Published:Updated:

`3 ஆண்டுகளில் 2,000 புகார்கள், வெறும் 10 எஃப்.ஐ.ஆர்!' - சட்டவிரோத பேனர்களுக்கு யார் காரணம்?

பேனர் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டாலும், இதுவரை ஒரு அதிகாரிக்குக்கூட தண்டனை வழங்கப்படவில்லை.

accident
accident

சென்னை குரோம்பேட்டையைச்சேர்ந்தவர், சுபஸ்ரீ. பி.டெக் படித்துள்ள இவர், கந்தன்சாவடியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். பணி முடிந்து நேற்று மாலை பள்ளிக்கரணை அருகே வந்துகொண்டிருந்தார். அந்தவழியாக, தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண வரவேற்பு பேனர் சரிந்து விழுந்தது. அந்தச் சமயத்தில் பைக்கில் வந்த சுபஸ்ரீ மீது பேனர் விழுந்துள்ளது. இதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அந்தவழியாக வந்த தண்ணீர் லாரியின் டயரில் சிக்கி சுபஸ்ரீ உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Subasri
Subasri

இது முதல்முறை அல்ல. பேனர் விவகாரத்தால் ஏற்கெனவே கோவையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேனர்களை அகற்றுவதற்குப் பலமுறை தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போதும் இதைப் பற்றி நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். நீதிமன்ற விவாதத்தில், `இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் வேண்டும்.. உயிர்ப்பலி கொடுத்தால் மட்டும்தான் அரசு நிர்வாகம் செயல்படுமா?’ என சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தனர் நீதியரசர்கள். கட்சி சார்ந்த பேனர்கள் தெருக்களை ஆக்கிரமித்து, தார்ச்சாலைகளை பதம்பார்க்கின்றன. இதுவரை எந்த அதிகாரிகள் மீதும் கட்சிக்காரர்கள் மீதும் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.

`சட்டவிரோத பேனர்களுக்கு யார் காரணம்?' என்பது குறித்து நம்மிடம் விவரித்தார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் வீ.புகழேந்தி. ``சுபஸ்ரீ எனும் 24 வயது பெண் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்ததால், வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். அவருக்குப் பின்னால் வந்த லாரி ஏறி அவர் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கக் கூடிய ஒன்று. ஜெயகோபால் எனும் அ.தி.மு.க தொண்டர் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பேனர் வைத்தபோதே காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

banner
banner

சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கெனவே பேனர் வைக்க தடைவிதித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருந்ததுதான் உயிரிழப்புக்குக் காரணம். பேனர் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டாலும், இதுவரை ஒரு அதிகாரிக்குகூட தண்டனை வழங்கப்படவில்லை. இதிலிருந்தே மக்கள் நலனில் அரசு எவ்வளவு தூரம் அக்கறையற்று செயல்படுகிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. `அரசியல் அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என காவல்துறை உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அப்படிப் பார்த்தால், யார்தான் சட்டத்தைக் காப்பது.. சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு யார் பொறுப்பேற்பது?" எனக் கொதித்தவர், ``கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக 2000 புகார்களுக்கு காவல்துறை சி.எஸ்.ஆர் காப்பி மட்டுமே வழங்கியிருக்கிறது. அதில், வெறும் 10 புகார்களில் மட்டுமே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைச் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியதைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து காவல்நிலைய அதிகாரிகளுக்கும், பேனர் புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும், சரியான நடவடிக்கை இல்லை.

pugazhenthi
pugazhenthi

வருவாய்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றிக் கூறும்போதும், `காவல்துறைக்கு 471 புகார்கள் அளித்தும் 1 எஃப்ஐஆர் மட்டுமே பதிவு செய்யப்பட்டது’ என்கிறார். சட்டவிரோத பேனர் விவகாரத்தில், மாநகராட்சி அரசுக்கு அளிக்கும் அறிக்கையில், விதிமீறுபவர்கள் ஒருவர் பெயர்கூட இல்லாமல் இருப்பது எப்படி சரியாகும். மாநகர முனிசிபல் சட்டப் பிரிவு 326-1-ன்படி விதிமீறுபவர்களுக்கு, 3ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுத்தர வாய்ப்பிருந்தும், அதிகாரிகள் அதைச் செய்வதில்லை. இனிமேலாவது காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் திருந்த வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.