Published:Updated:

`இனி எங்கள் வாக்குகளை தி.மு.க பிரிக்க முடியாது!' - வேலூர் தேர்தலில் ம.நீ.ம திட்டம் என்ன?

பிரேம் குமார் எஸ்.கே.

வேலூர் தொகுதியை முக்கியமாகப் பார்க்கிறார் கமல். மேலும் வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அறிவிப்பு வரும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும் தமிழகத்தில் அந்தக் கட்சி இடம் பெற்றிருந்த அ.தி.மு.க கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் தேனியில் மட்டுமே ஓ.பி.எஸ் மகன் வெற்றிபெற்றார். எனினும் அ.தி.மு.க மத்திய அமைச்சரவையில் இடம் பெறமுடியவில்லை. இந்நிலையில் வேலூர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றி வாகைசூடி மத்திய அமைச்சரவையில் எப்படியாவது இடம் பெற்றுவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது அ.தி.மு.க.

அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் மீண்டும் அதே வேட்பாளர்களே களமிறங்கியுள்ளனர். டி.டி.வி. தினகரன் இந்தத் தேர்தல் களத்திலிருந்து விலகிவிட்டர். வரும் 18 -ம் தேதி வேட்புமனுத் தாக்கல் முடியும் நிலையில் மக்கள் நீதி மய்யம் இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

முன்னதாக கடந்த மக்களவைத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட சுரேஷ் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் கட்சி அலுவலகத்துக்கு மீண்டும் அழைக்கப்பட்டார்.

அன்றைய தினமே வேட்பாளர் அறிவிப்பு வரும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அவர், ``வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் நாள்கள் இருக்கிறது.

வேட்பாளர்களுடன் கமல்
வேட்பாளர்களுடன் கமல்

வேட்பாளர் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் இருக்கிறது. கடந்த தேர்தலைப் போன்று இந்தத் தேர்தலை கமல்ஹாசன் பார்க்கவில்லை. ஒரு பெரிய தேர்தலையே சந்தித்து விட்டோம். இந்த முறை எத்தனை வாக்குகள் கிடைக்கும் எனப் பார்க்கும் பரிசோதனை தேர்தல் இது கிடையாது.

அதனால் வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் தேவை. மேலும் கடந்த தேர்தலில் திமுக, ``மநீம கட்சிக்கு வாக்களித்தால் வாக்குகள் பிரியும். இதனால் மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார்” எனச் சொல்லி வாக்கு வாங்கியது. இது எங்களின் வாக்குகளைப் பிரித்தது.

இப்போது, தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. மோடி பெயரைசொல்லி தி.மு.க எங்கள் வாக்குகளைப் பிரிக்க முடியாது. அதனால் வேலூர் தொகுதியை முக்கியமாகப் பார்க்கிறார் கமல்.

மேலும், வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அறிவிப்பு வரும். வேட்பாளர் பட்டியலில் சுரேஷும் இருக்கிறார். நல்ல அறிவிப்பு வரும்” என்று முடித்தார்.

இது தொடர்பாக முன்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷிடம் பேசினோம்.``வரும் 18 -ம் தேதி வரை நேரம் இருக்கிறது. கட்சி அலுவலகத்தில், நான் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். வேறு ஆலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை. தலைமை நல்ல முடிவை அறிவிக்கும்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் தலைவ்ர் கமல்
மக்கள் நீதி மய்யம் தலைவ்ர் கமல்

வேலூர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.