Published:Updated:

டெல்லியில் 3 நாள் முகாமிடும் ஜி.கே.வாசன்! - அமித் ஷா சந்திப்பின் நோக்கம் என்ன?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், பி.ஜே.பி தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி.கே.வாசன், அமித் ஷா
ஜி.கே.வாசன், அமித் ஷா

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. - பி.ஜே.பி கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டது. தேர்தல் முடிந்த பின்னரும், ஜி.கே.வாசனுடன் இணக்கம் காட்டிவந்த பி.ஜே.பி தலைவர்கள், அவரை எப்படியாவது தங்கள் கட்சிக்குள் இழுக்க முயன்று வந்தனர்.

சீன அதிபருடனான முறைசாரா உச்சிமாநாட்டுக்கு சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் வரவேற்றார். அப்போது பிரதமர், ``என்ன வீட்டுக்கு வரமாட்டேங்கறீங்களே.. சீக்கிரமா வாங்க. உங்க வரவை எதிர்பார்த்திருப்பேன்” என அழைப்புவிடுத்தார்.

இந்தநிலையில், நாளை டெல்லி செல்லும் ஜி.கே.வாசன், பி.ஜே.பி தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

மோடியுடன் ஜி.கே.வாசன்
மோடியுடன் ஜி.கே.வாசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர், ``ஜி.கே.வாசனை எப்படியாவது பா.ஜ.க-வுக்குள் கொண்டுவர அக்கட்சித் தலைவர்கள் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். தமிழக பா.ஜ.க-வை அவர்தான் வழிநடத்த வேண்டுமென்றும் சிலர் விரும்புகிறார்கள். இதற்கு அவர் விரும்பவில்லை என்றதும் மத்திய அமைச்சர் பதவி தரவும் பேசியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்துக்குள் மாற்றியமைக்கப்படவுள்ள மத்திய அமைச்சரவையில், நிதிஷ்குமாரின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கு இடம் கொடுப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசத்தான் ஜி.கே.வாசனை அமித் ஷா நேரில் அழைத்துள்ளார். அன்றைய தினமே பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. பா.ஜ.க கோரிக்கையை ஜி.கே.வாசன் ஏற்றுக்கொண்டால், விரைவிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-வில் இணைவதற்கும் வாய்ப்புள்ளது” என்றவரிடம், ``இந்த இணைப்பை தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?” என்றோம்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

``தென்மாவட்டத்திலுள்ள ஜி.கே.மூப்பனாரின் பற்றாளர்கள் தீவிர காங்கிரஸ்காரர்கள். அவர்களால் இந்த மாற்றத்தை ஏற்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், அரசியலில் நீடித்து நிற்பதற்கு சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் நேர்ந்துள்ளதாகவே கருதுகிறோம்” என்கின்றனர்.

நாளை காலை டெல்லி செல்லும் ஜி.கே.வாசன், தொடர்ந்து மூன்று நாள்கள் அங்கு முகாமிடுகிறாராம். அமித் ஷாவைத் தொடர்ந்து பிரதமர் மோடியையும் பிற பா.ஜ.க தலைவர்களையும் அவர் சந்திப்பதற்கு முடிவாகியுள்ளது. `தனிக்கட்சித் தொடங்கினாலும், காங்கிரஸ் கட்சிக்குள் இன்றும் அவருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களையும் சந்தித்து மனம்விட்டுப் பேச இருக்கிறார் ஜி.கே.வாசன்' என்கின்றனர் த.மா.கா வட்டாரத்தில்.

ஜி.கே.வாசனின் டெல்லி பயணம் குறித்து முன்னாள் எம்.பி ஞானதேசிகனிடம் பேசினோம். `` அவர் டெல்லி பயணம் மேற்கொள்வதும் அமித் ஷாவை சந்திப்பதும் உண்மைதான். மற்றபடி என்ன முடிவை எடுக்க வேண்டும் என்பதைத் தலைவர்தான் முடிவு செய்வார். நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்றதோடு முடித்துக்கொண்டார்.