Published:Updated:

`காங்கிரஸ் தலைவர் தேர்வில் தொடரும் சிக்கல்!’ - சோனியா காந்தி மீண்டும் வந்த பின்னணி

ஜம்மு-காஷ்மீர் பிரச்னையைக் காரணம் காட்டி நிரந்தர தலைவர் தேர்வை நிலுவையில் வைத்திருந்தாலும், தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இருந்துவரும் சிக்கல் நீீடிக்கிறது.

சோனியா
சோனியா

2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கடந்த மே 25 -ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகத் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சரியாக 77 நாள்கள் நீடித்த இழுபறி நேற்று தற்காலிக முடிவை எட்டியுள்ளது. அதாவது, ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்பட்டு, காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் பிரச்னையைக் காரணம் காட்டி நிரந்தர தலைவர் தேர்வை நிலுவையில் வைத்திருந்தாலும், தலைவரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீீடிக்கிறது.

`காங்கிரஸ்  தலைவர் தேர்வில் தொடரும் சிக்கல்!’ - சோனியா காந்தி மீண்டும் வந்த பின்னணி

ஜே.பி.கிரிபலானி முதல் ராகுல் காந்தி வரை சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸுக்கு 18 தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். இந்த 62 ஆண்டுகளில் நேரு குடும்ப நபர்கள் 5 பேரின் தலைமையின் கீழ் மட்டும் காங்கிரஸ் ஏறத்தாழ 34 ஆண்டுகள் செயல்பட்டுள்ளது. அதிலும், ஒட்டுமொத்த காங்கிரஸ் வரலாற்றிலேயே நீண்டகாலம் (19 ஆண்டுகள்) தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைக் கொண்டவர் சோனியா காந்தி. இதில், 1978-க்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத காங்கிரஸ் தலைவர்களாக இரண்டே நபர்கள் இருந்துள்ளனர்.

பி.வி.நரசிம்ம ராவ் (1991-1996)

இந்தியாவின் முதல் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரதமரும், இந்திய பொருளாதார சீர்திருத்தத் தந்தை என்றும் அறியப்படக் கூடிய நரசிம்ம ராவ் தொடக்க காலத்தில் நேரு குடும்பத்துக்கு மிக விஸ்வாசமான நபராகக் கருதப்பட்டார். ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பின் ஆட்சி மற்றும் கட்சியின் தலைமைக்குச் சென்ற அவர், நேரு குடும்பத்தார் விரும்பாத செயல்களில் ஈடுபட்டதால், அதன் விளைவாக 1998-க்குப் பின் சோனியா தலைமையின்கீழ் அவமானப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் காங்கிரஸ் கட்சியால் கொண்டாடப்படாத தலைவராகவே இருந்துவருகிறார்.

சோனியா
சோனியா

சீதாராம் கேசரி (1996-1998)

ராவை தொடர்ந்து தலைவர் பதவிக்கு வந்த கேசரி நேரு குடும்பத்தாரின் தீவிர விசுவாசியாகக் கருதப்பட்டார். 1997-ல் சோனியா காந்தி அரசியலிக்கு வரும்போது அவரை `மீட்பர்' என்று புகழாரம் செய்தவர் கேசரி. ஆனால், அடுத்த ஆண்டே தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் கேசரி.

அவர்களும் தனித்து செயல்பட்டதன் விளைவாக பின்பு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். இதையடுத்து, தலைவர் பதவிக்கு வந்த சோனியா காந்தி இரண்டு முறை காங்கிரஸை ஆட்சிக்கட்டிலில் ஏற்றினார். மன்மோகன் சிங்கே பிரதமராக இருந்தாலும், தொடர்ந்து கட்சியின் தலைமையில் இருந்து வழிநடத்தினார். இதன்மூலம், கட்சித்தலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்த சோனியா கடந்த 2017-ம் ஆண்டு தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அதை அப்படியே ராகுலிடம் ஒப்படைத்தார்.

சோனியா
சோனியா

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள ராகுல் காந்தி அடுத்த தலைவர் தன் குடும்பத்தைச் சாராதவராக இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரியங்கா காந்தி சில நாள்களுக்கு முன் இதுகுறித்து தெரிவிக்கையில், "என்னை இதில் இழுக்க வேண்டாம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது. எனவே, அடுத்த தலைவர் நேரு குடும்பத்தைச் சாராதவராகத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் மல்லிகர்ஜுன் கார்கே, முகுல் வாஸ்னிக், சுசில் குமார் சிண்டே போன்ற பெயர்கள் வலம் வந்தன.

தற்போது சீனியர்ஸ் ஒருபக்கம், புதிய தலைவரை விரும்பும் யூத்ஸ் மறுபக்கம் எனக் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்துள்ளது. இரண்டாவது கருத்தை வலுப்படுத்தும் வகையில் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், சசி தரூர் போன்ற தலைவர்கள் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவருக்கான முடிவு எட்டப்படவில்லை. காலையில் 5 பிராந்திய குழுக்கள் அமைத்து கேட்கப்பட்ட கருத்தில் மீண்டும் சோனியா மற்றும் ராகுல் பெயர்களே வலம் வந்துள்ளன. இதையடுத்து, கட்சி சீனியர்களின் விருப்பத்தின்படி சோனியா காந்தியே இடைக்கால தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், "தங்களை யார் வழிநடத்த வேண்டும் என்பதை தேர்தல் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் முடிவெடுக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

சோனியா
சோனியா

எனவே, காங்கிரஸுக்குள்ளே புதிய தலைவருக்கான கருத்தாக்கம் உருபெற்று வருவதையும் அதற்கான தடைகளையும் உற்று நோக்கியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், மக்களவை தோல்விக்குப் பிறகு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட் மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களையும் மனதில் கொண்டு எடுக்கபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுதந்திரத்துகுப் பிந்தைய காங்கிரஸ் தலைவர்கள் பட்டியல்

1. ஜே.பி.கிரிபலானி (1947)

2. பட்டாபி சித்தராமையா (1948-1949)

3. புருஷோத்தம் தாஸ் தண்டன் (1950)

4. ஜவஹர்லால் நேரு (1951-1954)

5. யு.என்.தேபார் (1955-1959)

6. இந்திரா காந்தி (1959, 1966-1967, 1978-1984)

7. நீலம் சஞ்சீவ ரெட்டி (1960-1963)

8. கு.காமராஜ் (1964-1967)

9. எஸ். நிஜலிங்கப்பா (1968-1969)

10. ஜக்ஜீவன் ராம் (1970-1971)

11. ஷங்கர் தயால் சர்மா (1972-1974)

12. தேவகாந்த பருவா (1975-1977)

13. காசு பிரமானந்த ரெட்டி (1977-1978)

14. ராஜீவ் காந்தி (1985-1991)

15. பி.வி.நரசிம்ம ராவ் (1991-1996)

16. சீதாராம் கேசரி (1996-1998)

17. சோனியா காந்தி (1998-2017)

18. ராகுல் காந்தி (2017-2019)