Published:Updated:

`துரைமுருகன் கொண்டாட வேண்டிய வெற்றியல்ல!' - வேலூரில் கதிர் ஆனந்த் கரைசேர்ந்த பின்னணி

அ.சையது அபுதாஹிர்

வேலூர் தோல் தொழிற்சாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க பக்கம் கொண்டுவருவதற்குக் கடும் முயற்சி எடுத்தனர் அ.தி.மு.க அமைச்சர்கள்.

கதிர்ஆனந்த் -ஸ்டாலின்
கதிர்ஆனந்த் -ஸ்டாலின்

வேலுார் நாடாளுமன்றத் தேர்தலில் இழுபறிக்கு இடையே கரைசேர்ந்துள்ள தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த். `கடைசி ரவுண்டு வரையில் வெற்றி பெறுவாரா?' என்கிற பரபரப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது.

வேலுார் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும் அ.தி.மு.க சார்பில் ஏ.சி.சண்முகமும் களத்தில் நின்றனர். கூட்டணிக் கட்சிகளை கண்டுகொள்ளாமல் தி.மு.க- அ.தி.மு.க என இரண்டு தரப்புமக்குமிடையே நடைபெறும் தேர்தலாகவே தேர்தல் களத்தை வைத்திருந்தனர். தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதிலுமிருந்து பொறுப்பாளர்களைக் களமிறக்கினார் ஸ்டாலின். தி.மு.க-வின் மூத்த நிர்வாகியான துரைமுருகன், `என் மகனின் வெற்றியைத் தலைவரின் பொறுப்பில் ஒப்படைக்கிறேன்' எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான், நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க கூட்டணி அபார வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற அனைத்து இடங்களிலும் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தன.

அறிவாலயத்தில் கொண்டாட்டம்
அறிவாலயத்தில் கொண்டாட்டம்

இந்நிலையில், வேலூர் தேர்தல் அறிவிக்கபட்டதும் அ.தி.மு.க தரப்பு இந்தத் தொகுதியைக் கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டியது. வேலுார் பகுதியைச் சேர்ந்த முகமது ஜானை ராஜ்யசபாவுக்கு அனுப்பியது. காரணம், வேலூரில் கணிசமாக இருக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள். ஆனால், தி.மு.க தரப்போ, `பி.ஜே.பி-யுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரிக்கப்போகிறீர்களா?' எனக் கேள்வி எழுப்பியது.

இதனால், வேலுார் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வைப் புறம்தள்ளி வைத்தது அ.தி.மு.க. ஆனாலும், பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே முத்தலாக் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர் ரவீந்தரநாத் ஆதரித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒருவழியாக அனைத்தையும் சமாளித்து, வேலூர் தோல் தொழிற்சாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க பக்கம் கொண்டுவர கடும் முயற்சி எடுத்தனர் அ.தி.மு.க அமைச்சர்கள். நிலோபர் கபில், முகமது ஜான், அன்வர்ராஜா போன்ற இஸ்லாமியர்களை வைத்து அவர்களது வாக்குகளை இழுக்க முயன்றனர். அதற்கு ஓரளவு ரெஸ்பான்ஸ் கிடைத்தாலே, வேலூர் கோட்டையில் அ.தி.மு.க கொடி பறக்கும் என அமைச்சர்கள் நினைத்தனர்.

தேர்தல் பிரச்சார களத்தில் ஸ்டாலின்
தேர்தல் பிரச்சார களத்தில் ஸ்டாலின்

வேலுார் தொகுதிக்கான வாக்குப்பதிவு 5-ம் தேதி நடைபெற்றது. காலை 8-மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மந்தமாக நடந்தது. முதல் ஒரு மணிநேரத்தில் பல இடங்களில ஒற்றை இலக்க சதவிகிதத்தையே தாண்டாமல் இருந்தது. இதனால், `ஆளுங்கட்சிக்குச் சாதகமாக வேலூர் தேர்தல் நிலவரம் இருக்கிறது' என்று உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.

ஆனால், 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச ஆரம்பித்தார். அடுத்த சில நிமிடங்களில், `காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து, காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது' என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை மையமாக வைத்து,`வேலூர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பில்லாமல் போய்விடும்' என வாக்குப்பதிவு நேரத்தில் தகவல் பரப்பப்பட்டது.

அமித் ஷா
அமித் ஷா

இதன் காரணமாக, நண்பகல் 1 மணிவரையில் வேலூர் தொகுதியில் வாக்கு சதவிகிதம் 29.4 என்று இருந்தது. ஆனால், அடுத்த மூன்று மணிநேரத்தில் 59 சதவிகிதத்தையும் இறுதியாக 72 சதவிகிதம் என்கிற இறுதி இலக்கத்தையும் எட்டியது. வெறும் நான்கு மணிநேரத்தில் இந்த மாற்றம் நடந்தது. வாக்களிக்க விரும்பாமல் இருந்தவர்களும்கூட கடைசிநேரத்தில் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர். இதனால், `ஏ.சி.சண்முகத்துக்குச் சாதகமாக இருந்த தேர்தல் களம் கடைசி நேரத்தில் மாறிவிட்டது' என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். வாக்கு எண்ணிக்கையின்போதும் இதே நிலையே நீடித்தது. முதல் சில ரவுண்டுகளில் 10,000-க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார் ஏ.சி.எஸ்.

``இஸ்லாமியர்கள் நிறைந்த ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான வாக்குகள் கதிர் ஆனந்துக்குக் கிடைத்துள்ளன. அதேநேரம், இந்த வெற்றியைத் துரைமுருகனுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்க முடியாது. இத்தனை ஆண்டுக்காலமாக வேலூர் மாவட்டத்தில் கோலோச்சியவர், தன் மகனை வெற்றி பெற வைக்கக் கடுமையாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதுதான் மிக முக்கியமானது" என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.