Published:Updated:

உ.பி: ஓர் அமைச்சர்; மூன்று எம்.எல்.ஏ-க்கள்! - பாஜக-விலிருந்து விலகி சமாஜ்வாடியில் இணைந்த பின்னணி

சமாஜ்வாடி Vs பாஜக
News
சமாஜ்வாடி Vs பாஜக

பாஜக-வினரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் சமாஜ்வாடி... யோகி பின்னடைவின் பின்புலம் என்ன என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை!

உத்தரப்பிரதேசத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டே செல்கிறது. அங்கு, `பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்கு பெரிய கட்சிகள் மோதிக்கொண்டாலும், போட்டி என்னவோ சமாஜ்வாடிக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையில்தான்' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்தப் போட்டி நாளுக்கு நாள் வலுப்பெற்றுவருகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென யோகி ஆதித்யநாத்தும், மீண்டும் எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் ஏறிவிட வேண்டுமென அகிலேஷ் யாதவும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

சுவாமி பிரசாத் மெளரியா, அகிலேஷ்
சுவாமி பிரசாத் மெளரியா, அகிலேஷ்
Twitter/Samajwadi

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் நேற்று (ஜன. 11), யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் முக்கியப் பங்குவகித்த சுவாமி பிரசாத் மெளரியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ்வாடி கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் ராஜினாமா செய்த சில மணி நேரங்களில், மூன்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடியில் ஐக்கியமாகிவிட்டனர். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேச அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

``முரண்பட்ட சித்தாந்தம் இருந்தாலும், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். பட்டியலினத்தவர்கள், ஓ.பி.சி-க்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள், சிறு, நடுத்தர வணிகர்கள் மீதான புறக்கணிப்பு காரணமாக யோகி அமைச்சரவையிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன்'' என்று ட்விட்டரில் தனது ராஜினாமா குறித்து அறிவித்திருந்தார் சுவாமி பிரசாத் மெளரியா.
சமூகநீதி, சமத்துவத்துக்காகப் போராடிய மக்கள் தலைவர் சுவாமி பிரசாத் மெளரியா ஜி, அவருடன் சமாஜ்வாடிக்கு வந்த அனைத்துத் தலைவர்களையும் தொண்டர்களையும் வரவேற்கிறேன்!
அகிலேஷ் யாதவ்

யார் இந்த பிரசாத் மெளரியா?

சுவாமி பிரசாத் மெளரியா, இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களிடையே பெரும் செல்வாக்குகொண்டவர். உ.பி-யில், சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இவர். 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் இணைந்தார். மிகவும் செல்வாக்குமிக்க தலைவர் என்பதால், இவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது பா.ஜ.க. பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களில் 13-15 பேர் வரை இவரது ஆதரவாளர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மேலும் சில பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என்று நம்பிக்கையோடு சொல்லிவருகிறது சமாஜ்வாடி.

சரத் பவார்
சரத் பவார்
இந்த நிலையில், சமாஜ்வாடியோடு கூட்டணி அமைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ``இன்னும் 13 எம்.எல்.ஏ-க்கள் சமாஜ்வாடி கட்சியில் விரைவில் இணைவார்கள்'' என்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன காரணம்?

சுவாமி பிரசாத் மெளரியா, பா.ஜ.க-விலிருந்து விலகியதற்குச் சில காரணங்களைச் சொல்கிறார்கள் உ.பி அரசியலை உற்று நோக்குபவர்கள். ``பிரசாத் மெளரியாவுக்கு நீண்டகாலமாகவே யோகி ஆதித்யநாத்தின் அணுகுமுறையில் அதிருப்தி இருந்துவந்தது. இதன் காரணமாக சில நாள்களுக்கு முன்னர்கூட, ``மீண்டும் பா.ஜ.க வெற்றிபெற்றால், எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டியே யார் முதல்வர் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்'' என்று கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்தார். அதோடு, `யோகி அரசின் பல்வேறு நடவடிக்கைகளும் சரியில்லை' என்று கட்சி மேலிடத்துக்குத் தொடர்ந்து புகார் அனுப்பிக்கொண்டேயிருந்தார் பிரசாத் மெளரியா.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

மேலும் பிரசாத் மெளரியா, இந்தத் தேர்தலில் தனது மகன் அசோக் மெளரியாவுக்கு எம்.எல்.ஏ சீட் கேட்டதாகவும், அதற்கு பா.ஜ.க மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே, பிரசாத் மெளரியாவின் மகள் சங்கமித்ராவுக்கு எம்.பி சீட் வழங்கியிருந்தது பா.ஜ.க. பதாவுன் தொகுதியின் எம்.பி-யாக இருக்கிறார் சங்கமித்ரா. `உங்கள் குடும்பத்திலிருந்து ஏற்கெனவே இரண்டு பேர் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அதனால் உங்கள் மகனுக்கு சீட் கொடுக்க முடியாது' என்று சொல்லி பா.ஜ.க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுக்கிறது. இதனால் மேலும் கோபமடைந்த பிரசாத் மெளரியா, பா.ஜ.க-விலிருந்து விலகிவிட்டார். தற்போது, களத்தில் பா.ஜ.க-வுக்கு இணையாகச் சவால் விடுத்துக்கொண்டிருக்கும் அகிலேஷுடன் கைகோத்திருக்கிறார். இது யோகி ஆதித்யநாத்துக்குப் பெரும் பின்னடைவுதான்'' என்கிறார்கள்.