Published:Updated:

சாலை வரி கோரிக்கை... 100% பயணிகள்! - தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம் எப்போது?

ஆம்னி பேருந்து நிலையம்
ஆம்னி பேருந்து நிலையம்

அரசு அனுமதி அளித்திருந்தாலும், `தனியார் பேருந்துகள் செப்டம்பர் 30 வரை ஓடாது’ என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களாகப் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களை எட்டு மண்டலங்களாகப் பிரித்து பேருந்துகள் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கவும், பேருந்து சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது.

தனியார் பேருந்துகள்
தனியார் பேருந்துகள்

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவையைத் தொடங்கியது தமிழக அரசு. செப்டம்பர் 07-ம் தேதி முதல், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என்ற உத்தரவையும் அரசு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 800-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. சாதாரணமான நாள்களில் 3,200 பேருந்துகள் வரை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்னி பேருந்துகள் ஓடாது..!

இந்த நிலையில், அரசு அனுமதி அளித்திருந்த போதிலும், தனியார் பேருந்துகள் ஓடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 4,000-க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. இந்தப் பேருந்துகளை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனர்.

ஆம்னி பேருந்துகளை 50 சதவிகித பயணிகளுடன்தான் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, பேருந்துகள் இயக்கப்படாத கடந்த ஆறு மாத காலத்துக்குமான சாலை வரியைக் கட்ட அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இந்தச் சாலை வரி தொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

தனியார் பேருந்துகள்
தனியார் பேருந்துகள்

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெற்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், ``தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டு காலாண்டு (ஆறு மாதம்) சாலை வரியைப் பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆம்னி பேருந்துகளில் 100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க பிற மாநிலங்களைப்போல் தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன வசதியுள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்.

தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பேருந்துகளை இயக்கப் போவதில்லை" என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஓடாது எனத் தெரியவருகிறது.

மேலும், செப்டம்பர் 24 -ம் தேதி நடைபெறவிருக்கும் வழக்கு விசாரணை முடிவைப் பொறுத்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது!

அடுத்த கட்டுரைக்கு