Published:Updated:

பழனிசாமியை ஏன் மாற்றினார் பழனிசாமி? உள்ளாட்சித் தேர்தலும் உலா வரும் தகவலும்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா?’

மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக இருந்த பழனிசாமியை மாற்றிவிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்ரமணியனை அந்தப் பொறுப்பில் நியமித்திருக்கிறது தமிழக அரசு. இது வழக்கமான மாறுதல்தான் என்று கூறப்பட்டாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வேகமாகச் செய்துகொண்டிருந்த நிலையில் இந்த மாறுதல் பல சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பதிவில், `தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமியைத் திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்துக்குரியது! உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்துகொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மற்றொரு பதிவில், `விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் `விசுவாசமாகப்' பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா. இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா?’ என்றும் கேட்டுள்ளார்.

ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு, ஐ.ஏ.எஸ் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வருமென்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துப் பேசி, 10 நாள்கள் கடந்த நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையர் மாற்றப்பட்டிருக்கிறார். பன்னீர்செல்வத்தின் பேச்சுக்கும் பழனிசாமியின் மாற்றத்துக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அ.தி.மு.க-வுக்குள்ளேயே பேச்சு எழுந்துள்ளது.

மாநிலத் தேர்தல் ஆணையர் பொறுப்பில் பெரும்பாலும் ஆளும்கட்சிக்கு மிகவும் வேண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே நியமிக்கப்படுவர். ஐ.ஏ.எஸ் அதிகாரி பழனிசாமியும் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில்தான் அவரை நியமித்ததாகவும் முன்பு பேசப்பட்டது. எடப்பாடி அரசின் கண்ணசைவுக்கேற்ப உள்ளாட்சித் தேர்தலை பல்வேறு காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது மாநிலத் தேர்தல் ஆணையம். அதற்கு முழுமுதற்காரணமாய் இருந்தவர் அதன் செயலாளராக இருந்த பழனிசாமிதான்.

அப்படியிருக்கையில் அவரை மாற்றிவிட்டு, சுப்ரமணியமனை மாற்றியிருப்பதற்கு ஏதாவது வலுவான காரணம் இருக்குமோ என்ற அச்சம், எதிர்க்கட்சியினர் தரப்பில் எழுந்திருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ‘‘எங்கள் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பதைப்போல, சுப்ரமணியனின் நியமனம் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், அ.தி.மு.க அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் நாடாளுமன்றத் தேர்தலைப்போலவே இதிலும் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி கிடைக்கவே வாய்ப்பு அதிகம். இடைத்தேர்தல் வெற்றி எப்படிக் கிடைத்தது என்பது ஆளும்கட்சியினருக்கே தெரியும். அதுபோல உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற முடியாது. அதனால்தான் தாங்கள் சொல்வது எல்லாவற்றையும் கேட்டு அதன்படி நடக்கும் அதிகாரி ஒருவர் வேண்டுமென்று இவரை நியமித்திருப்பதாகத் தெரிகிறது.

அதேபோல நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அவர்களுடைய வேட்பாளர்களால் வெற்றி பெற முடியாது. ஆனால், வார்டுகளில் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசம் வரும்போது அதிகாரிகளை வைத்து ஏதாவது கோல்மால் செய்து, ஆளும்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம். அதன் பின் வழக்கு வந்தால் பார்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் முறைகேடாக ஜெயிக்கும் கவுன்சிலர்களை வைத்து மேயரைத் தேர்ந்தெடுக்கும் பழைய முறையைக் கொண்டு வந்து விடலாம் என்ற ஆலோசனையும் ஆளும்கட்சி வட்டாரத்தில் நடக்கிறது. சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டத்திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது’’ என்றார்.

அ.தி.மு.க தரப்பில் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘அப்படி எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. நேரடியாக மேயர் தேர்வு செய்யும் முறையில்தான் தேர்தல் நடக்குமென்று முதல்வரே கூறியிருக்கிறார். தி.மு.க-வினர் தேர்தலை நிறுத்துவதற்கு வேறு காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களே இப்படியொரு தகவலைப் பரப்புகின்றனர்’’ என்றார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல்
தமிழக உள்ளாட்சித் தேர்தல்

மீண்டும் கவுன்சிலர்களைக் கொண்டு மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தமிழக அரசு கொண்டு வந்தால் அதை தி.மு.க சட்டரீதியாக எதிர்க்குமா என்ற கேள்வியை தி.மு.க அமைப்புச் செயலாளரும் எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம்...

அயோத்தி விவகாரம்... கருணாநிதி பாணியைப் பின்பற்றினாரா ஸ்டாலின்?

‘‘நேரடி மேயர் முறையே சிறந்தது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து மேயரை மாற்றிவிடலாம். அதனால் பணிகள்தான் பாதிக்கப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில், நேரடியாக மேயரைத் தேர்வு செய்யும் முறையில் தங்களால் வெற்றிபெற முடியாது என்று அ.தி.மு.க நினைக்கலாம். அதற்காக இப்படியொரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரலாம். அப்படி வந்தாலும் அதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்ல மாட்டோம். உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். அதுதான் தி.மு.க-வின் இப்போதைய ஒரே கோரிக்கை!’’ என்றார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், பொங்கல் இனாம் கொடுக்க முடியாது என்பதாலும், அதைக் கொடுத்த பின் தேர்தலை நடத்தினால் ஆளும்கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பதாலும் ஜனவரிக்குப் பின் பிப்ரவரியில் தேர்தல் வரவே அதிக வாய்ப்பிருப்பதாக ஆளும்கட்சி நிர்வாகிகளே தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், விருப்ப மனு வாங்கும் வேலையை ஆளும்கட்சி தொடங்கிவிட்டதால் தேர்தல் உறுதியாக நடக்குமென்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு