறப்புகள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் புதிய சந்தேகத்தை எழுப்புகின்றனர். இதைக் கேள்விப்பட்ட பீலா ராஜேஷ், சிறப்புக் குழுவை அமைத்து இறப்பு எண்ணிக்கையைச் சரிபார்க்க உத்தரவிட்டார். அந்த உத்தரவுதான் அவரது பதவிக்கு வேட்டு வைத்துவிட்டது என்ற தகவலும் வலம் வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழகத்தில் ஜூன் 11 நிலவரப்படி கொரோனாவால் 349 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும் 279 பேர் இறந்துள்ளனர். இந்தநிலையில், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் கொரோனா இறப்பைக் குறைத்துக் காட்டுவதாகப் புகார் கிளம்பியது. `400-க்கும் மேற்பட்ட இறப்புகள் நடந்திருக்கலாம்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதற்கிடையில், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 20 பேர் பற்றிய மருத்துவ விவரங்களை தமிழக சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்கவில்லை என்று புகார் கிளம்பியது. ஆனால், மருத்துமனை தரப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாகச் சொல்கிறார்கள். ஆக, சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கும் தமிழக சுகாதாரத்துறை நிர்வாகத்துக்கும் இடையே கடந்த இரண்டு மாதகாலமாகப் பனிப்போர் நிலவி வந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மாநில சுகாதாரத்துறையின் நிர்வாகத்தின்கீழ் வருகிறவர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், சென்னையைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, சென்னையில் மட்டும் அதிகமாக இருக்க.. மாநகராட்சியின் நிர்வாகக் குளறுபடிதான் காரணம் என்று தமிழக சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது. சென்னையில், 400 கொரோனா இறப்புகள் மறைக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்தார் பீலா ராஜேஷ்.

'' மாநகராட்சி தரப்பில் வருடத்துக்கு ஒரு முறைதான் இறப்பு ஆவணங்களை சரிபார்ப்பார்கள். கொரோனா இறப்புகளை தினமும் சரிபார்க்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் மட்டும் அளிக்கப்பட்ட சிகிச்சை தற்போது தனியார் மருத்துவமனைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள இறப்பு ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, விடுபட்டுள்ள அனைத்து இறப்புகளும் சுகாதாரத்துறை பதிவில் ஏற்றப்படும்'' என்று மீடியாக்களிடம் அறிவித்தார் பீலா ராஜேஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை மாநகராட்சி பற்றி மீடியாக்களிடம் பீலா ராஜேஷ் புகார் சொல்வதாக பிரகாஷ் தரப்பில் தமிழக முதல்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது என்கின்றனர் அதிகாரிகள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோரின் குட்புக்கில் இருப்பவர் பிரகாஷ். அதனால், இவரின் குரலுக்கு உடனடியாகப் பதில் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு அரசு மேலிடத்திலிருந்து தகவல் போக, அவர் அப்போது நந்தம்பாக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

அங்கிருந்த மீடியாக்களிடம் பேசும்போது, `கொரோனா இறப்புகளை அரசு மறைக்கவில்லை' என்றார். இதே கருத்தை சேலத்தில் ஊடகங்களிடம் பேசும்போதும் தெரிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சிறப்புக் குழுவை அமைப்பது பற்றி முன்கூட்டியே முதல்வரிடம் பீலா ராஜேஷ், ஆலோசனை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், முதல்வர் அலுவலகத்துக்கும் சுகாதாரத்துறைக்கும் பிரச்னை வெடித்தது. அதன் எதிரொலியாகத்தான், பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டதாகவும் கோட்டை வட்டாரத்தில் சொல்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்தே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் துறையின் செயலாளர் பீலா ராஜேஷுக்கும் இடையே சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகள் இருந்துவந்தன. தினமும் கொரோனா நிலவரத்தை மீடியாக்களிடம் பீலா ராஜேஷ் சொல்லிவந்தார். திடீரென, `அவர் சொல்ல வேண்டாம்' என்று கூறி அமைச்சர் விஜயபாஸ்கரே பேசிவந்தார்.

இந்த நிலையில், ஜூன் 10-ம் தேதியன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு விசிட் சென்ற பீலா ராஜேஷ், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, மீடியாக்களிடம் பேசும்போது, `கொரோனா இறப்பு எண்ணிக்கை குறித்து முறையான ஆய்வுகள் செய்ய சென்னையில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.

`இந்தப் பேட்டியை மேலிடம் ரசிக்கவில்லை என்பதுதான் மாற்றத்துக்கான பிரதான காரணம்' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.