Published:Updated:

தயங்கிய ஸ்டாலின்; நம்பிக்கை கொடுத்த ஜெகன் குடும்பம்!' - அறிவாலயத்தின் `கே.என்.நேரு அஸ்திரம்'

` தலைமையிடம் பேசிவிட்டேன், உதயநிதியிடம் பேசிவிட்டேன். உனக்குத்தான் சீட்' என உள்ளூரில் மாவட்டச் செயலாளர்கள் செல்வாக்கைக் காட்டவும் வாய்ப்பு இருக்கப் போவதில்லை.

ஸ்டாலின், துரைமுருகன்
ஸ்டாலின், துரைமுருகன்

`தேர்தல் வித்தகர்' பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் போட்ட ஒப்பந்தத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் மாவட்டச் செயலாளர்கள். ` ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடும் மனநிலையில் ஸ்டாலின் இல்லை. ஆந்திர முதல்வர் ஜெகனின் குடும்பம் தலையிட்டதாலேயே இந்த ஒப்பந்தம் கையொப்பமானது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலையில் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமானது. இவர்கள் மூவரைத் தவிர மாவட்டச் செயலாளர் என்ற முறையில் திருச்சி கே.என்.நேருவும் ஒப்பந்தத்தில் சாட்சிக் கையொப்பமிட்டிருக்கிறார். இதையடுத்து, கே.என்.நேருவைத் தொடர்புகொண்ட மாவட்டச் செயலாளர்கள் பலரும், ` அண்ணே... அந்த ஒப்பந்தத்தில் அப்படியென்ன இருக்கிறது. நமக்கெல்லாம் இனி வேலை இருக்குமா.. பிரசாந்த் கிஷோர் கம்பெனி என்ன சொல்கிறது' என்றெல்லாம் விசாரித்துள்ளனர்.

இதற்குப் பதில் கொடுத்த நேரு, ` நாம் வெற்றி பெறுவதற்காகத்தான் ஐபேக் நிறுவனம் வேலை பார்க்கிறது. தேர்தல் முடிந்ததும் அவர்கள் கிளம்பிவிடுவார்கள். இந்த ஒப்பந்தத்தால் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நம்முடைய ஆட்சிதான். நாம்தான் மந்திரி' எனக் கூறியிருக்கிறார். இருப்பினும், `ஐபேக் நிறுவனம் என்ன செய்யப் போகிறது?' என்ற கேள்வியால், மாவட்டச் செயலாளர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

`` அறிவாலயம் சார்பில் மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவு வேலைகள், புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை பொதுச் செயலாளர் முன்னிலையில் மேற்கொள்வதுதான் வழக்கம். கடந்த சில மாதங்களாக பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் இருப்பதால், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் மூலமாக ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமாகும் என சீனியர்கள் பலரும் நினைத்தனர். ஆனால், ஆர்.எஸ்.பாரதியை வைத்தே ஒப்பந்தத்தை இறுதி செய்தார் ஸ்டாலின். இந்தப் பணிகள் நடைபெற்றபோது துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருடன் நேருவும் உடன் இருந்தார். அவரைச் சாட்சிக் கையொப்பம் போட வைத்தனர்.

இதற்குக் காரணம், `பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தம் பற்றி நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கான முக்கியத்துவம் பறிபோய்விடும் என அச்சப்பட வேண்டியதில்லை. மாவட்டச் செயலாளர் நேருவே கையொப்பமிட்டிருக்கிறார்' என மற்ற மாவட்டச் செயலாளர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்கான யுக்தியாக இதைக் கையாண்டனர்'' என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர்,

`குற்றச்சாட்டு, மிரட்டல், இரண்டாவது பவர் சென்டர், ஸ்டாலினுக்குத் தெரியுமா?!’ 
- என்ன நடக்கிறது ஐபேக்கில்?

`` தி.மு.க உடன் ஒப்பந்தம் போட்ட காலகட்டத்தில் ஐபேக் நிறுவனம் சில விஷயங்களைத் தெளிவாகக் கூறிவிட்டது. `மாவட்டங்களில் உள்ள உங்கள் கட்சியின் நிர்வாகிகளிடம் நாங்கள் பேசவே மாட்டோம். எங்களுடைய கம்பெனியைச் சேர்ந்தவர்களை பீல்டுக்கு அனுப்புவோம். அவர்கள் மூலமாக தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வோம். மாவட்டங்களில் களநிலவரம் எப்படி உள்ளது என்பதைப் பற்றி உங்கள் கட்சியின் கிளைக் கழக நிர்வாகியைக்கூட நாங்கள் தொடர்புகொள்ள மாட்டோம். தலைமையோடு மட்டும்தான் எங்களுடைய உரையாடல்கள் எல்லாம். கட்சியின் வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிக்கும் என்னென்ன தேவையோ, அந்த ஆலோசனைகளை மட்டுமே வழங்குவோம்' என உறுதியாகக் கூறிவிட்டனர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

