சேலம் மணியனூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் புதிய சட்டக் கல்லூரியை நேற்று குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சட்டத்துறை அரசு செயலர் கோபி ரவிக்குமார், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், ``ஏழை, எளிய மாணவர்கள் சட்டம் பயில்வதற்காகக் கடந்த 3 ஆண்டுகளில் 7 சட்டக் கல்லூரியைத் தொடங்கிய பெருமை முதல்வரையே சேரும். கடந்த முறை தொடங்கப்பட்ட 3 சட்டக் கல்லூரிகளுக்கும் தலா 70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை சட்டக் கல்லூரிகளில் 8,466 பேர் பயின்றுள்ளனர். தற்போது புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்ட பிறகு 10,556 பேர் படிக்கப் போகிறார்கள். இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்கிய பெருமை தமிழகத்தையே சேரும். மீண்டும் அப்படிப்பட்ட சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்கவே புதிய சட்டக் கல்லூரிகளை உருவாக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி'' என்றார்.
இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சமூகத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த செலவில் சட்டம் படிக்க, 3 புதிய சட்டக் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கியுள்ளோம். இதற்காக 9 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலத்தில் புதிய சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுத் தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பிற்காக 7 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது.
தெற்காசிய நாடுகளில் சட்டக் கல்விக்கென முதலாவதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. மிகக்குறைந்த கட்டணத்தில் தரமான சட்டக் கல்வியினை வழங்கிவருகிறது. இந்தச் சட்டப் பல்கலைக்கழகத்திற்கெனத் தனியாக, சென்னைப் பெருங்குடியில் 62 கோடியில் புதிய வளாகம் ஒன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது. மேலும் விரிவாக்கம் செய்வதற்காக 10 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 13 சட்டக் கல்லூரிகளில் 11 சட்டக்கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 3 புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்ட மாணவர்களுக்குச் சிறந்த சட்டக் கல்வி அளிப்பதே நோக்கம். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிப்பதற்காகக் கணினி வசதி, 1,188 பணியிடங்கள் நிரப்புதல், கட்டமைப்பு மற்றும் பணியாளர் நியமனம் என அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

சேலத்தில் முதன் முதலாக 67.5 ஏக்கரில் பிரமாண்டமான பாஸ்போர்ட் அலுவலகம், மாநகராட்சியில் நடைபயிற்சிக்கு 18 பூங்காக்கள் மற்றும் 3 தாலுகா அலுவலகங்களை அரசு செயல்படுத்தி இருக்கிறது. அதே போல சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.948 கோடியில் பல புதிய திட்டங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. சேலம் டு கோவை தேசிய நெடுஞ்சாலையில் அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரி அருகில் பிரமாண்ட அளவில் சேலம் அரசு சட்டக் கல்லூரி உருவாக்கப்படும்'' என்றார்.
முதல்வரிடம் சட்டக் கல்லூரியில் பயில்வதற்கான ஆணையை பெற்ற மாணவர்கள், ``எங்களுக்கு கடந்த மாதம் 9ம் தேதி கவுன்சலிங் நடைபெற்று, 15ம் தேதி சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்தோம். `சேலத்தில் புதிய சட்டக்கல்லூரி தொடங்குகிறோம். விரும்புகிறவர்கள் அங்கு வந்து படிக்கலாம்' என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இங்கு வந்து படிப்பதற்காக வந்து விட்டோம். சேலத்தில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது'' என்கின்றனர் உற்சாகத்துடன்.