Published:Updated:

`தங்கச்சிகள் படை.. சாதி கரிசனம்!' - கூட்டுறவுத்துறை பணியிட மாற்றச் சர்ச்சைகள்!

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம்
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம்

ஜூலை மாதம் கூட்டுறவுத்துறையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இணைப் பதிவாளர்கள் பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளார்கள். அது குறித்து பல்வேறு புகார்கள் நமக்கு வந்தன. பணியிட மாற்றத்தில் சர்ச்சைக்கான காரணமும் அதற்கான விளக்கமும் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தி.மு.க அரசு அமைந்ததற்குப் பிறகு நடந்த முதல் அமைச்சரவை கூட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல அமைச்சரவைக் கூட்டம் துறை சார்ந்த அறிவிப்புகளுக்கு ஒப்புதல் பெறுவதாகவே இருக்கும். ஆனால், இந்தமுறை நடந்த அமைச்சரவைக் கூட்டம் ரிவியூவ் மீட்டிங் மாதிரி இருந்ததாகத் தலைமைச்செயலக வட்டாரங்கள் கூறின. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் இதுவரை நடந்த விவரங்களை அமைச்சர்களிடம் கேட்டறிந்ததோடு துறை தொடர்பாக சில கேள்விகளையும் கேட்டிருக்கிறார். சம்பிரதாயக் கூட்டம் என நினைத்துவந்த அமைச்சர்களுக்கு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை பெரிய சர்ப்ரைஸாக இருந்திருக்கிறது. முதல்வர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் அமைச்சர்கள் சிலர் முழித்ததாகச் சொல்கிறார்கள். முதல்வரின் இந்த திடீர் ரிவியூவுக்குக் காரணம் சில அமைச்சர்களின் துறைகளில் நடந்த பணியிட மாறுதல் தொடர்பான சர்ச்சைதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

பணியிட மாறுதல் சர்ச்சையால் அரசுக்குத் தேவையில்லாத அவப்பெயர் ஏற்படும் என அரசின் ஆலோசனைக் குழுவினர் எச்சரிக்க, பணியிட மாறுதல் விவகாரத்தில் கவனமாகவும் எந்தச் சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்களுக்குக் கொஞ்சம் கோவமாகவே உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர்.

நாமக்கல்: கூட்டுறவு சங்கத்தில் ரூ.31.78 லட்சம் மோசடி; தலைவர், செயலாளர் கைது... என்ன நடந்தது?

கூட்டுறவுத் துறையின் இணைப் பதிவாளர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக ஜூன் 29-ஆம் தேதி வெளியான அரசாணையில் பல்வேறு குழப்பங்கள், சர்ச்சைகள் இருப்பதாகவும் அதற்குக் காரணம் கூடுதல் பதிவாளர் பாலமுருகனும் அமைச்சரின் உதவியாளரும்தான் என்றவர்கள் அது குறித்து விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர். தற்போதும் பணியில் இருப்பதால் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டவர்கள் பணியிட மாற்றங்களில் இருக்கும் சர்ச்சையை விவரிக்கத் தொடங்கினார். “மூன்று அரசாணையில் 40-க்கும் மேற்பட்ட இணைப் பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியாகியிருக்கிறது. அரசாங்க விதிப்படி ஒருவர் பதவியில் நியமிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் அங்கிருந்து மாற்றப்பட வேண்டும். அல்லது அதிகாரி மீது ஏதும் புகார் இருந்தால் அவரை பணியிட மாற்றம் செய்யவோ காத்திருப்போர் பட்டியலில் வைக்கவோ பதிவாளருக்கு அதிகாரம் இருக்கிறது.

பணியிட மாற்ற அரசாணை
பணியிட மாற்ற அரசாணை

தற்போது வெளியாகியிருக்கும் பணியிட மாற்றத்தில் எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை. அதைவிட முக்கியமானது இதில் பதிவாளர் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டிருக்கிறார். பதிவாளருடன் இருக்கும் நெருக்கத்தை வைத்துக் கொண்டு இந்தப் பணியிட மாறுதலில் கூடுதல் பதிவாளர் பாலமுருகன் தன் நோக்கத்திற்குச் செயல்பட்டிருக்கிறார்” என்றவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கூடுதல் பதிவாளர் பாலமுருகனுக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே எந்த முன் அனுபவமும் இல்லாத இணைப் பதிவாளர்கள் 6 பேர் சென்னை மற்றும் சென்னைக்கு அருகில் அதுவும் முக்கியமான பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். காஞ்சிபுரம் மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்த இணைப் பதிவாளர் அங்குப் பணி மாற்றம் பெற்று ஓராண்டே முடிந்த நிலையில் அங்கிருந்து விலக்கப்பட்டதோடு, காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளார். அநேகமாக இவரது பெயரைப் பால்வள தணிக்கை பிரிவிலோ வேறு ஏதேனும் சர்க்கரை ஆலையிலோ கூடுதல் பதிவாளர் பாலமுருகன் சேர்த்திருப்பார்” என்றவர்கள், 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் காஞ்சிபுரம் பண்டக சாலையில் ஆண்டுக்கு சுமார் 75 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

அதிக வருவாய் தரும் பண்டக சாலை, அதிக ஊழியர்கள் பணியாற்றும் பண்டக சாலை என்பதால் காஞ்சிபுரம் பண்டக சாலையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்தார். மேலும், தண்டையார்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 2 இடங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபங்கள் கட்டப்பட உள்ளன.

