Published:Updated:

சசிகலாவுக்கு மகன் மூலம் தூது?; ஒரே சமுதாயப் பிணைப்பு! - ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்?

ஓ.பி.எஸ்

சசிகலா சென்னை வந்தது முதல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எங்கிருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு வெளியே தலைகாட்டாமல் இருக்கிறார். `அண்ணன் எங்க இருக்கிறார்... ஏதும் பிரச்னையா?’ என அவரது சகாக்களிடம் விசாரித்தோம்.

சசிகலாவுக்கு மகன் மூலம் தூது?; ஒரே சமுதாயப் பிணைப்பு! - ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்?

சசிகலா சென்னை வந்தது முதல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எங்கிருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு வெளியே தலைகாட்டாமல் இருக்கிறார். `அண்ணன் எங்க இருக்கிறார்... ஏதும் பிரச்னையா?’ என அவரது சகாக்களிடம் விசாரித்தோம்.

Published:Updated:
ஓ.பி.எஸ்

காசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி, மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையை முடித்துக்கொண்டு சென்னைக்கும் வந்துவிட்டார். வழிநெடுக வரவேற்பு கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடிக்க, தேனி நிர்வாகி ஒருவர், `சசிகலாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள்’ என டி.ஜி.பி-க்கு கோரிக்கை மனுவே அனுப்பினார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

`கட்சி கட்டுப்பாடோடுதான் இருக்கிறது. சசிகலா வருகையால் எந்தச் சலசலப்பும் கட்சிக்குள் இல்லை’ என அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் கூறும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எங்கிருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு `சைலன்ட் மோடு’ போட்டுக்கொண்டு அமைதியாகிவிட்டார். `இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ...’ எனச் சந்தேகத்துடனேயே ஓ.பி.எஸ் பற்றிப் பேசிவருகின்றனர் கட்சி நிர்வாகிகள்.

ஜெயபிரதீப் முகநூல் பதிவு
ஜெயபிரதீப் முகநூல் பதிவு

அ.தி.மு.க-வினர் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிவந்த நேரத்தில், கடந்த ஜனவரி 28-ம் தேதி, ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்திருந்தார்.

`நலம் பெற வாழ்த்துகள்’ எனத் தலைப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கையில், `சசிகலா அவர்கள் பூரண குணமடைந்து, இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலன் பெற்று, அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி, மன நிம்மதியுடன், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

இது குறித்து ஜெயபிரதீப்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, `மனிதாபிமான அடிப்படையில்தான் அவரை வாழ்த்தினேன்’ எனக் கூறினார். அதையேதான் அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியிருந்தார்.

ஜெயபிரதீப்பின் அறிக்கை அ.தி.மு.க-வுக்குள் பூகம்பத்தையே ஏற்படுத்திவிட்டது. அதை வெளியில் தெரியாமல் சமாளித்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும். `சசிகலாவுக்கு தனது மகன் மூலம் தூதுவிடுகிறாரா ஓ.பி.எஸ்?’ என்று வெளிப்படையாகவே கட்சி நிர்வாகிகள் பேச ஆரம்பித்தனர். இவை எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், பிரசார வேலைகளில் பிஸியாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார் எடப்பாடி.

அ.தி.மு.க | இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
அ.தி.மு.க | இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

எடப்பாடி பழனிசாமி, ஊர் ஊராகப் பிரசார வாகனத்தில் பறந்துகொண்டிருக்க, ஓ.பி.எஸ் ஏன் இன்னும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை என அவரது சகாக்களிடம் கேட்டோம். ``எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். அதனால் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். ஓ.பி.எஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையே... இவர் எதற்காக இப்போதே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்? தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்வார்” என்றனர் இயல்பாக.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.

சமீபத்தில், தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வத்திடம், `நீங்கள் ஏன் இன்னும் பிரசாரத்தைத் தொடங்கவில்லை?’ எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர், `உரிய நேரத்தில், உரிய முறையில் நான் பிரசாரத்தைத் தொடங்குவேன்’ என அழுத்தமாகக் கூறிவிட்டு, புன்னையோடு நகர்ந்து சென்றுவிட்டார் ஓ.பி.எஸ்! அந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பதை அவர் மட்டுமே அறிவார்.

தனித்தனியாக நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுப்பது, வீடியோக்கள் எடுப்பது என எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருக்கும் பனிப்போரை அவ்வப்போது வெளிக்காட்டியேவருகின்றனர்.

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.
சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.

`முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதே சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலாவிடம் எளிதாக ஒட்டிவிடுவார்’ எனக் கூறும் சில அ.ம.மு.க நிர்வாகிகள், `சசிகலா- ஓ.பி.எஸ் இணைப்பை யாராலும் தடுக்க முடியாது. எப்போது அது நடக்கும் என்பதுதான் இங்கே எதிர்பார்க்கப்படும் விஷயம்’ என்கின்றனர். பெரியகுளத்திலும் இப்படியான பேச்சுகளை அ.தி.மு.க நிர்வாகிகளிடம் நம்மால் கேட்க முடிகிறது.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்

சசிகலா பற்றி ஒரு வார்த்தைகூட ஓ.பி.எஸ் இதுவரை பேசியது இல்லை என்பதை இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. மகன் மூலம் `அறிக்கை தூது’ என வைத்துக்கொண்டாலும், சமுதாயப் பிணைப்பு என வைத்துக்கொண்டாலும், எடப்பாடியுடன் இணக்கமின்மை என வைத்துக்கொண்டாலும் இன்னும் ஏன் சசிகலா பற்றிய தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதைத் தள்ளிப்போடுகிறார் ஓ.பி.எஸ் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

`ஆட்சி முடியும் தறுவாயில் இருக்கிறது. கொடுக்கப்பட்ட அரசு கான்ட்ராக்ட் சமாசாரங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தேர்தல் பணிகளுக்கான செலவீனங்களை ஒதுக்க வேண்டும்’ போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், சசிகலாவுடன் தினகரன் இருப்பதுதான், ஓ.பி.எஸ் தனது அடுத்த நகர்வை எடுத்து வைக்காததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

`கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு நான்!’ இதுவே ஓ.பி.எஸ்-ஸின் திட்டமாம். இடையில் இடைஞ்சலாக இருப்பது தினகரன் மட்டுமே. தனது காரில் அ.ம.மு.க கொடியைக் கட்டாமல், அ.தி.மு.க கொடியைக் கட்டிவந்த சசிகலாவும் அதையே வெளிப்படுத்தியிருக்கிறார் என்கின்றனர். சசிகலா சந்திப்பை எப்படிச் சாத்தியமாக்குவது, அதற்கு முன்னால் செய்ய வேண்டிய காய்நகர்த்தல்கள் என்னென்ன, எடப்படி பழனிசாமியை எப்படிக் கையாளுவது போன்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.

அ.தி.மு.க-வுக்குள் புயலைக் கிளப்பவே அமைதியாக இருக்கிறாரா ஓ.பி.எஸ்?