மேலும், `ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள தகுதியான வேட்பாளர், அவருக்கான உள்ளூர் செல்வாக்கு, பணபலம், பலம், பலவீனம் உட்பட பல்வேறு காரணங்களை அலசி ஆராய்ந்து, மூன்று பேரின் பெயர்களை ஐபேக் நிறுவனம் பரிந்துரைக்கும். இந்தப் பரிந்துரையைத் தாண்டி நான்காவதாக வேறு யார் பெயரையாவது தி.மு.க தலைமை டிக் செய்துவிட்டால், அந்தத் தொகுதியின் வெற்றி வாய்ப்புக்கு ஐபேக் நிறுவனம் பொறுப்பேற்காது' எனவும் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை. ` தலைமையிடம் பேசிவிட்டேன், உதயநிதியிடம் பேசிவிட்டேன். உனக்குத்தான் சீட்' என உள்ளூரில் மாவட்டச் செயலாளர்கள் செல்வாக்கைக் காட்டவும் வாய்ப்பு இருக்கப் போவதில்லை. இதை அறிந்துதான் ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்கள் குறித்து நேருவிடம் மாவட்ட செயலாளர்கள் விசாரித்துள்ளனர்" என்கின்றனர் விரிவாக.

`சூப்பர் ஹிட் க்ளப்... பவர் சென்டர் பிரசாந்த் கிஷோர்!' -ஆர்.எஸ்.பாரதி போட்ட ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

அதேநேரம், ``இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்பம் உள்ளது" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். `` ஒய்.எஸ்.ஆர் குடும்பத்துக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் இடையே நீண்டகாலமாக நட்பு உள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பாக 2016 சட்டமன்றத் தேர்தலின்போதே ஸ்டாலின் தரப்பை அணுகினார் பிரசாந்த் கிஷோர். அப்போது, `இந்த ஒப்பந்தம் சரிவராது' எனக் கூறி ஐபேக் நிறுவனத்துக்கு அப்போது வாய்ப்பு தரப்படவில்லை. இருப்பினும், தி.மு.க தலைமையை நெருங்குவதற்கு பிரசாந்த் கிஷோர் பல தரப்பிலும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஒருகட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகனின் சகோதரி ஷர்மிளாவின் கணவர் அனில்குமார் மூலமாக ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இதையடுத்து, ஸ்டாலின் தரப்பினரிடம் பேசிய அனில், `உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களை வீழ்த்துவதற்கு சந்திரபாபு என்னென்ன முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டார் என்று. பா.ஜ.க கூட்டணியிலும் சந்திரபாபு நாயுடு இருந்தார். `இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெறவில்லையென்றால், அதன்பிறகு கட்சிக்கென்று எந்த எதிர்காலமும் இருக்காது, கட்சியைக் காலி செய்துவிடுவார்கள்' என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கவலைப்பட்டனர். அப்போது, எங்களுக்கு உதவி செய்வதற்காக பிரசாந்த் கிஷோர் வந்தார்.

தற்போது நீங்களும் இதேபோன்ற சூழலில்தான் இருக்கிறீர்கள். கடந்த 9 ஆண்டுகளாக உங்கள் கட்சி அதிகாரத்தில் இல்லை.
ஜெகன் குடும்பத்தினர்

தற்போது நீங்களும் இதேபோன்ற சூழலில்தான் இருக்கிறீர்கள். கடந்த 9 ஆண்டுகளாக உங்கள் கட்சி அதிகாரத்தில் இல்லை. மீண்டும் 2021 தேர்தலில் நீங்கள் அதிகாரத்துக்கு வரவில்லையென்றால் நிலைமை விபரீதத்தில் முடிந்துவிடும்' எனக் கூறியிருக்கிறார். ஏற்கெனவே, இரண்டு முறை ஆட்சியில் இல்லை. தற்போது மூன்றாவது முறையும் பரிசோதனை முயற்சிகளை எடுக்க வேண்டாம் என்பதற்காகவே பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தத்தை இறுதி செய்தார் ஸ்டாலின்" என விவரித்து முடித்தனர்.