Published:Updated:

`4 வது ஆண்டு உற்சாகத்தில் எடப்பாடி; வாழ்த்துகூட சொல்லாத பா.ஜ.க!' -கூட்டணி விரிசல் பின்னணி என்ன?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக முதல்வர் பேசியதால், உச்சகட்ட கோபத்தில் இருக்கிறது பா.ஜ.க தலைமை.

அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே நாளுக்குநாள் கூட்டணியில் விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. இதற்குக் கூட்டணிக் கட்சியான பா.ம.க, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன. ஆனால், பா.ஜ.க மட்டும் இன்னும் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசை எதிர்க்கும் படலத்தை அ.தி.மு.க கையில் எடுத்திருப்பதால் இந்தக் கோபம் என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. `பெரிய ஆளுமை இல்லை ஆட்சியில் அனுபவம் இல்லை’ என ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அசால்ட்டாக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் எடப்பாடியார். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த சமயம், சசிகலாவுக்குச் சிறைக்கதவுகள் தயாராகிக்கொண்டிருந்த நேரம் திடீரென ஓர் அறிவிப்பு. 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார் எடப்பாடியார். நேற்றிலிருந்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதை முன்னிட்டு ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், வெடிவெடித்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் பா.ஜ.க மட்டும் வாழ்த்துகள் தெரிவிக்காததற்கு வேறு காரணம் இருப்பதாகவும் சொல்கிறார்கள் அரசியல் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...
எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை தொடர வேண்டும்" என எடப்பாடியை வாழ்த்தியுள்ளார். அதைத்தொடர்ந்து தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ``இன்னும் ஓர் ஆண்டுக்கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும். நடந்து முடிந்த மூன்று ஆண்டுக்காலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தே.மு.தி.க சார்பாக எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதுபோலவே வாசன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க தரப்பிலிருந்து பொன்.ராதாகிருஷ்ணனோ, மாநிலத் தலைவரின் பணிகளைக் கவனித்து வரும் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகமோ முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேபோல பா.ஜ.க-வின் ட்விட்டர் பக்கத்திலும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை. இது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

`4 வது ஆண்டு உற்சாகத்தில் எடப்பாடி; வாழ்த்துகூட சொல்லாத பா.ஜ.க!' -கூட்டணி விரிசல் பின்னணி என்ன?

இருவருக்குள் அப்படி என்னதான் பிரச்னை என்று விசாரித்தோம். 'உள்ளாட்சித் தேர்தலிருந்தே பா.ஜ.க-வுக்கு எதிராக ஆளும் அ.தி.மு.க அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதாக பொன்னார், முதல் ஹெச்.ராஜா, வானதி.சீனிவாசன், நரேந்திரன் உள்ளிட்டோர் வரை கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். தற்போது டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிரடியாக அறிவித்தார். இதனால் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க அரசுக்கு செக் வைக்கவும் தயாராகிக்கொண்டிருப்பதோடு, நம்மை எதிர்ப்பவருக்கு நாமே வாழ்த்துகள் சொல்லி பெரிய ஆளாக ஆக்கிவிடக் கூடாது என்று நினைக்கிறதாம் பா.ஜ.க தலைமை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரனிடம் பேசினோம். "மாநிலத்தலைவர் இல்லாததால் யாரும் வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. எங்களது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எல்லோரும் பல வேலைகளிலிருந்ததால் நினைவுக்கே வரவில்லை. நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு நினைவுக்கு வருகிறது. உடனே வாழ்த்து அறிக்கையை விடச்சொல்கிறேன். எங்களது அமைப்பின் கோட்பாடுபடி அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தனிப்பட்ட முறையில் பேசக்கூடாது. அதனால் அவரும் பேசவில்லை. நீங்கள் நினைக்கிற மாதிரி எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு