Published:Updated:

எதிராகக் களமிறங்க சீமான், குஷ்பு, ஜெயக்குமார் ரெடி... ஈஸி டார்கெட் ஆகிறாரா ஸ்டாலின்?#TNElection2021

ஸ்டாலின்
News
ஸ்டாலின்

`சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடத் தயார்’ என்று சீமான், குஷ்பு, ஜெயக்குமார் ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள். இவர்கள் இப்படிச் சொல்வதன் நோக்கம் என்ன, ஸ்டாலின் என்ன அவ்வளவு ஈஸியான டார்கெட்டா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சூறாவளியாகச் சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தில் இல்லாத நிலையில், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடுவது என்கிற முனைப்பில் ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார். மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் அ.தி.மு.க இருக்கிறது.

சீமான்
சீமான்

இந்தநிலையில், திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். கடந்த டிசம்பர் மாதம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுநாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது, `வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன்’ என்றும் அவர் அறிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேலும் அவர், ``எந்தத் தொகுதியில் ஸ்டாலின் களமிறங்கினாலும், அங்கு நான் போட்டியிடுவது உறுதி. இந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு மாற்று அ.தி.மு.க இல்லை. நாம் தமிழர் கட்சிக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி. அ.தி.மு.க எதிர்க்க வேண்டிய கட்சியே அல்ல” என்று சீமான் கூறினார். `அ.தி.மு.க-வைக் காட்டிலும் தி.மு.க-வையே கடுமையாகத் தாக்குகிறார்’ என்கிற சீமான் மீதான விமர்சனத்துக்கு வலுசேர்க்கும் வகையில், அவரது இந்த அறிவிப்பு இருந்தது.

குஷ்பு
குஷ்பு

சீமான் மட்டுமல்ல, சமீபத்தில் நடிகை குஷ்புவும் இதே போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் பா.ஜ.க-வுக்குச் சென்ற குஷ்பு, கட்சிப் பணியில் தீவிரமாக இருக்கிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பா.ஜ.க-வின் பொறுப்பாளராகச் செயல்பட்டுவருகிறார். காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்ததைவிட, பா.ஜ.க-வுக்கு வந்த பிறகு கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

அந்த அளவுக்குக் களத்தில் இறங்கி வேலை செய்துவரும் குஷ்புவிடம் தேர்தலில் போட்டியிடுவது குறித்துக் கேட்கப்பட்டபோது, `ஒவ்வொரு தேர்தலிலும் இந்தக் கேள்வியை எதிர்கொள்கிறேன். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அந்தத் நேரத்தில் முடிவுசெய்வோம்’ என்று கூறியிருந்தார். அதன் பிறகு மதுரையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற குஷ்பு, `யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பா.ஜ.க இல்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிடவும் தயாராக இருக்கிறேன்’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடத் தயார்’ என்று சீமானும் குஷ்புவும் அறிவித்திருந்த நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்தார். சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், ``ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிட ஸ்டாலின் தயாரா?’’ என சவால்விடும் வகையில் பேசினார்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

`இவர்கள் எல்லோரும் ஏன் ஸ்டாலினைக் குறிவைக்கிறார்கள்... இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?’ என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் எழுப்பினோம். ``ஒரு பெரிய தலைவருக்கு எதிராகப் பேசினால், தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற யுக்திதான் இது. குஷ்புவைப் பொறுத்தவரையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். அவருக்கு சீட் கிடைக்கவில்லை. பா.ஜ.க-வுக்கு சென்றுவிட்ட பிறகு, வருகிற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வேட்பாளராகிவிட வேண்டும் என்று முயன்றுவருகிறார்.

இப்படி ஏதாவது தடாலடியாகப் பேசினால், தன்மீது கவனம் திரும்பும் என்று குஷ்பு நினைக்கிறார். `ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிடத் தயார்’ என்ற மற்றவர்களின் அறிவிப்புகளையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். `ராயபுரத்தில் ஸ்டாலின் போட்டியிடத் தயாரா?’ என்று கேட்கும் ஜெயக்குமார், கொளத்தூரில் போய் போட்டியிடலாமே?” என்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

இது பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம். ``ராயபுரத்தில்தான் ஜெயக்குமார் போட்டியிடுவார். ஆனால், அதை அ.தி.மு.க-வின் தலைமைதான் அறிவிக்க வேண்டும். தலைமை அறிவித்த பிறகு, ஸ்டாலினுக்கு அவர் சவால் விடுக்கலாம். அதேபோல, குஷ்பு தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி பா.ஜ.க தலைவர் எல்.முருகன்தான் அறிவிக்க வேண்டும். எனவே, இவர்கள் இருவரின் அறிவிப்புகளையும், அவர்கள் தங்களுக்கு விளம்பரம் தேடுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

ஆனால், இவர்களைப்போல சீமானைப் பார்க்க முடியாது. சீமான் ஒரு கட்சியின் தலைவர். அந்தக் கட்சியில் முடிவெடுக்கக்கூடியவர் அவர்தான். திராவிடமா, தமிழ்த் தேசியமா என்ற அரசியலை முன்னெடுத்துவரும் சீமான், திராவிடக் கட்சிகளுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். எனவே, திராவிடக் கட்சியான தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று அறிவித்திருக்கிறார். அந்த முடிவை நாம் தமிழர் கட்சியில் எடுப்பதற்கு சீமானுக்கு முழு அதிகாரமும் உண்டு. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டால், சீமானுக்குத் தமிழகம் முழுவதும் விளம்பரம் கிடைக்கும். இது, கன்ஷிராம் பணி. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவன தலைவரான கன்ஷிராம் இந்த பாணியைத்தான் கையாண்டார்.

அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்தும், அலகாபாத்தியில் வி.பி.சிங்கை எதிர்த்தும் கன்ஷிராம் போட்டியிட்டார். தாம் வெற்றிபெறுவோம் என்பதைக் காட்டிலும், தன் கொள்கைகளும் கோரிக்கைகளும் பரவலாக மக்களைச் சென்றடையும் என்பதுதான் அவரது நோக்கம். ராமஜென்ம பூமியா, பாபர் மசூதியா என்ற விவாதம் நடந்தகொண்டிருந்தபோது, `திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தக்கூடிய அவலமான நிலையில் தலித் பெண்கள் இருக்கிறார்கள். தலித் பெண்கள் இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு பாதுகாப்பான கழிப்பறைகள் வேண்டும்’ என்ற பிரச்னையை கன்ஷிராம் முன்வைத்தார்.

சீமான்
சீமான்

அதன் மூலம், அந்தப் பிரச்னை இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. தேர்தல் முடிவுகளில் மூன்றாவது இடம் கன்ஷிராமுக்குக் கிடைத்தது என்றாலும், உத்தரப்பிரதேசம் முழுவதும் அவரது பிரசாரம் சென்று சேர்ந்தது. தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக தன் அரசியலை சீமான் முன்னிறுத்திவரும் நிலையில், ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால், தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் பிரசாரம் சென்றடையும்” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் அய்யநாதனிடம் கேட்டோம். ``மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவருகிற எல்லா திட்டங்களையும் சட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆதரிக்கிறது. மத்தியில் வேளாண் சட்டங்கள் கொண்டுவந்தவுடன், தமிழகத்தில் ஒப்பந்த விவசாயச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். மத்திய ஆட்சியாளர்கள் சொல்கிற எல்லாவற்றையும் அ.தி.மு.க அரசு செய்துகொண்டிருக்கிறது.

அய்யநாதன்
அய்யநாதன்

இந்த வகையில், தமிழகத்தின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் எதிராக பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் இருக்கின்றன. அப்படியென்றால், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நிற்கிறோம் என்று சொல்லக்கூடிய ஒரு கட்சி யாரை எதிர்க்க வேண்டும்... திராவிட அரசியலை எதிர்ப்பதாகச் சொல்லும் ஒரு கட்சியானது அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு கட்சிகளையும்தானே எதிர்க்க வேண்டும்... ஒரு கட்சியைவிட இன்னொரு கட்சி சிறந்தது என்று இந்தக் கட்சி எப்படி முடிவுக்கு வந்தது... எடப்பாடியை விட்டுவிட்டு ஸ்டாலினை ஏன் சீமான் எதிர்க்கிறார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார் அய்யநாதன் .

மேலும், ``தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நிற்கிறோம் என்று சொல்லும் ஒரு கட்சி, பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும்தான் எதிர்க்க வேண்டும். இந்த இரண்டு கட்சிகளையும் விட்டுவிட்டு தி.மு.க தலைவரை மட்டும்தான் எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று சொல்வது, திசைதிருப்புகிற அரசியல். மற்றபடி, ஜெயக்குமார் சொல்வதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஜெயக்குமார் கட்டுப்பாட்டிலிருக்கும் வார்டுகளில் அதிகமான வாக்குகளைப் பெற்றேன் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். அப்போது ஜெயக்குமார் எங்கே போனார்?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

ஜெயலலிதா என்கிற வலிமையான தலைமையின் கீழ் இருந்தவர்கள்தான் ஜெயக்குமாரைப் போன்றவர்கள். ஜெயலலிதா ஜெயித்தால் இவர்களெல்லாம் ஜெயிப்பார்கள். சொந்தச் செல்வாக்கில் வெற்றிபெறுவதற்கெல்லாம், இவர்கள் ஒன்றும் தாமரைக்கனி கிடையாது” என்கிறார் அய்யநாதன்.