Published:Updated:

`எடப்பாடிக்கு எதிரான டெல்லி லாபி!' - பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட் பின்னணி

ஆ.விஜயானந்த்

தேர்தலின்போது பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கிவிட்டுப் பிரசாரத்தைத் தொடங்கினார் ரவீந்திரநாத். உங்களுக்கு ஆதரவாக இருந்ததால்தான் தேனியில் அவரால் வெற்றி பெற முடிந்தது.

பன்னீர்செல்வம், அமித் ஷா, ஜெ.பி.நட்டா
பன்னீர்செல்வம், அமித் ஷா, ஜெ.பி.நட்டா

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். `எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லாபியை வலுவாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். தன்னுடைய மகனுக்கு அமைச்சர் பதவி கிடைப்பது தள்ளிப் போய்க்கொண்டிருப்பது குறித்தும் விவாதித்திருக்கிறார்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி நிறைவுற்றது. கூட்டத் தொடரின் இறுதிநாளில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன்பிறகு வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க. தேர்தல் பணிகளுக்காக 209 பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் நாம் வலுவாக இருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும். அதற்கேற்ப வியூகங்களை வகுத்துக்கொள்ளுங்கள்' எனத் தலைமை அறிவுறுத்தியுள்ளதால் ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டு வருகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அதேநேரம், வேலூர் தேர்தல் பரபரப்பில் இருந்து விலகி டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.

பன்னீர்செல்வத்தின் தற்போதைய டெல்லி பயணம் எதற்காக?

"கடந்த சில ஆண்டுகளாக முதுகுத் தண்டுவடத்தில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வருகிறார் பன்னீர்செல்வம். இதற்காக கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்காக இரண்டு மாதங்களுக்கொருமுறை கோவை சென்று வருகிறார். தற்போது மேல் சிகிச்சை எடுப்பது தொடர்பாக டெல்லி சென்றிருக்கிறார் என்ற தகவல் சொல்லப்பட்டாலும், இது முழுக்கவே அரசியல் தொடர்பான பயணம்தான்" என விவரித்த பா.ஜ.க முன்னணி நிர்வாகிகள் சிலர்,

"நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற்ற பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லாபியைக் கட்டமைத்துவருகிறார் ஓ.பி.எஸ். தற்போது நடந்து வரும் சந்திப்பிலும், தன்னுடைய விசுவாசத்தைக் காட்டும்விதமாக சில விஷயங்களை முன்வைத்துள்ளனர் பன்னீர்செல்வம் தரப்பினர். பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசும்போது, `நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்ந்ததால்தான் தோல்வியுற்றோம் என அ.தி.மு.க-வில் உள்ள சிலர் பேசி வருகின்றனர். மோடி இமேஜ் மைனஸ் ஆகிவிட்டதால்தான் தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்டது எனவும் சொல்கின்றனர். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. தேர்தலின்போது பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கிவிட்டுப் பிரசாரத்தைத் தொடங்கினார் ரவீந்திரநாத். உங்களுக்கு ஆதரவாக இருந்ததால்தான் தேனியில் அவரால் வெற்றி பெற முடிந்தது.

நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம்
நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம்

கொங்கு மண்டலத்தில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களும் உங்களை முன்னிறுத்திப் பிரசாரத்தை வழிநடத்தியிருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்பார்கள். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். இப்போது உங்களை மைனஸ் எனக் கூறிவருகின்றனர். பா.ஜ.க-வுக்குப் பெரியளவில் வாக்குவங்கி இருக்கிறது. சில கட்சிகளை எங்களோடு கூட்டணிக்குள் சேர்த்ததால்தான் மேற்கு மண்டலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அந்தக் கட்சிகளின் மீது மக்களுக்கு உள்ள எதிர்ப்பு, கொங்கு மண்டல அமைச்சர்கள் மீதான எதிர்ப்பு ஆகியவவைதான் தோல்விக்கான முக்கிய காரணங்கள். பா.ஜ.க மீதான மக்களின் எதிர்ப்பால்தான் வீழ்ந்தோம் எனச் சிலர் அமைச்சர்களைத் தூண்டிவிட்டுப் பேச வைக்கின்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதுதான் உண்மை. அவர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தெளிவாகப் பேசி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, முக்கிய கோரிக்கையான ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்தும் பேசப்பட்டுள்ளது" என விவரித்தவர்கள்.

"தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியலைச் செய்து வருகிறது தி.மு.க. பன்னீர்செல்வத்தின் பாதையைப் பின்பற்றி பா.ஜ.க ஆதரவுக்குள் வருவதுதான் எடப்பாடிக்கும் லாபமாக இருக்கும். மாறாக, பா.ஜ.க-வை எதிர்க்கக் கூடிய வேலைகளைச் செய்தால் அ.தி.மு.க உடையக் கூடிய சூழல் உருவாகும் என்பதையும் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து வைத்திருக்கிறார். ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவியைக் கொடுப்பதன் மூலமாக தமிழக பா.ஜ.க-வுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே அதற்கான பணிகள் வேகம் பெறும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வைப் பயன்படுத்தி தமிழகத்தில் வளர்வதைப் பற்றி டெல்லியிலும் ஆலோசனை நடந்துவருகிறது. இந்தப் பணிகளுக்கு பன்னீர்செல்வம் பக்கபலமாக இருப்பார் எனவும் டெல்லி நம்புகிறது. அதற்கேற்ப, `நான் பா.ஜ.க ஆள்' என்பதைப் பலமுறை நினைவூட்டிக்கொண்டே வருகிறார் ஓ.பி.எஸ். அமைச்சர் பதவி தொடர்பான கோரிக்கைக்குப் பதில் அளித்த டெல்லியும், `சற்று பொறுமையாக இருங்கள்' எனக் கூறிவிட்டது. பன்னீர்செல்வத்தின் டெல்லி லாபி ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதா என்பதை அடுத்து வரக் கூடிய நாள்களில் பார்க்கலாம்" என்றார் இயல்பாக.