Published:Updated:

`எங்கய்யா உங்க ஊர் ஸ்பெஷல்?!' - ஜிலேபி பாசத்தால் பாதிக்கப்பட்ட துரைமுருகன்?

துரைமுருகன்
துரைமுருகன்

துரைமுருகனைப் பொறுத்தவரையில் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரிலுள்ள ஸ்பெஷலான உணவு வகைகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிடுவதில் ஆர்வம்காட்டுவார்.

திருச்சியில் ஆய்வுக் கூட்டம் நடத்தச் சென்ற தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உடன்பிறப்புகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `திண்டுக்கல் ஸ்பெஷல் இனிப்பு ஒன்றை அதிக அளவில் சாப்பிட்டதுதான் வினையாகிவிட்டது' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

மருத்துவமனையில் துரைமுருகன்
மருத்துவமனையில் துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவைப் பொதுக் கணக்கு குழுத் தலைவராக இருக்கிறார், தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன். இவர் தலைமையிலான குழு, நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தியது. அதன் பின்னர், நேற்று திண்டுக்கல்லில் பொதுக் கணக்கு குழு அலுவல்களை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் துரைமுருகன். நேற்று மாலை அவரது வாகனம் திருச்சி அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் மற்றும் மயக்கத்துடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் மற்றும் கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அதன் பிறகு, உடல்நலம் சரியானதும் இரவே சென்னைக்குக் கிளம்பிவிட்டார்.

திருச்சி: காய்ச்சல்... திடீர் மூச்சுத்திணறல்!-சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்புகிறார் துரைமுருகன்

`மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு அவரது உடல்நலனில் என்ன பிரச்னை?!' என தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். `` துரைமுருகனைப் பொறுத்தவரையில் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரிலுள்ள ஸ்பெஷலான உணவு வகைகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிடுவதில் ஆர்வம்காட்டுவார். ஒவ்வோர் ஊரிலும் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, முன்கூட்டியே நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்துவிடுவார். சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று சேர்ந்ததும் அவர் கேட்ட பதார்த்தங்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும்.

துரைமுருகன்
துரைமுருகன்

அந்தவகையில், திண்டுக்கல்லுக்கு போய்ச் சேர்ந்ததும், எம்.எல்.ஏ-க்கள் சக்ரபாணி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அவரை வரவேற்றிருக்கிறார்கள். அங்கு அவருக்கு டீ கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்க மறுத்த துரைமுருகன், `எங்கய்யா உங்க ஊர் ஸ்பெஷல் ஜிலேபி?' எனக் கேட்டிருக்கிறார். இதையடுத்து, நாகல்நகரில் பிரபலமான கடையின் ஜிலேபியை அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். சுமார் அரை கிலோ எடைகொண்ட அந்த ஜிலேபியை ஆர்வமாக வாங்கிப் பிரித்தவர், முழுதாகக் காலி செய்துவிட்டு கூடவே மிக்ஸரையும் சாப்பிட்டிருக்கிறார். பிறகு டீ குடித்துவிட்டு நிர்வாகிகளோடு பேசத் தொடங்கியிருக்கிறார். இதை அருகிலிருந்து கவனித்த எம்.எல்.ஏ-க்கள் எவரும், ஜிலேபியைச் சாப்பிட ஆர்வம் காட்டவில்லை. ஜிலேபி மீது துரைமுருகன் காட்டிய பாசத்தைப் பார்த்து, ` உடன்பிறப்புகள் பயந்திருக்கிறார்கள். பிறகு ஒரு கிலோ ஜிலேபி பார்சலைக் கையில் எடுத்துக்கொண்டு மதுரைக்குப் பயணம் செய்திருக்கிறார்.

அவரது கார் திருச்சி அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பயந்துபோய் அறிவாலயத்தைத் தொடர்பு கொண்ட துரைமுருகன், ` நான் திருச்சியில் இருக்கிறேன். மூச்சுவிடுவதில் சிரமமாக இருக்கிறது, லேசான காய்ச்சலும் இருக்கிறது. எந்த ஆஸ்பத்திரிக்குப் போனால் சரியாக இருக்கும்?' எனப் பதற்றத்துடன் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கே.என்.நேருவுக்குத் தகவல் தெரிவிக்கவே, நேருவின் ஆலோசனையோடு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் துரைமுருகன்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

பொதுவாக, ஏப்பம்விடுவதில் சிரமம் இருந்தாலே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவார் துரைமுருகன். அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே ஜிலேபியையும் மிக்ஸரையும் சாப்பிட்டுவிட்டார். அது அவரது உடல்நலனை பாதித்துவிட்டது. அதன் விளைவாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவரது உடல்நிலை சீராகிவிட்டது. வழக்கம்போல கட்சிப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார்" என்றனர் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு