Published:Updated:

மணல் கூட்டு; ரவுடிகள் துணை; அனைத்துக்கும் விலை! - முகவையின் `நிரந்தர' அமைச்சரை நீக்கிய எடப்பாடி

தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்களின் கால்களைச் சுற்றிவந்த மணிகண்டன் அமைச்சரானதும் அதே கட்சிக்காரர்களின் கழுத்தில் கை வைக்கத் தொடங்கினார்.

மணிகண்டன்
மணிகண்டன்

`முகவையின் முடிசூடா மன்னர்' எனவும், `முகவையின் நிரந்தர அமைச்சர்' எனவும் தனது ஆதரவாளர்களால் புகழ்பாடப்பட்ட அமைச்சர் மணிகண்டன், தனது பதவியைப் பறிகொடுத்திருக்கிறார். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அமைச்சர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் தட்டிக் கொடுத்துவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது எடுத்த அதிரடி முடிவை வரவேற்றுள்ளனர், ராமநாதபுரம் அ.தி.மு.க-வினர்.

அரசு விழாவில் மணிகண்டன்
அரசு விழாவில் மணிகண்டன்
உ.பாண்டி

சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வெற்றிபெற்று முதன் முறையாக அமைச்சர் ஆனவர், டாக்டர் மணிகண்டன். கட்சியில் மிகவும் இளையவரான மணிகண்டனுக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பு, அவரை நிலைகொள்ளவிடாமல் செய்தது. அதன் காரணமாகவே இன்று தனது பதவியைப் பறிகொடுத்து நிற்கிறார் என்கின்றனர், அ.தி.மு.க தொண்டர்கள்.

கட்சிக்காக உழைத்த பலர் வரிசையில் காத்திருக்க, சசிகலா குடும்பத்தின் தயவுடன் சீட் வாங்கி, தேர்தலில் வென்று, அமைச்சர் பதவியை அடைந்ததோடு கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், 6 மாதங்களுக்குள்ளாகவே மா.செ பதவியை இழந்தார். தற்போது, அமைச்சர் பதவியை இழந்ததன் பின்னணி குறித்து அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தபோது, அவர்கள் அடுக்கிய காரணங்கள் இவை.

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி! - அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி

தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்களின் கால்களைச் சுற்றிவந்த மணிகண்டன், அமைச்சரானதும் அதே கட்சிக்காரர்களின் கழுத்தில் கை வைக்கத் தொடங்கினார். இதனால் உண்மையான கட்சிக்காரர்கள் பலர் மனம் வெறுத்து, கட்சியை விட்டு வெளியேறினர். இதன் பின்னரும் கட்சியில் நீடித்த சீனியர்களைப் பொது இடங்களிலும் கட்சிக் கூட்டங்களிலும் அவமதிக்கும் வகையில் பேசுவதையும் மிரட்டுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் பொதுமக்களிடையேயும் கட்சிக்கென இருந்த செல்வாக்கு சரிந்தது. அதன் வெளிப்பாடாக, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வியைத் தழுவினார்.

வெடி வைத்துக் கொண்டாடும் அ.தி.மு.க-வினர்
வெடி வைத்துக் கொண்டாடும் அ.தி.மு.க-வினர்
உ.பாண்டி

`தொகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளுக்கும் தான் ஒருவனே காரணம்' என இருமாப்புடன் நடந்துகொள்வது, அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என அனைவரையும் தரக்குறைவாக நடத்துவது, `தன்னை மீறி மாவட்டத்தில் எதுவும் நடக்கக் கூடாது' என உத்தரவிடுவது என அவரது செயல்கள் அத்துமீறிக்கொண்டே இருந்தன.

அரசின் ஒப்பந்தப் பணிகள், கூட்டுறவு சங்கப் பதவிகள் என அனைத்துக்கும் 'விலை' நிர்ணயித்தார். மாற்றுக்கட்சிக்காரர்களைக் கூட்டாளியாக்கிக்கொண்டு மணல் கொள்ளைக்குத் துணை நிற்பது, ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை எல்லாம் தனக்குத் துணையாக வைத்துக் கொண்டு சொந்தக் கட்சிக்காரர்களைத் தூக்கிவீசுவது என மணிகண்டனின் தர்பார் கொடிகட்டிப் பறந்தது.

மாவட்டத்தில் காட்டிய தனது சித்து விளையாட்டுகளை மாநில தலைமையிடமும் காட்ட முயன்றதன் விளைவாக, அவரது கட்டுப்பாட்டின்கீழ் இருந்த அரசு கேபிள் டி.வி நிறுவனத் தலைவர் என்ற பதவியை இழந்தார். இதனால் மனக்குமுறலுக்கு உள்ளான மணிகண்டனுக்கு வினையாக அமைந்தது, அவர் அளித்த பேட்டி ஒன்று. '' கேபிள் டி.வி நிறுவனத் தலைவர் நியமனம் குறித்து என்னிடம் முதல்வர் கலந்துரையாடவில்லை'' என்று கூற, அது அப்படியே எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்குச் சென்றது.

மணிகண்டனை வாழ்த்தும் ஃபிளெக்ஸ்
மணிகண்டனை வாழ்த்தும் ஃபிளெக்ஸ்

` மணிகண்டன் மீது கூறப்பட்ட புகார்களை எல்லாம் பொறுத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தன்மீதே புகார் கூறியதை ரசிக்கவில்லை. இதன் காரணமாக, முதல்முறையாகத் தனது அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை அகற்றி, ஆளுமையைக் காட்டிவிட்டார்' என உற்சாகப்படுகின்றனர் முகவை அ.தி.மு.க-வினர்.