Vikatan

தனக்கு நெருக்கமான பெண் இணைப் பதிவாளர் ஒருவரை அங்கு நியமித்து மேற்கண்ட திட்டங்களில் தலையீடு செய்வதே பாலமுருகனின் திட்டம். ஆனால் அதற்கு மாற்றப்பட்ட மேலாண்மை இயக்குநர் இடையூறாக இருந்ததாலும் அவரது திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பதாலும் பழிவாங்கும் நோக்கில் அவர் மீது முகாந்திரம் இல்லாத புகார்களைச் சுமத்தியது மட்டுமல்லாமல் அதற்கு ஏற்ப ஆதாரங்களைத் திரட்டவும் முயன்று வருகிறார் எனக் காரணம் கூறுகிறார்கள். திருமண மண்டபம் கட்டியபோது அமைச்சர் அலுவலக உத்தரவை மீறி சொந்த ஆதாயம் அடைந்த இணைப் பதிவாளர் சிவக்குமார், தற்போது துடியலூர் விவசாய சேவா கூட்டுறவு நிறுவனத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்” எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும் “கூடுதல் பதிவாளருக்கு பணியிட மாறுதலில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. ஆனாலும், தன்னளவில் ஒரு வட்டத்தை, குறிப்பாகப் பெண்கள் அடங்கிய தங்கச்சிகள் படையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது சாதி கரிசனத்திலும் சிலருக்கு முக்கியப் பொறுப்புகள் ஒதுக்கியிருக்கிறார்” என்றவர்கள்...

தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி

மேலும், தனக்குப் பிடிக்காதவர்கள், தனது திட்டங்களுக்கு உடன்படாதவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதும், அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் சில விஷயங்களை மிகைப்படுத்துவதும், காரணமே இல்லாமல் அதைப் பெரிதுபடுத்துவதுமாக நடந்து கொள்வது பல இணைப் பதிவாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஏற்கெனவே பல முறை புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

புகார் தொடர்பாகக் கூடுதல் பதிவாளர் பாலமுருகனிடம் கேட்டோம், “இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் வேடிக்கையானவை. முதலில் பணியிட மாற்றத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதில் தலையிடும் அதிகாரமும் எனக்கு இல்லை. பதிவாளர்தான் இந்தப் பணியிட மாற்ற உத்தரவைப் பிறப்பித்தவர். பொதுவாக பணியிட மாற்றத்தின் போது யாராவது ஒருவர் மீது மற்றவர்கள் குறை சொல்வது இயல்புதான். எங்கள் துறையில் என்மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பணியிட மாற்றம் நடக்கும் ஒரு வாரங்களுக்கு முன் இணைப் பதிவாளர்களுடனான ரிவ்யூ மீட்டிங் ஒன்று நடந்தது. தங்கள் நிறுவனத்தில் சிறப்பாகச் செயல்படாதவர்கள், கடந்த ஆட்சியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறைகேடாகப் பணி நியமனங்கள் செய்ததாகப் புகார் எழுந்த சிலரிடம் அது குறித்து விளக்கம் கேட்டோம். ஆனால், அவர்கள் யாரும் முறையாகப் பதிலளிக்கவில்லை. கடந்த ஆட்சியில் அமைச்சர் தங்களுக்கு நெருக்கம் என்பதுபோல ரிவ்யூ கமிட்டி முன் மரியாதையின்றி பதிலளித்தார்கள். அவர்களது அணுகுமுறை எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருந்தது.

உயர் அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு, உங்கள் மீது வைக்கப்படும் புகாருக்கு முறையாகப் பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை என நான் சற்று கடுமையாகப் பேசினேன். நான் அப்படிப் பேசிய ஒரு வாரத்தில் பணியிட மாற்ற உத்தரவு வந்ததும் அதற்குக் காரணம் நான் தான் என அவர்கள் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள் போல. எனக்குக் கீழே இருக்கும் அதிகாரிகள் தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்க வேண்டும், முறைகேடுகள் இன்றி துறை சிறப்பாக நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.
பாலமுருகன் - கூடுதல் பதிவாளர்

அதற்காக இந்தப் பழிகளைச் சுமத்துவார்கள் என்றால் அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என விளக்கம் அளித்தார்.

பாலமுருகன் கூடுதல் பதிவாளர்
பாலமுருகன் கூடுதல் பதிவாளர்

புகார்கள் குறித்துக் கூடுதல் பதிவாளர் வில்வ சேகரினிடம் பேசினோம் “பணியிட மாற்றம் அரசாங்க விவகாரம். அதில் நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. அரசாங்க உத்தரவை அதிகாரிகள் பின்பற்றித்தான் ஆக வேண்டும்” என முடித்துக்கொண்டார். இது தொடர்பாகப் பதிவாளர் சண்முகசுந்தரத்தைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாகப் பதிவாளர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதையும் உரிய பரீசீலனைக்குப்பின் இணைத்து வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு