Published:Updated:

`அன்புமணி எம்.பி ஆகட்டும்; பொறுத்திருங்கள்!' - படையாச்சியார் படத்திறப்பு விழாவுக்காக மௌனம் காத்த எடப்பாடி

ராமசாமி படையாச்சியார் படத்திறப்பு விழா
ராமசாமி படையாச்சியார் படத்திறப்பு விழா

எடப்பாடிக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தலைமைச் செயலகம் வந்திருந்தார் அன்புமணி. அவர் நன்றி தெரிவித்துவிட்டுச் சென்ற மறுகணமே, 5 அமைச்சர்களை அழைத்தார் முதல்வர்.

சட்டமன்றத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் உருவப் படத்தைத் திறந்து வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட்டைக் கொடுத்த மறுநிமிடமே படையாச்சியார் உருவப்படம் தொடர்பான பணிகளை வேகப்படுத்தினார் எடப்பாடி' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

ராமதாஸ்
ராமதாஸ்

தமிழக அரசியல் வரலாற்றில் ராமசாமி படையாச்சியாருக்குத் தனி இடம் உண்டு. 1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உழைப்பாளர் பொதுநலக் கட்சியைத் தொடங்கினார் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி. அந்தத் தேர்தலில் வடமாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து 19 சட்டமன்றத் தொகுதிகளையும் 4 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றினார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் காமராஜரால் ஆட்சியமைக்க முடியவில்லை.

இதையடுத்து, வெளியில் இருந்து ஆதரவு கொடுத்ததால் ராஜாஜி முதல்வர் ஆனார். அடுத்து வந்த நாள்களில் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவி விலகினார் ராஜாஜி. இதையடுத்து, தூதுவரை அனுப்பி ராமசாமி படையாச்சியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் காமராஜர். இதன் தொடர்ச்சியாக அரியணையில் காமராஜர் ஏறுவதற்கும் முக்கியக் காரணமாக இருந்தார். சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் சமூகநீதியைச் செயல்படுத்தியவராகவும் பார்க்கப்பட்ட எஸ்.எஸ்.ஆரின் உருவப்படத்தை நேற்று திறந்து வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

`` ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டபத்தைக் கடலூரில் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தின் தலைவராக சந்தானத்தையும் நான்கு பேரை உறுப்பினர்களாகவும் நியமித்தார். இதன்பிறகு, இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. படையாச்சியாரின் உருவப் படத்தைச் சட்டமன்றத்தில் திறப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. காரணம், ராமசாமி படையாச்சியாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை ராமதாஸ் விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியின் முக்கிய நிபந்தனையாகவும் இதை முன்வைத்தது பா.ம.க" என விவரித்த வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கத்தின் தலைவர் சி.ஆர்.ராஜன்,

படத்திறப்பு விழாவில் சி.ஆர்.ராஜன்
படத்திறப்பு விழாவில் சி.ஆர்.ராஜன்

``கூட்டணியின்போது பா.ம.க வைத்த நிபந்தனைகளை அ.தி.மு.க-வும் ஏற்றுக் கொண்டது. காரணம், ராமதாஸின் கோபத்துக்கு ஆளாகிவிட வேண்டாம் என்பதால்தான். இதை விரும்பாத நாங்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட ஆளும்கட்சியின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்துத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தோம். முதல்வரும், `ராஜ்யசபா தேர்தல் முடியட்டும்' எனக் காத்திருந்தார். பா.ம.க-வுக்கு ஓர் இடத்தையும் ஒதுக்கினார்.

தன்னைத் தவிர வேறு யாருக்கும் பெயர் வந்துவிடக் கூடாது என ராமதாஸ் நினைத்ததுதான் பணிகள் தொய்வடையக் காரணமாக இருந்தன.
சி.ஆர்.ராஜன்

அதற்கான சான்றிதழைக் காட்டி எடப்பாடிக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தலைமைச் செயலகம் வந்திருந்தார் அன்புமணி. அவர் நன்றி தெரிவித்துவிட்டுச் சென்ற மறுகணமே, 5 அமைச்சர்களை அழைத்தார் முதல்வர். அவர்களிடம், படையாச்சியார் படத்திறப்பு விழாவுக்கான வேலைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார். இதை ராமதாஸின் கவனத்துக்கும் அவர் கொண்டு செல்லவில்லை. படத்திறப்பு விழா இறுதி வடிவத்துக்கு வந்த பிறகே பா.ம.க தலைமைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அன்புமணியும் கலந்து கொண்டார்.

`அவள் உன்னுடன் வர சம்மதித்துவிட்டாள்!’ - நம்பிச் சென்ற கோடீஸ்வரர்;  நடுக்கடலில் வைத்து தீர்த்த பெண் வழக்கறிஞர்

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் முயற்சியால்தான் படையாச்சியார் உருவப்படத் திறப்பு விழா சாத்தியமானது. எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி உள்ளிட்ட 5 அமைச்சர்களும் உறுதுணையாக இருந்தனர். கடலூரில் மணிமண்டபப் பணிகளும் விரைவாக நடந்தன. தன்னைத் தவிர வேறு யாருக்கும் பெயர் வந்துவிடக் கூடாது என ராமதாஸ் நினைத்ததுதான் பணிகள் தொய்வடையக் காரணமாக இருந்தன. அன்புமணிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைக் கொடுத்ததும் பா.ம.க அமைதியாகிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் வன்னிய சமூக வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும் எனவும் அ.தி.மு.க தலைமை எதிர்பார்த்தது. அவை எதுவும் நிறைவேறவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்று, எஸ்.எஸ்.ஆர் படத்திறப்பு விழாவை தமிழக அரசு முன்னெடுத்ததை பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்" என்றார் உற்சாகத்துடன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளிடம் பேசினோம். ``படையாச்சியார் படத்திறப்பு விழா முயற்சியை ராமதாஸால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழக அரசு உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி அவரும் ஏற்றுக்கொண்டுவிட்டார். இதுகுறித்து அமைச்சர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ` கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் செய்யாத காரியம் இது. வடமாவட்டங்களில் 19 எம்.எல்.ஏ தொகுதிகளை ஜெயித்துக் காட்டியவர் எஸ்.எஸ்.ஆர். ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைவதற்கு அவர்தான் உறுதுணையாக இருந்தார்.

வடமாவட்டங்களில் செல்வாக்காக இருந்த படையாச்சியாருக்கு அங்கீகாரம் கொடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. இதை அந்தச் சமூகத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அந்தஸ்தை வேறு எந்த முதல்வரும் அளிக்கவில்லை. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள். பா.ம.க நம்முடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். அவர்கள் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் அந்தச் சமூகத்தின் வாக்குகளை நம்பக்கம் கொண்டு வர வேண்டும். இதை வடமாவட்டங்களில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, உங்களுக்கு இருக்கிறது' எனக் கூறினார். அடுத்ததாக, மணிமண்டபம் திறப்பு, பொதுச் சொத்து நல வாரியத்துக்கு நிர்வாகிகளை நியமிப்பது எனப் பணிகளைத் துரிதப்படுத்த இருக்கிறார் முதல்வர்" என்கின்றனர் இயல்பாக.

அன்புமணி
அன்புமணி

ராமதாஸ் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நம்மிடம் பேசிய பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலி மணியன், ``எங்கள் மீது சொல்லப்படும் எத்தனையோ அவதூறுகளில் இதுவும் ஒன்று. சாதி மதங்களைக் கடந்து சமூகநீதிக்காகப் போராடியவர் ராமசாமி படையாசியார். காமராஜர் ஆட்சி முதன்முதலாக அமைவதற்கு மூல காரணமாக இருந்தவர். அன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் ஆள்வதா, காங்கிரஸ் ஆள்வதா என்ற முடிவு வரும்போது, காங்கிரஸை முன்வைத்தவர் எஸ்.எஸ்.ஆர்.

சொல்லப்போனால் கம்யூனிஸ்ட் ஆட்சியை அமையவிடாமல் தடுத்தவர். அவருக்குச் சிறப்பு செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தது. இந்த முடிவை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். `சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கால் வைக்க மாட்டேன்' எனச் சத்தியம் செய்திருக்கிறார் மருத்துவர் அய்யா. அதனால்தான் நேற்றைய நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை. அரசு செய்யும் நல்ல காரியத்துக்காக வேறு ஒரு சாயம் பூசப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ம.க மீது அவதூறு கிளப்புவதற்காகவே இப்படியெல்லாம் பேசுகிறார்கள்" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு