Published:Updated:

மக்கள் நீதி மய்யம்: 'தலைவரும் நானே, பொதுச்செயலாளரும் நானே...' - கமலின் முடிவுக்குக் காரணம் என்ன?

மக்கள் நீதி மய்யம் புதிய நிர்வாகிகள் - கமல்
மக்கள் நீதி மய்யம் புதிய நிர்வாகிகள் - கமல் ( Makkal neethi maiam twitter page )

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருந்த கமல்ஹாசன், பொதுச்செயலாளர் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டதை `தசாவதாரம்’ படத்தில் கமல் பத்து கெட்டப்களில் நடித்ததைப்போல, கட்சியிலும் அனைத்துப் பொறுப்புகளையும் தானே வைத்துக்கொள்கிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட சமூக சேவகர்களான, செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ ஆகியோருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமையே நம் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தவகையில் சனிக்கிழமை இணையவழியாக நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிட்டுள்ளார் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கூட்டத்தில் கமல்ஹாசன், ``மண், மொழி, மக்கள் காக்க களம்கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச்செயலாளர் எனும் பொறுப்பையும் ஏற்றுப் பணியாற்றவிருக்கிறேன். புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஓர் உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அறிவிப்புகள் இனிவரும் நாள்களில் வெளியாகும்'' என்று உரையாற்றினார்.

1. பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்

2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர்

3. ஏ.ஜி.மவுரியா - துணைத் தலைவர் - கட்டமைப்பு

4. தங்கவேலு - துணைத் தலைவர் - களப்பணி மற்றும் செயல்படுத்துதல்

5. செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு

6. சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் - கட்டமைப்பு

7. சரத்பாபு - மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம்

8. ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக்குழு உறுப்பினர்

9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மேற்கண்ட புதிய நியமன அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன், புதிதாக நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றவர்கள் குறித்த சிறிய அறிமுகத்தையும் தந்தார்.

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

தேர்தலுக்குப் பின்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் சி.கே.குமரவேல், முருகானந்தம், தலைமை நிலையச் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்., சுற்றுச்சூழல் அணியின் பொறுப்பாளராக இருந்த பத்மப்பிரியா ஆகியோர் விலகினர். அதேபோல, கட்சியின் துணைத் தலைவராக இருந்த பொன்ராஜ் தற்காலிகமாக அந்தப் பதவியை ராஜினமா செய்திருந்தார். மேலும், தி.மு.க-விலிருந்து விலகி, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருந்த, பழ.கருப்பையாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. அதேபோல, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவராக இருந்த சிவ.இளங்கோ மற்றும் பொதுச்செயலாளாராக இருந்த செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் அவர்களுக்குப் பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாமல் இருந்தது . தற்போது அவர்கள் இருவருக்கும் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தவிர, ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பட்டுவந்த நிர்வாகிகள் சிலருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மேற்கண்ட நியமனங்களில், கட்சியின் தலைவராக இருந்த கமல்ஹாசன், பொதுச்செயலாளர் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. `தசாவதாரம்’ படத்தில் கமல் பத்து கெட்டப்களில் நடித்ததைப்போல, கட்சியிலும் அனைத்துப் பொறுப்புகளையும் தானே வைத்துக்கொள்கிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவருகின்றனர். இந்தநிலையில், இந்தப் புதிய நியமனங்கள் குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ள, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்,

மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.
மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.

``ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மவுரியா கட்சியின் ஆரம்பகட்ட பணிகளிலிருந்தே தலைவருடன் இருந்தவர். கட்சி குறித்த அனைத்து விஷயங்களும் அவருக்குத் தெரியும். அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கட்சிக்குக் கூடுதல் பலம். நற்பணி மன்ற நிர்வாகியாக 30 ஆண்டுக்காலம் இருந்துவந்த தங்கவேலுவும் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதுமுள்ள நற்பணி மன்ற நிர்வாகிகள் அனைவரையும் அவருக்குத் தெரியும். அவர்களை அணுகி, உற்சாகப்படுத்தி வேலை வாங்குவது எளிதாக இருக்கும். அரசியல் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருக்கிற மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா, அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் ஆகிய இருவர் குறித்து நான் சொல்ல வேண்டியதில்லை.

மகேந்திரன் முதல் பத்மப்ரியா வரை... எவிக்ட் ஆகும் பிரபலங்கள் - `பிக் பாஸ்’ கமல் நிலை என்ன?

சுற்றுப்பயணங்களின் மூலம் கட்சியின் கொள்கைகளை எடுத்துச் செல்வதில், பழ.கருப்பையா கைதேர்ந்தவர். 2011 அதிமுக-வின் வெற்றியில் அவரின் பங்களிப்பு இருக்கிறது. அதேபோல, திட்டங்கள் மற்றும் செயல்படுத்துதலில் திறமை வாய்ந்தவர் பொன்ராஜ். இவர்கள் இருவரும் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது எங்கள் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அதேபோல. பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, சிவ.இளங்கோ, செந்தில் ஆறுமுகம் இருவரும் அரசின் நிர்வாகரீதியான செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும், குற்றங்களைக் கண்டறிந்து சரியான வழியில் செயல்பட வைப்பதிலும் திறமை வாய்ந்தவர்கள். களத்திலும் சரி, கட்சியை வழிநடத்துவதிலும் சரி பொருத்தமானவர்கள் தற்போது நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

தலைவரின் நேரடிப் பார்வையில் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதால்தான், பொதுச்செயலாளர் பொறுப்பையும் அவரே எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இது மாதிரியான விஷயங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் ஓபிஎஸ் இருக்கிறார். ஸ்டாலின், திமுக-வின் செயல் தலைவராகவும் இளைஞரணிச் செயலாளராகவும் ஒரே நேரத்தில் இருந்தார். அதனால் இவர்கள் பதவி மீதுள்ள ஆசையால் இரண்டு மூன்று பதவிகளை வகித்தார்கள் என்று சொல்ல முடியாது. அதற்கான தேவை அந்தந்தக் கட்சிகளில் இருந்திருக்கும்.

சிவ.இளங்கோ & செந்தில் ஆறுமுகம்
சிவ.இளங்கோ & செந்தில் ஆறுமுகம்

கட்சி ஆரம்பிக்கப்பட்ட 14 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து, 17 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். ஆனால், இரண்டாடுகளுக்குப் பின்னால் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 7 லட்சம் வாக்குகள் அதில் குறைந்தது. அதற்கு, கூட்டணி, வேட்பாளர் தேர்வை மட்டும் நான் காரணமாகச் சொல்ல விரும்பவில்லை. இரண்டு வருடங்களில் கட்சியின் செயல்பாடு சரியாக இல்லை, கீழ்மட்டத்தில் கட்சி சரியாகச் சென்று சேரவில்லை என்கிற விமர்சனம் இருந்தது. அதைச் சரிசெய்வதற்காகத்தான் இந்தப் புதிய நிர்வாகிகள் நியமனம். மேல்மட்ட நிர்வாகிகள் மட்டுமல்ல, மாவட்ட, கிராம அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு விரைவில் வரும்'' என்கிறார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு