Published:Updated:

ஸ்டாலினைப் பாராட்டும் செல்லூர் ராஜூ! - உண்மையான விமர்சனமா, 'ரெய்டு' தவிர்ப்பு யுக்தியா?

செல்லூர் ராஜூ
News
செல்லூர் ராஜூ

அதிமுக மூத்த தலைவர்கள், ஆளுநரைச் சந்தித்து புகாரளித்ததற்கு அடுத்த நாளே, முதல்வரைப் பாராட்டி செல்லூர் ராஜூ பேசியிருப்பது, அதிமுக-வினரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

``மாண்புமிகு முதல்வர் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்'' என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை உண்டாக்கியுள்ளது. `அவர் உண்மையைத்தான் பேசியிருக்கிறார்’ என அவருக்கு ஆதரவாகவும், `ரெய்டுக்குப் பயந்தே அவர் இப்படிப் பேசிவருகிறார்’ என அவருக்கு எதிராகவும் குரல்கள் ஒலிக்கின்றன.

தேர்தலுக்கு முன்பாக திமுக-வை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சிக்கு வந்ததும் விமர்சனங்களோடு பாராட்டியும் பேசிவருகிறார். கடந்த புத்தாண்டு தினத்தன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்திருந்த செல்லூர் ராஜூ, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், 'புதிதாகப் பரவிவரும் ஓமைக்ரான் வைரஸிடமிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' எனப் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப,

ஆளுநரிம் மனு அளித்த அதிமுக சட்ட் ஆலோசனைக்குழு
ஆளுநரிம் மனு அளித்த அதிமுக சட்ட் ஆலோசனைக்குழு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`` அம்மாவுடைய அரசு எப்படிக் கட்டுப்படுத்தியதோ, அப்போதைய முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் காலத்தில் எப்படிக் கட்டுப்படுத்தப்பட்டதோ, அப்படியொரு சூழ்நிலையை இந்த அரசு உருவாக்க வேண்டும். மாண்புமிகு முதல்வர் சுறுசுறுப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் மட்டும் உழைத்தால் போதாது. ஒமைக்ரான் வைரஸால் தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்கிற நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பதே அதிமுக-வின் வேண்டுகோள்'' என பதிலளித்திருந்தார். இப்போது மட்டுமல்ல, 'ரெளடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாபோலவே ஸ்டாலின் செயல்படுகிறார்' எனக் கடந்த செப்டம்பர் மாதம் செல்லூர் ராஜூ பாராட்டியிருந்தார். தவிர, ``கலைஞர் பெயரில் உணவகங்கள் வந்தால் வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். இன்னும் மக்களுக்குத் தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்கும். அதனால், வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்'' எனப் பேசி அதிமுக-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதிமுக-வின் இரட்டைத் தலைமைகளான, எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் இந்த அரசைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கடந்த டிசம்பர் 31-ம் தேதி, 'தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை' என அதிமுக-வின் சட்ட அலோசனைக்குழு ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தது. அதற்கு அடுத்த நாளே, முதல்வரைப் பாராட்டி செல்லூர் ராஜூ பேசியிருப்பது, அதிமுக-வினரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. `அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து ரெய்டு படலம் நடந்துவருகிறது. செல்லூர் ராஜூ பதவி வகித்த கூட்டுறவுத்துறையில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திமுக-வின் அடுத்த இலக்காக நாம் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே செல்லூர் ராஜூ இப்படிப் பேசிவருகிறார்' எனக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசும்போது,

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

``நகைக்கடன் தள்ளுபடியில் அரசியல்ரீதியாக திமுக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காரணம், தேர்தல் அறிக்கையில் கடனைத் தள்ளுபடி செய்ய நிபந்தனைகள் எதுவும் விதிக்கவில்லை. தற்போது அப்படிச் செய்வதால், மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில், அந்தத் துறையில் நடந்த முறைகேடுகளையும் இந்த அரசு வெளிக்கொண்டு வருகிறது. முரசொலி தலையங்கத்திலும் அது குறித்து செய்திகள்தான் மிக விரிவாக வந்துள்ளன. எங்கே அடுத்ததாக நம்மீது நடவடிக்கை பாயுமோ என செல்லூர் ராஜூவுக்கு ஒரு அச்சமிருக்கலாம். அதனால்தான், முதல்வரைப் பாராட்டிப் பேசிவருகிறார். பொதுவாக, தமிழக அரசியல் சூழலில் எதிர்க்கட்சியினரை புகழவேண்டிய அவசியம் கிடையாது. யாரும் இதற்கு முன்பு புகழ்ந்ததும் கிடையாது. அதனால் இந்த அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ளப்படும். பாராட்டுவதால் அவர் மீதான நடவடிக்கைகள் பாயாது என்று சொல்ல முடியாது. ஆனால், இப்படிப்பட்டவரைக் கைதுசெய்துவிட்டார்கள் என்று தன்மீது அனுதாபம் வருவதற்காக அவர் இப்படிப் பேசிவரலாம்'' என்கிறார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆளுநரைச் சந்தித்து மனு அளித்த குழுவில் ஒருவரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் பேசினோம்.

``குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் பாராட்டுவதால் ஒட்டுமொத்தமாக அரசையே பாராட்டுகிறார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அதிலும் முதல்வர் மட்டுமல்லாமல், மற்றவர்களும் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார். தவிர, அவர் உண்மையிலேயே பாராட்டியிருந்தாலும் அது அவரின் தனிப்பட்ட கருத்துத்தானே தவிர, அதிமுக-வின் கருத்தல்ல. அவர் அதிமுக-வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் கிடையாது. அதேவேளையில், நடவடிக்கைகளுக்காக பயந்து பேசும் ஆட்கள் நாங்கள் அல்ல. அதைச் சட்டப்படி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்'' என்கிறார் அவர்.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

மேற்கண்ட விஷயங்கள் குறித்து, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

`` முதல்வர் குறித்து தமிழக மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ, அதைத்தான் செல்லூர் ராஜூவும் பிரதிபலித்திருக்கிறார். அதில் தவறொன்றும் இல்லை. ஒருவேளை அவர் தனது துறையில் தவறு செய்திருந்தால் அவர்மீது நிச்சயமாக நடவடிக்கை பாயும். பாராட்டுவதற்காகவெல்லாம் யாரையும் விட முடியாது. அரசு தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் அவர்.