Published:Updated:

`கனிமொழி தலைமையில் தனி டீம் அமைந்துவிடக் கூடாது!' - உதயநிதிக்காகப் போராடும் தி.மு.க தலைமை

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

எந்தவொரு கழகப் பணியாக இருந்தாலும் கனிமொழிதான் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பேசுவார். உதயநிதி வருகைக்குப் பிறகு கனிமொழியைத் தலைமையே தொடர்புகொண்டு பேசி வருவதுதான் ஆச்சர்யமளிக்கிறது.

உதயநிதி என்ட்ரியால் எழக்கூடிய சர்ச்சைகளுக்கு விளக்கம் சொல்லும் முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தி.மு.க. `இளைஞரணிக்கு உதயநிதியைக் கொண்டு வந்ததில் எந்தவித எதிர்ப்பும் இல்லை எனக் கூறிக்கொண்டாலும் கனிமொழியை அமைதிப்படுத்தும் வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார் ஸ்டாலின்' என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணிச் செயலாளராகக் கடந்த 4-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். `அவரது வருகையால் இளைஞர் அணி வலுப்பெறும்' என உற்சாகப்பட்டுக் கொண்டனர் தி.மு.க நிர்வாகிகள். இதையடுத்து, இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் பேசிய உதயநிதி, `என்னை சின்னவர் என அழைக்கிறார்கள். உங்களையெல்லாம் பெரியவர்கள் ஆக்கிப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்' என நெகிழ்ந்தார். அதேநேரம், அடுத்து வந்த நாள்களில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் உதயநிதியைச் சந்தித்து வாழ்த்துச் சொல்வதற்காக நிர்வாகிகள் திரண்டனர்.

மதுரை, கோவை, ஈரோடு என ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் நேரம் ஒதுக்கிச் சந்தித்தார் உதயநிதி. `குடும்ப உறுப்பினர்களின் நிர்பந்தம் காரணமாகத்தான் அன்பகத்துக்கு நிர்வாகிகள் வருகை தருகின்றனர்' என்ற சர்ச்சையும் எழுந்தது. `உதயநிதி வருகையால் எந்தவித சலசலப்பும் எழவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கழகத்தின் வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபட்டார் உதயநிதி. அதன் பலனாகவே அவருக்கு இளைஞர் அணி பதவி தேடி வந்தது' என்ற விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

`உதயநிதி வருகையால் எந்தவித சலசலப்பும் இல்லை' எனக் கூறினாலும், தற்போது அளிக்கப்படும் முக்கியத்துவங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தி.மு.க. இன்று வெளியான முரசொலி நாளேட்டிலும் இதுதொடர்பாக விரிவான கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. `உதயநிதி நியமனமும் ஓநாய்களின் கண்ணீரும்' என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அந்தக் கட்டுரையில், `தி.மு.கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டது, பலருக்கு அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டியதுபோல அமைந்துவிட்டது. காந்தாரியைப்போல அம்மிக் கல்லை எடுத்துத் தங்களது வயிற்றில் அடித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். தி.மு.க-வில் தொழிலாளர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி எனப் பல அணிகள் இருக்கின்றன. அத்தகைய அணிகளைப் போல இளைஞர் அணியும் ஓர் அணி. எல்லா அணிகளுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க தலைமை தன்னிச்சையாக என்றும் எந்த முடிவும் எடுப்பதில்லை' என நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி, ஈரோடு முத்துச்சாமி
உதயநிதி, ஈரோடு முத்துச்சாமி

தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "உதயநிதிக்காகவே தனியாகக் கட்டுரை எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தி.மு.க. அந்தளவுக்கு உள்ளுக்குள் பெரும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. அதைக் களைவதற்காகத்தான் இப்படிப்பட்ட கட்டுரைகள் எழுதப்படுகின்றன. பொதுவாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அறிவாலயத்தில் நடத்துவதுதான் வழக்கம். அதற்கு மாறாக, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அன்பகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். `அறிவாலயத்தில் வேண்டாம், அன்பகத்தில் நடத்தலாம்' என்பது தலைமை எடுத்த முடிவாக இருந்தாலும் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாகவே கூட்டம் நடைபெற்றதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

தவிர, இளைஞரணியின் முக்கியப் பதவிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உதயநிதி பயணம் செய்திருந்தால் எந்தவிதச் சிக்கலும் வந்திருக்காது. அதற்கு மாறாக, உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துமாறு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் தொடர்புகொண்டு கூறியதுதான் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. மாவட்டச் செயலாளர்களும் வரிசையில் நின்றுகொண்டு, தங்கள் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைக்கும் நிலையும் ஏற்பட்டது.`தலைவருக்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதே முக்கியத்துவத்தை சின்னவருக்கும் கொடுக்க வேண்டும்' என்பதை அறிவிக்கப்படாத நடைமுறையாக மாற்றிவிட்டனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இது மிகவும் வேதனையளிப்பதாகக் கவலைப்படுகின்றனர் சீனியர்கள் சிலர். கழகமே கார்ப்பரேட்டாக மாறிவிட்டதால், பொதுமக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஜனநாயகம் பேசக்கூடிய தி.மு.க-வினர் மத்தியில் புகைச்சல் பெருகி வருகிறது. `இது நம்ம தலையெழுத்து' என்ற பொருமலையும் பார்க்க முடிகிறது. `உதயநிதியின் வளர்ச்சிக்கு உதயநிதியே எதிராக இருக்கிறார்' என்பதுபோலத்தான் பார்க்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் குமுறல் நீடிக்கிறது. கனிமொழியை மகளிரணியின் மாநிலத் தலைவியாக நியமிக்கும்போது, இப்படிப்பட்ட ஆரவாரங்களைக் காண முடியவில்லை. இளைஞரணியைவிடப் பெரிய பதவியாக மகளிரணி பார்க்கப்படுகிறது. தற்போது தி.மு.க-வில் மகளிர் அணி என்பதே பெயரளவுக்குத்தான் இருக்கிறது. அவரை வளரவிடாமல் பார்த்துக்கொண்டனர்" என விவரித்தவர்கள்,

"கடந்த சில நாள்களாக உதயநிதிக்குக் கொடுக்கப்படும் ஆரவாரத்தைக் குடும்ப உறவுகளும் கவனித்து வருகின்றனர். `இதனால் கனிமொழி தரப்பினர் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது' என்பதற்காக அவரைத் தொடர்ந்து முன்னிறுத்தும் வேலைகளும் நடந்து வருகின்றன. முன்பெல்லாம், எந்தவொரு கழகப் பணியாக இருந்தாலும் கனிமொழிதான் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பேசுவார். உதயநிதி வருகைக்குப் பிறகு, கனிமொழியைத் தலைமையே தொடர்புகொண்டு பேசி வருவதுதான் ஆச்சர்யமளிக்கிறது.

கனிமொழி
கனிமொழி

`கனிமொழி தலைமையில் தனி டீம் அமைந்துவிடக் கூடாது' என்ற கவலையும் பிரதான காரணம். அஞ்சல்துறைத் தேர்வு தொடர்பாக நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் கழக எம்.பி-க்கள் போர்க்குரல் எழுப்பினர். ஆனால், சட்டசபையில் அஞ்சல்துறைத் தேர்வு தொடர்பாகப் பேசிய ஸ்டாலின், கனிமொழியின் போராட்டம் குறித்துப் பதிவு செய்தார். இவையெல்லாம் கனிமொழியை அமைதிப்படுத்தும் பணியாகவே பார்க்க வேண்டியதாக இருக்கிறது. வழக்கமான ஆரவாரங்களுக்குச் செவிசாய்க்காமல் இளைஞர் அணியை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை உதயநிதி வேகப்படுத்த வேண்டும். அப்போதுதான் சர்ச்சைகளிலிருந்து விலகியிருக்க முடியும்" என்கின்றனர் இயல்பாக.

அடுத்த கட்டுரைக்கு