Published:Updated:

`கொங்கு வியூகம்; ஆதரித்த எ.வ.வேலு!' -ராஜ்ய சபாவுக்கு எப்படித் தேர்வானார் அந்தியூர் செல்வராஜ்?

ஸ்டாலின்
ஸ்டாலின்

கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தை அடுத்து, அருந்ததியினர் மற்றும் பட்டியலின சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். அவர்களின் வாக்குகளைக் கவர்வதும் தி.மு.க தலைமைக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜை ராஜ்ய சபா வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ``கட்சியிலும் சரி, மீடியா வட்டாரத்திலும் சரி பரிச்சயம் இல்லாத ஒருவரை எப்படி தலைமை தேர்வு செய்தது? என ஆச்சர்யப்படுகின்றனர் உடன்பிறப்புகள். எ.வ.வேலுவின் ஆதரவால்தான் செல்வராஜுக்கு ராஜ்ய சபா சீட் கிடைத்திருப்பதாகவும் சொல்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள் வட்டாரத்தில்.

திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ
திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ

தமிழகத்தில் உள்ள 6 ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மார்ச் 26-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க, தி.மு.க சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்.பி-க்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தநிலையில் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தி.மு.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த முறை நடந்த ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்குப் பதிலாக நிறுத்தப்பட்டு, பின் வாபஸ் பெற்றுக்கொண்டபோதே அடுத்த முறை உங்களுக்கே என என்.ஆர்.இளங்கோவிடம் உறுதியளித்திருந்தார் ஸ்டாலின். அதன்படியே இப்போது என்.ஆர்.இளங்கோவுக்கு சீட் கொடுத்திருக்கிறார். அதே போல் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாகப் பல மூத்த நிர்வாகிகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அந்தியூர் செல்வராஜ்
அந்தியூர் செல்வராஜ்

ஆனால், மாநிலங்களவையில் தி.மு.க சார்பாக கருத்துகளை முன்வைக்க இவரைத்தவிர வேறு சாய்ஸ் எதுவும் தி.மு.க தலைமைக்குத் தோன்றவில்லை என்பதாலும் இவருக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார் ஸ்டாலின். இந்தமுறை இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பெயரை அறிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தி.மு.க சார்பில் ஒரு இஸ்லாமியர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படவேண்டும் என்று ஸ்டாலின் முன்பு கோரிக்கைகள் இருந்த நிலையில், இஸ்லாமியருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

யார் இந்த அந்தியூர் செல்வராஜ்.

இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். முன்னாள் அமைச்சர். 1996, 97 காலகட்டத்தில் ஜெயலலிதாவின்ஆட்சியை எதிர்த்தும் கருணாநிதி முதலமைச்சர் ஆக வேண்டியும் தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போதே அவரை அழைத்துக் கடுமையாக எச்சரித்து அனுப்பினார் கருணாநிதி. அதன்பிறகு இவர் கட்சியில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்துவந்தார். தற்போது கொங்கு மண்டலத்தில் சமூகரீதியாக அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அந்தியூர் செல்வராஜ் பெயரை அறிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும், கொங்கு மண்டலத்தில் கவுண்டர்களை அடுத்து அருந்ததியினர் மற்றும் பட்டியலின சமூகத்தினர் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இவரை அறிவித்ததாகச் சொல்கிறார்கள். தவிர, எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாகவும் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இதைவிட முக்கியமாக, பிரபலமான நபர்களுக்கு வாய்ப்பு தரும் வேளையில், அந்தியூர் செல்வராஜ் போன்றவர்களுக்கும் பதவி கொடுத்தால் மற்றவர்கள் ஆர்வத்துடன் வேலை செய்வார்கள் என்ற கணிப்பிலும் அவரது பெயரை டிக் அடித்தார் ஸ்டாலின் என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு