Published:Updated:

`எப்படித் தேர்வானார் ஜி.கே.வாசன்?' - அதிருப்தியில் தே.மு.தி.க; கொதிப்பில் ஏ.சி.எஸ்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

நீண்ட இழுபறிக்குப் பிறகு அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூட்டணிக் கட்சியான த.மா.கா-வுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்.பி-க்களுக்கான தேர்தலில், தி.மு.க 3 இடங்களிலும் அ.தி.மு.க 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் இழுபறி நீடித்தது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க, தங்களுக்கு ஒரு எம்.பி சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திவந்தது. அ.தி.மு.க-வில் உள்ள கட்சியின் சீனியர்கள், தங்களுக்கு இந்தத் தடவை எம்.பி சீட் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வேட்பாளர் பட்டியல்
வேட்பாளர் பட்டியல்
` த.மா.கா ஓ.கே... தே.மு.தி.க...?!' - ராஜ்யசபாவை முன்வைத்து அ.தி.மு.க ஆடும் கபடி

இருப்பதோ 3 சீட்டுகள். அதை 300-க்கும் மேற்பட்டவர்கள் கேட்டதால், அ.தி.மு.க தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியது. இந்தச் சூழலில், தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய பிறகும் அ.தி.மு.க-வால் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. கட்சியின் சீனியர்களிடமும் சீட் கேட்டவர்களிடமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், `கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும்' எனக் கூறிவந்தனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ பட்டியலை இன்று கட்சித் தலைமை வெளியிட்டது. அதில், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.

`அ.தி.மு.க-வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தபோது, எந்தவித ஒப்பந்தமும் போடாத நிலையில் ஜி.கே.வாசனுக்கு எப்படி சீட் கிடைத்தது?' என்று அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.

``அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை உள்ளன. இந்தக் கூட்டணியில், தேர்தல் ஒப்பந்தத்தின்போது பா.ம.க-வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தவித ஒப்பந்தமும் போடப்படவில்லை. இதனால் கடந்த ராஜ்ய சபா எம்.பி தேர்தலின்போது பா.ம.க-வுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

இந்தமுறை தே.மு.தி.க, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகியவை சார்பில் சீட் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், தே.மு.தி.க-வுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று கூட்டணியில் உள்ள பிரதான கட்சி ஒன்று மறைமுகமாக போர்க்கொடி தூக்கியது. கடந்த தேர்தலில், நீண்ட இழுபறிக்குப் பிறகே கடைசி நேரத்தில் தே.மு.தி.க-வுடன் கூட்டணி ஒப்பந்தமானது. அதற்கு, பா.ஜ.க-தான் முக்கியக் காரணம். அதனால் பா.ஜ.க மூலமாக தே.மு.தி.க, ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டுவந்தது. ஆனால், அ.தி.மு.க சீனியர்கள், இந்தமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

இதுதொடர்பாகக் கட்சியின் சீனியர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, பட்டியலை வெளியிட்டுள்ளது அ.தி.மு.க தலைமை. கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் எத்தனை கோடி ரூபாய் கொடுக்கவும் தயார் என்று கூறிவந்தார். ஆனால், அவருக்குக்கூட சீட் கொடுக்கப்படவில்லை. இந்தச் சமயத்தில்தான், டெல்லியிலிருந்து கட்சியின் தலைமைக்கு ஒரு உத்தரவு வந்தது. அதன்பிறகுதான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தம்பிதுரை
தம்பிதுரை

ஜி.கே. வாசனுக்கு ஒரு சீட் என்று உறுதி செய்யப்பட்டதும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கே.பி.முனுசாமி மற்றும் இன்னொருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதனால் அவர்கள் இருவரில் ஒருவருக்கு மட்டும்தான் சீட் கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கே.பி.முனுசாமியின் பெயர் டிக் அடிக்கப்பட்டது. மற்றொருவருக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

கே.பி.முனுசாமிக்கு சீட் உறுதி என்றதும் கட்சியின் சீனியரான தம்பித்துரை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தத் தடவை எனக்கு சீட் வழங்கவில்லை என்றால் நான் வேறு முடிவை எடுக்க வேண்டியது வரும் என்று கூறியுள்ளார். மேலும், டெல்லி லாபியில் தம்பிதுரைக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அதனால் அவரைத் தேர்வுசெய்ய கட்சித் தலைமை முடிவு செய்தது" என்றார் விரிவாக.

` த.மா.கா ஓ.கே... தே.மு.தி.க...?!' - ராஜ்யசபாவை முன்வைத்து அ.தி.மு.க ஆடும் கபடி

இதையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ``அ.தி.மு.க தலைமையில் ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டு கோரிக்கை வைத்தோம். அதேநேரத்தில், டெல்லியில் உள்ள முக்கியத் தலைவர் ஒருவரும் ஜி.கே.வாசனும் நீண்டகால நண்பர்கள். ஜி.கே.வாசன் குடும்பத்துக்கு வேண்டப்பட்ட அந்த முக்கியத் தலைவர், சமீபத்தில்தான் முக்கியப் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.

அவர் சார்ந்துள்ள கட்சி வேறு என்றாலும் பா.ஜ.க-வுடன் சமீபகாலமாக நெருக்கத்தில் இருந்துவருகிறார். அவர்மூலம் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களிடம் ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில் ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுப்பதற்கு அ.தி.மு.க தலைமையும் இசைவு தெரிவித்தது" என்றார்.

முதல்வருடன் ஜி.கே.வாசன்
முதல்வருடன் ஜி.கே.வாசன்

அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள ஒருவர்மீது அ.தி.மு.க-வினரும் பா.ஜ.க-வினரும் கடும் அதிருப்தியில் இருந்துவருகின்றனர். அந்த அதிருப்தியை சமாளித்து அவருக்கு எப்படி கட்சித் தலைமை சீட் கொடுத்தது என்பதுதான் அ.தி.மு.க-வினரின் கேள்வியாக உள்ளது.

``வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அடுத்த அறிவிப்பாக, கட்சியின் சீனியரான பொன்னையனுக்கு மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, இன்னும் சில சீனியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு