Published:Updated:

GST: “நன்கொடையாளராக மத்திய அரசு செயல்பட முடியாது!“- பி.டி.ஆர் சரவெடி... பின்னணி என்ன?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

“மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை. மனக்கசப்புடனும் வேண்டா வெறுப்புடனும் நன்கொடையாளராக மத்திய அரசு செயல்பட முடியாது” என்று மத்திய அரசை நோக்கி தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த கருத்து விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகக் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் தினமும் சுமார் 4,000 பேர் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் 450-க்கும் அதிகமாகவே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை, கடுமையான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

கொரோனா முதல் அலையின்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளானார்கள். தொழில்கள் முடங்கி, வருமானம் இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் பெரிதும் துயரப்பட்டார்கள். ஏழைய எளிய மக்கள் உணவின்றித் தவித்தார்கள். இந்திய உணவுக்கழக குடோன்களில் வீணாகிக்கொண்டிருக்கும் உணவுதானியங்களை ஏழைகளுக்கு விநியோகியுங்கள் என்று எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்தன. `வாழ்வாதாரங்களை இழந்து நிர்கதியாகியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள்’ என்றும் குரல்கள் எழுந்தன. அப்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

கொரோனா இரண்டாவது அலை, கடந்த ஆண்டைக் காட்டிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்படும் அவலத்தை இந்திய தேசம் சந்தித்தது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், விறகு விலை உயர்ந்துவிட்டதால் உடல்களை எரிப்பதற்கு விறகு வாங்க முடியவில்லை என்றும், அதனால் உடல்களைப் புதைப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் கூறினார்கள். இதைவிட இந்த தேசத்துக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. இவ்வளவு மோசமான ஒரு நெருக்கடியில் தேசம் சிக்கித்தவிக்கும்போது, இந்த தேசத்தின் நிதியமைச்சர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலை.

எரிக்கப்படும் உடல்
எரிக்கப்படும் உடல்

மே 29-ம் தேதியான சனிக்கிழமை அன்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தொலைக்காட்சி செய்திகளில் பார்க்க முடிந்தது. அன்றைய தினம் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் அதில் பங்கேற்றார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த கருத்துகள் மிகவும் காரமாக இருந்தன. ஆக்கப்பூர்வமான கருத்துகள் என்கிற வரவேற்பையும் அவரது கருத்துகள் பெற்றன. குறிப்பாக, நிதி விவகாரத்தில் மாநிலங்களை இன்றைய மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பது பற்றி கூறுகையில், “மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு. மத்திய அரசுக்கு என்று தனியாக வாக்காளர்கள் இல்லை. மனக்கசப்புடனும் வேண்டா வெறுப்புடனும் நன்கொடையாளராக மத்திய அரசு செயல்பட முடியாது” என்ற காட்டமான விமர்சனத்தை தமிழக நிதியமைச்சர் முன்வைத்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவந்தது. அதற்கு முன்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதற்கான முயற்சி நடைபெற்றன. அதில் பல மாற்றங்களைச் செய்து மோடி ஆட்சியில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது என்றும், இது மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2014-ம் ஆண்டு மத்தியில் அரியணை ஏறிய மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதற்கு தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், ஜி.எஸ்.டி-யை ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் தயாராக இல்லை. அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஜி.எஸ்.டி-யைக் கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தில் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த முடியாது என்று கறாராகக் கூறிவிட்டார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி அரசு ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதற்கு சம்மதித்தது. ஜி.எஸ்.டி-யை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களை சம்மதிக்க வைப்பதற்காக, ஜி.எஸ்.டி அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுசெய்யும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. அதற்காக சட்டத்திருத்தத்தயும் மததிய அரசு மேற்கொண்டது. ஆனால், கொடுத்த வாக்கை மத்திய அரசு காப்பாற்றவில்லை. இழப்பீட்டுத்தொகையை உரிய நேரத்தில் முழுமையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இப்போதும் இருக்கிறது.

ஊரடங்கு
ஊரடங்கு

இதை கருத்தில் கொண்டுதான், “ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நம் அரசியலமைப்பில் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகாரங்கள் குவிந்துள்ளன. ஜி.எஸ்.டி தொடர்பான மத்திய அரசின் வாக்குறுதிகள் பன்மடங்கு இருந்தன. ஆனால், அந்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை, நிலுவைத்தொகையை சரியான நேரத்தில் வழங்குவதில் ஒன்றிய அரசு தயக்கம் காட்டுவது, இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் ஒன்றிய அரசின் பரிவின்மையான நிலை ஆகியவை மத்திய – மாநில உறவுகளில் ஒரு நியாயமான கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது” என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். கொரோனா சிகிச்சைக்கான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரியுள்ளன. இது தொடர்பான முடிவை அடுத்த கூட்டத்தில் மத்திய அரசு அறிவிக்கும். வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாகக் கிடைக்கும் கொரோனா தொடர்பான பொருள்களுக்கு ஐ-ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்படும் என்று கவுன்சில் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க இறக்குமதி செய்யப்படும் ஆம்ஃபோடெரிசின் மருந்துக்கு வரி விலக்கு; ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரிவருவாய் இழப்பை சரி செய்வதற்காக மத்திய அரசு ரூ.1.58 லட்சம் கோடி கடன் பெற்று அதை மாநிலங்களுக்கு வழங்குவது என்பது உள்ளிட்ட சில முடிவுகள் இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

மோடி
மோடி

ஆனால், ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டுவதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதி குறித்து இந்தக் கூட்டத்தில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. அதாவது, மாநிலங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்கப்படும் என்று மத்திய அரசு சொன்ன காலவரையறை வரும் ஜூலை 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அது முடிவடைந்துவிடும். அதற்கான காலநீட்டிப்பு குறித்து முடிவெடுக்கவில்லையென்றால், மாநிலங்களின் கதி அதோகதி தான். ஏற்கெனவே, 2020-2021 நிதியாண்டில் தமிழகத்துக்கு 40,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை மத்திய அரசு இழப்பீடாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வெறும் 24,000 கோடியை மட்டும்தான் வழங்கியிருக்கிறது. 16,000 கோடியை வழங்கவில்லை.

லட்சத்தீவு மக்கள் கொந்தளிப்பு: காரணமாக இருக்கும் பிரபுல் கோடா படேல் - யார் இவர்?

ஏற்கெனவே கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு தன் சொந்த நிதியிலிருந்து மாநில அரசு செலவு செய்துகொண்டிருக்கும் நிலையில், வரி விதிக்கும் அதிகாரத்தையும் இழந்து வரியாக வரும் நிதியையும் இழந்தால், எங்கே போவது என்பதுதான் முக்கியமான கேள்வி. எனவே, இழப்பீடு தொகையை மத்திய அரசு முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பதுடன், இழப்பீடு வழங்குவதற்கான காலத்தை அடுத்த மூன்று ஆண்டுகள் அல்லது அடுத்த ஐந்து ஆண்டுகள் என நீட்டிக்க வேண்டும்.

கொரோனா பிரச்னை காரணமாக மத்திய அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவேதான், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத்தொகையை மத்திய அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. நியாயமான காரணம்தான். மத்திய அரசுக்கே வருமான வரவில்லையென்றால், அவர்களால் எப்படி இழப்பீடு வழங்க முடியும்? அதற்குத்தான் பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசுக்கு சில ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அதாவது, மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராளமாக அளிக்கப்படும் வரிச்சலுகைகளைக் குறைக்க வேண்டும், மறைமுக வரிகளைக் குறைக்க வேண்டும், நேரடி வரிகளை அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன. ஆனால், இந்த ஆலோசனைகள் மத்திய ஆட்சியாளர்களுக்கு உவப்பாக இல்லை. அப்படியென்றால், மாநிலங்களின் நிதி நிலைமை இப்படியே தொடரப்போகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் தமிழக நிதியமைச்சர் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து சரவெடியாக வெடித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு