Published:Updated:

`ஜெ.,வால் நீக்கப்பட்டவருக்குப் பதவி கொடுத்த எடப்பாடி!' - எப்படித் தேர்வானார் முஹம்மத் ஜான்?

முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜானுக்கு ராஜ்ய சபா எம்.பி. சீட் வழங்கப்பட்டது தமிழ்மகன்உசேனுக்கும் அன்வர்ராஜாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முஹம்மத் ஜான்
முஹம்மத் ஜான்

நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பிறகு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராஜ்ய சபா எம்.பி-களுக்கான பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர். தேர்தல் ஒப்பந்தத்தின்படி பா.ம.க.வுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் ராஜ்ய சபா எம்.பி. வேட்பாளர்கள் பட்டியல்
அதிமுகவின் ராஜ்ய சபா எம்.பி. வேட்பாளர்கள் பட்டியல்

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``கடந்த 1990-ல் மாவட்டச் சிறுபான்மையினர் நலப்பிரிவில் பதவி வகித்த முஹம்மத்ஜான், 2001-ம் ஆண்டு ராணிப்பேட்டையில் கவுன்சிலரானார். 2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சை மறைவுக்குப் பிறகு முஹம்மத் ஜானுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து ஜெயலலிதா அழகு பார்த்தார்.

20 மாதங்கள் அமைச்சராக அவர் இருந்த காலகட்டத்தில் உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் ஒன்றை அனுப்பியது. உடனே, முஹம்மத் ஜான், முன்னாள் அமைச்சராகினார். சிறுபான்மையினர் நலப்பிரிவில் மாநில இணைச் செயலாளர் பதவி வகித்துவருகிறார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

வேலூர் மாவட்ட அ.தி.மு.க.வில் முஹம்மத் ஜான், தனித்துச் செயல்படுவார். ராஜ்ய சபா எம்.பி. சீட்களைக் கேட்டு கட்சி தலைமையிடம் சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை முட்டி மோதினர். ஒவ்வொருவரும் ஒரு சேனல் மூலம் காயை நகர்த்தினர். சிறுபான்மை நலப்பிரிவினருக்கு ஒரு சீட் கொடுக்க கட்சித் தலைமை முடிவு செய்தது. அதில் இளைஞர் அல்லது புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கட்சித் தலைமை ஆலோசித்தது. ஆனால், கட்சியின் சீனியர்கள் போர்க்கொடி தூக்கினர். சீனியர்களான அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், கட்சித் தலைமை வேலூர் மக்களவை தேர்தலை மனதில் வைத்து முஹம்மத் ஜானின் பெயரை டிக் செய்தது" என்றார்.

முஹம்மத் ஜான் தேர்வு செய்ததன் பின்னணி குறித்து கட்சியினர் கூறுகையில், ``கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த சீனியர்கள் பட்டியலில் அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன், முஹம்மத் ஜான் ஆகியோர் ராஜ்ய சபா எம்.பி. சீட்டை கட்சித்தலைமையிடம் கேட்டனர். இதில் அன்வர்ராஜாவுக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் அன்வர்ராஜாவுக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால், வஃக்பு வாரியத்துக்கு அன்வர்ராஜா தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தப்பதவியும் தமிழ்மகன்உசேனுக்குக் கிடைக்கவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இதனால் ராஜ்ய சபா எம்.பி சீட்டாவது கொடுங்கள் என்று கட்சித் தலைமையிடம் தமிழ்மகன் உசேன் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். ஆனால், முஹம்மத்ஜான், முதல்வருக்கு நெருக்கமான ஒருவர் மூலம் ரகசியமாக காய் நகர்த்தி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.

முஹம்மத் ஜானை வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் என்ற தகவல் கசியத் தொடங்கியதும் அன்வர்ராஜாவும் தமிழ்மகன் உசேனும் போர்க்கொடி தூக்கினர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். மீண்டும் வேலூருக்கு முக்கியத்துவம் கொடுக்க முஹம்மத் ஜானுக்கு எம்.பி பதவியா என்ற கேள்வியை சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள் எழுப்பியுள்ளனர். அதற்கு கட்சித் தலைமை, வேலூரில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால்தான் முஹம்மத் ஜானை தேர்வு செய்தோம் என்று பதிலளித்துள்ளனர். இருப்பினும் கட்சியின் சீனியர்கள் சமரசமடையவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முஹம்மத் ஜானுக்கு எப்படி எம்.பி. பதவி வழங்கலாம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். முஹம்மத்ஜான், கட்சியின் சீனியர், அனுபவம் மிக்கவர். மேலும், அவர் எந்த கோஷ்டியிலும் சேராதவர் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதைக்கேட்டவர்கள் அமைதியாகிவிட்டனர்'' என்றனர்.

யார் இந்த முஹம்மத் ஜான்?

முஹம்மத் ஜான், கட்சியில் சீனியர். பி.எஸ்சி. பி.எட் படித்தவர். தான்உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். வேலூர் மாவட்ட அ.தி.மு.க.வினருடனும் சிறுபான்மையினர்களுடனும் அதிகம் நெருக்கம் காட்டாதவர்.

ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெறும் முஹம்மத்ஜான்
ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெறும் முஹம்மத்ஜான்

முஹம்மத் ஜானுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஆனால், 20 மாத அமைச்சராக இருந்த முஹம்மத் மீது கட்சியினரே கட்சித் தலைமைக்கும் போயஸ் கார்டனுக்கும் புகாருக்கு மேல் புகார்களை அனுப்பினர். உளவுத்துறையும் சில ரிப்போர்ட்களை அனுப்பியது. அதில் இடம் பிடித்த சில தகவல்கள் உண்மை என்று ஜெயலலிதா விசாரணையில் தெரியவந்தது. இதனால்தான் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்கின்றனர் கட்சியினர்.

முஹம்மத் ஜானின் தரப்பில் பேசியவர்கள், ``முஹம்மத் ஜான், கட்சியில் சீனியர். தோல் தொழிற்சாலை நடத்திவருகிறார். அவருக்கு மன்னார்குடியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரால்தான் அமைச்சர் பதவி கிடைத்தது. தற்போது கட்சிக்கு விசுவாசமாக இருந்துவருகிறார். மீண்டும் அவரை ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கு உள்கட்சி பூசலும் தீ விபத்தும்தான் காரணம். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர். அவர் அமைச்சராக இருந்தச் சமயத்தில்கூட பந்தா காட்டாதவர்" என்றனர்.