Published:Updated:

`ரசிகர்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவும்!’- கமல்-ரஜினி இணைப்புப் பேச்சின் பின்னணி

கமல், ரஜினி
கமல், ரஜினி

அடுத்த ஒரு வருடத்தில் இதுபோன்று பலமுறை இருவரும் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வுகள் நடக்கும். இதன்மூலம் ரசிகர்கள் மனதில் இந்த இணைப்பை நிலைநிறுத்த முடியும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்க, 2021 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்துச் செயல்பட்டுகொண்டிருக்கிறார்கள் கமலும் ரஜினியும். `இவர்கள் இருவரும் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்' எனக் கணிக்கப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து தேர்தலைச் சந்திக்க இருப்பதாக வெளியான தகவல், பிரதான கட்சிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்ற தகவல் வெளியான காலகட்டத்தில், கட்சியைத் தொடங்கி அதிரடியாக கால் பதித்தார் கமல். 2021 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என ரஜினி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள, சட்டப்பேரவைக்கு முன்னோட்டமாக நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியது கமலின் மக்கள் நீதி மய்யம். சில தொகுதிகளில் 3 -ம் இடத்தைப் பிடித்து மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

`மக்கள் நலனுக்காக இணைவோம்!' - ஒரே குரலில் கமல், ரஜினி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கமலுக்கு உற்சாகம் தந்தது என்பதை தேர்தல் முடிவுக்குப் பின்னர் அவர் பேசியதை வைத்து தெரிந்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து, `சோதனை முயற்சிகள் போதும், இனி சட்டப்பேரவைதான் இலக்கு' எனக் களமிறங்கியது மக்கள் நீதி மய்யம். இடையில், `தேர்தல் வித்தகர்' பிரஷாந்த் கிஷோருடனான ஒப்பந்தம் என கமலின் அரசியல் நகர்வை பிரதான கட்சிகளும் கவனிக்கத் தொடங்கின. மேலும், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் களமிறங்வில்லை. அப்போதும் 2021 தான் இலக்கு என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்ய விழாவில் கமல்
மக்கள் நீதி மய்ய விழாவில் கமல்

இந்நிலையில், தனது 65-வது பிறந்தநாள் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார் கமல். பிறந்தநாளில் தனது சொந்த ஊரில் தந்தைக்குச் சிலையைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் சென்னையில் ராஜ்கமல் அலுவலகத்தின் புதிய கட்டடத்தையும் இயக்குநர் கே.பாலசந்தர் சிலையையும் திறந்துவைத்தார். இந்த விழாவில் நடிகர் ரஜினியும் கலந்து கொண்டார்.

அன்று நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, `எனக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள். இருவரும் சிக்க மாட்டோம்” எனத் தனக்கே உரிய சிரிப்போடு சொன்னார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தவர், `ஊடகங்கள் தனக்கு காவி சாயம் பூசுவதாக’ தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஜினி
ரஜினி

ரஜினியின் இந்தக் கருத்துக்கு அ.தி.மு.க தரப்பில் எதிர்வினை கிளம்பியது. முதல்வர் தொடங்கி நமது அம்மா நாளிதழ் வரையில் ரஜினியை விமர்சனங்கள் செய்வது தொடர்ந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கமலின் `உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, `எடப்பாடி முதல்வர் ஆவார் என அவரே நினைத்திருக்க மாட்டார். ஆனால் முதல்வர் ஆனார். ஆட்சி கலைந்து விடும் என்றார்கள்.. ஆனால் கலையாமல் தொடர்கிறது. இதுபோன்று நாளையும் அதிசயம், அற்புதம் நடக்கும்’ என்றார்.

நவம்பர் மாத தொடக்கத்துக்கு முன்னர் வரையில் ரஜினி என்றால் பா.ஜ.க ஆதரவாளர் என்ற எண்ணமே அனைவர் மத்தியிலும் இருந்தது. தற்போது அந்தப் பிம்பம் மறைந்து ரஜினி - கமல் இணைந்து செயல்படுவது என்ற மையப்புள்ளியில் வந்து நிற்கிறது. ரஜினியின் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் கமலுடன் அரசியல்ரீதியாக ஏற்பட்ட நெருக்கமே காரணம் என்கிறார்கள். இதில் கமலின் அரசியல் தந்திரமும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தினர்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

கமல் கட்சிக்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வரவேற்பு ரஜினிக்கும் உற்சாகத்தை தந்துள்ளது. கமல் - ரஜினி இணைவது தொடர்பான பேச்சுகள் அப்போதே தொடங்கிவிட்டதாகவும் இது வெறும் முதல் கட்டம்தான் என்கிறார்கள். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

``கமல், ரஜினி ஆகியோரது கூட்டணி என்பது வரும் சட்டப்பேரவை தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்குக் கமல், ரஜினியிடம் கள நிலவரம்குறித்து பேசியதும் முக்கியமான காரணம். தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தால் உங்கள் செல்வாக்கை இழக்க நேரிடும் என எடுத்துக் கூறினார். இதையொட்டியே கூட்டணி, இணைப்பு என்றெல்லாம் பேசுகிறார்கள்.

அதேநேரத்தில், முதலில் இருவரின் ரசிகர்களாக இருப்பவர்கள் இந்த இணைப்பை ஏற்க வேண்டும். காரணம், நமது தலைவரின் தலைமையில்தான் ஆட்சி அமைக்கப்படும் என அவரவர்களின் ரசிகர்கள், இத்தனைக் காலம் நம்பி வந்தனர். ஆனால் தற்போது இருவரும் இணைவது என்பது தலைமையைக் கேள்விக்குள்ளாக்கும். இந்த இணைப்பை ரசிகர்கள் ஏற்காத சூழல் ஏற்படும். இது தொடர்பாகத்தான் ஆலோசனை நடைபெற்றது.

கமல், ரஜினி
கமல், ரஜினி

அதன் ஒரு பகுதியாகத்தான் இருவரும் ஒரே மேடையில் தோன்றி நட்பு குறித்து பேசினர். அடுத்த ஒருவருடத்தில் இதுபோன்று பலமுறை ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வுகள் நடக்கும். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இந்த இணைப்பை நிலைநிறுத்த முடியும். அடுத்தாண்டில் அதிகாரபூர்வமாக ரஜினி கட்சியைத் தொடங்கிய பின்னர் இணைந்து செயல்படுவது வேகம் பெறும்” என்றார் விரிவாக!

இதனிடையே இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், ``தமிழகத்துக்கு தேவைப்பட்டால் என்றுதான் நானும் ரஜினியும் குறிப்பிட்டுள்ளோம். தமிழகத்துக்காக உழைப்போம் என்பதுதான் இணைப்பின் அவசியம்” என விளக்கமளித்துள்ளார்.

தற்போது மக்கள் நீதி மய்யத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு