Published:Updated:

`கதாநாயகர்களாகும் காக்கிச் சட்டைகள்' - பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எஸ்.வி.சேகர் - எடப்பாடி பழனிசாமி
எஸ்.வி.சேகர் - எடப்பாடி பழனிசாமி

தமிழகக் காவல்துறையினர் நடவடிக்கை பற்றிய விளக்கத்தின்போது, ``மக்கள் விரோத செயல்களை யார் செய்தாலும், அவர்கள்மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அண்மையில் நடிகர் எஸ்.வி.சேகரையே விசாரணை செய்திருக்கிறது’’ என்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் சாத்தான்குளம் சித்ரவதைப் படுகொலைகளால் பதறவைத்த தமிழ்நாடு காவல்துறை, அண்மைக்காலச் செய்திகளில் 'காவல்துறை உங்கள் நண்பன்' என்ற வாசகத்துக்கு வலு சேர்த்துவருவது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அதேநேரம், `இது காவல்துறை - தமிழக அரசின் கூட்டு முயற்சியோடு திட்டமிட்டுப் பரப்பப்படுகிற செய்திகள்’ என்று சொல்லி அதிரவைக்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

சுதந்திர தின விழாவில் மரியாதை
சுதந்திர தின விழாவில் மரியாதை

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திரதின விழா மேடையில், பெண் இன்ஸ்பெக்டர் அல்லிராணிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர். காரணம்... மின்வேலியில் சிக்கி இறந்துபோன ஒருவரை, 'கொரோனா நோய்த்தொற்றால் இறந்துபோய்விட்டார்' என்று தவறாக நம்பிய பொதுமக்கள், பிணத்தை அகற்ற மறுத்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில், இன்ஸ்பெக்டர் அல்லிராணி களத்தில் இறங்கி, பிணத்தை அப்புறப்படுத்தி அசத்தினார். அவரின் இந்த தீரச்செயலே, காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

தாய் - தந்தையை இழந்து தவித்த பெண் ஒருவருக்கு நகை, பணம், சீர் வரிசை பொருள்கள் வழங்கி திருமணமும் செய்துவைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் இன்ஸ்பெக்டர்.

போலீஸ் உதவி
போலீஸ் உதவி

சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமியோ, கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்துவரும் செல்லப்பிராணிகளுக்கு கருணையோடு உணவு மற்றும் குடிநீர் வழங்கிவருகிறார். திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீத்தாராம், சாலையோரம் வசித்துவரும் ஏழை எளியவர்களுக்கு தனது சொந்தச் செலவில் உணவளித்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி அண்மைக்காலச் செய்திகளில் தமிழ்நாடு காவல்துறையினரைப் பற்றிய பாசிட்டிவ் செய்திகள் பக்கத்துக்கு பக்கம் படபடக்கின்றன. மனிதாபிமானம் கரைபுரளும் இந்தச் செய்திகள் பொதுமக்கள் - காவல்துறையினரிடையேயான பிணைப்பை வலுப்படுத்திவருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினரின் இந்தச் செயல்கள் அனைத்தும் பாராட்டப்படவேண்டியவை. ஆனால், திடீரென சமீபகாலமாக காவல்துறையினர் பற்றிய சென்டிமென்ட் செய்திகள் அதிகரித்திருப்பதன் பின்னணி குறித்துப் பேசுபவர்கள்,

`` தமிழகத்தில் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைக் களைவதற்காகவே இதுபோன்ற செய்திகளைப் பெரிய அளவில் பிரபலப்படுத்திவருகிறார்கள். குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவமும், சாத்தான்குளம் தந்தை - மகன் சித்ரவதை படுகொலை சம்பவமும் காவல்துறையை மட்டுமல்லாமல், தமிழக அரசையே கிடுகிடுக்கவைத்துவிட்டன.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்

இழந்துபோன செல்வாக்கை மீட்டெடுக்கும்விதமாகவே, அரசும் காவல்துறையும் ஒருங்கிணைந்து இது போன்ற பொதுமக்கள் சேவை மற்றும் நல்லுறவு பற்றிய செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்ப வைத்திருக்கின்றன. ஏனெனில், வரவிருக்கிற 2021 சட்டமன்றத் தேர்தலில், ஆளுங்கட்சிக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானதாக இருக்கப்போவது காவல்துறையினரின் அத்துமீறல் சம்பவங்கள்தான்.

எதிர்க்கட்சியினர் இப்போதே இதற்கான பிரசார உத்திகளைத் தயார் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இதையெல்லாம் மோப்பம் பிடித்துவிட்ட உளவுத்துறை, அரசுக்குக் கொடுத்திருக்கும் ஆலோசனையின் பேரிலேயே சமீபகாலமாக காக்கிச் சட்டை கதாநாயகர்கள் பற்றிய செய்திகளை பூதாகரமாக்குகின்றனர்'' என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

இந்தக் கூற்றை ஒட்டுமொத்தமாக மறுத்துப் பேசாமல், தனது அரசியல் விமர்சனப் பார்வையை முன்வைக்கும் பத்திரிகையாளர் ப்ரியன், ``பொதுவாக போலீஸ் என்றாலே, பொதுமக்களிடம் ஒருவித பயம்தான் அதிகமாக இருக்கிறது. வாச்சாத்தியில் ஆரம்பித்து, சிதம்பரம் பத்மினி கொலை வழக்கு, இப்போது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் படுகொலை என வரிசையாக இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களின் இந்த பய உணர்வை அதிகப்படுத்திக்கொண்டேதான் செல்கின்றன.

ப்ரியன்
ப்ரியன்

அதேசமயம், காவல்துறையிலுள்ள அனைவருமே இப்படி மோசமாகத்தான் இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. காவல்துறையில் பணிபுரிகின்ற நல்ல நபர்கள் செய்யக்கூடிய சேவைகளைத்தான் தற்போது செய்திகளின் வழியே நாம் பார்த்துவருகிறோம். ஆனாலும்கூட, 'சட்டத்தைக் காக்க வேண்டிய காவலர்கள், சட்டத்துக்கு விரோதமாகத்தான் நடந்துகொள்கிறார்கள். காவல்நிலையத்தில் நியாயம் கிடைப்பதில்லை' என்ற பொதுமக்களின் பயமும் கோபமும் இந்த ஆட்சியில் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கின்றன. மக்களின் இந்த அச்ச உணர்வைப் போக்க வேண்டிய கட்டாயமும் அவசரமும் காவல்துறை-ஆளுங்கட்சியினருக்கு இருக்கிறது.

வரப்போகும் சட்டமன்றத் தேர்தலின்போது, தூத்துக்குடி, சாத்தான்குளம் சம்பவங்கள் எதிர்க்கட்சிகளால் அதிகம் பேசப்படும். இதன் தொடர்ச்சியாக தென்மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் பெருமளவில் பாதிக்கப்படும். இதையெல்லாம் அறிந்துதான், ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து 'உங்கள் இமேஜை நல்லவிதமாக வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்' என்று அறிவுரை சொல்லப்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடாகவே அண்மைக்காலச் செய்திகளைப் பார்க்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதுமட்டுமல்ல... அ.தி.மு.க-வின் கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில்தான் இம்மானுவேல் சேகரன் குருபூஜையின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் ஆறு பேர்வரை இறந்துபோனார்கள். இதுதவிர, ஆங்காங்கே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களிலும் சிலர் இறந்து போயிருக்கின்றனர். எனவே, வரும் தேர்தலில் அ.தி.மு.க அரசுக்கு நிறைய சவால்கள் இருக்கத்தான் செய்யும்'' என்கிறார்.

இந்த நிலையில், காவலர்களுக்கான மனநல பயிற்சி வகுப்பு நடத்திவரும் ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது ''காவல்துறையில், ஆயிரக்கணக்கானவர்கள் பயிற்சி எடுக்கிறார்கள். அவர்களில் ஏதோ ஒன்றிரண்டு பேர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையுமே குற்றம் சொல்லிவிட முடியாது.

கருணாநிதி
கருணாநிதி

கடந்த மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுக்கவிருக்கும் காவல்துறையினரை 234 சென்டர்களாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே உளவியல் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறோம். காவலர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய காவலர்கள் மற்றும் ஏற்கெனவே பணியில் இருந்துவரும் காவலர்கள் என அனைவருமே இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். ஆன்லைன் வழியே நடைபெறும் இந்த வகுப்பில், என்னைப் போன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் மனநல ஆலோசகர்கள் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அளித்துவருகிறோம்.

இதில், 'காவலர்களுக்கான அதிகாரம் என்பது எதுவரையில் உள்ளது, அந்த எல்லையை மீறிவிடாமல் பணிபுரிவது எப்படி, நம்மில் ஓரிருவர் செய்கிற தவறு எப்படி பொதுமக்களிடையே வெறுப்புணர்வை ஊட்டியிருக்கிறது, மீண்டும் அது போன்ற நிகழ்வுகள் நடைபெறாதபடி செயல்படுவது எப்படி...’ என்பது போன்ற விழிப்புணர்வு விஷயங்களை எடுத்துச்சொல்லி புரியவைத்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பயிற்சி வகுப்பின் தாக்கத்தால்கூட, காவலர்களிடையே நல்லதொரு மனமாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

போலீஸ்
போலீஸ்

காவலர்கள் என்பவர்கள் யார்.... அவர்களும் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என நம் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தானே... எனவே, நம்மைப்போலவே அவர்களும் இரக்க குணம் கொண்டவர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்று காலத்தில், மக்கள் அனைவருமே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிவருவதை அவர்களும் நேரடியாகப் பார்க்கிறார்கள். அதனால், மனமுவந்து தங்களால் ஆன உதவிகளையும் செய்துவருகிறார்கள்.

சென்னை: கன்டெய்னர் லாரிகளுக்குள் சிக்கிய கணவன், மனைவி! - இரவில் நடந்த சோகம்

இப்படி ஒரு காவலர் செய்யும் மனிதாபிமான உதவியை, மற்றொருவர் பார்க்கும்போது 'நாமும் இதுபோல் செயல்படலாமே..' என்ற எண்ணம் தோன்றி அவரும் அதைப் பின்பற்றலாம். ஆக, இது இயல்பாக ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றம்தான். மற்றபடி இதற்காக அரசே திட்டமிட்டு, ஓர் ஏற்பாட்டை செய்திருப்பார்கள் என்பதெல்லாம் அதீத கற்பனை'' என்கிறார் உறுதியாக.

இதையடுத்து, காவல்துறையினரின் நற்பணிகளுக்குப் பின்னே அ.தி.மு.க அரசின் செயல்பாடுகள் இருப்பதாக முன்வைக்கப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தியிடம் பேசியபோது,

புகழேந்தி
புகழேந்தி

''சாத்தான்குளம் விவகாரத்தில், பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கேட்பதற்கு முன்னரே, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதும், அதன் பிறகு சி.பி.ஐ விசாரணை கோரியதுமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதனால்தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரேகூட, அரசைக் குறை சொல்லவில்லை. அரசு வழங்கிய பணியையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள். ஆக, இந்த விஷயத்தில் அரசு மிகச்சரியாக செயல்பட்டிருக்கிறது என்றுதான் மக்களும் பேசுகிறார்கள்.

கோவை: `கொங்கு டார்கெட்;  டிசம்பரில் திருப்புமுனை!' - பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்

மக்களை நேசிக்கிற, பாதுகாக்கிற துறைதான் காவல்துறை. அந்தவகையில், காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலரோ அல்லது உயர் அதிகாரியோ பொதுமக்களுக்கு ஓர் உதவியைச் செய்வாரேயானால், அது பாராட்டப்பட வேண்டிய அம்சம். இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அந்தக் காவலருக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த துறைக்கும் ஆளும் அரசுக்குமே நல்லபெயர் கிடைக்கும்தான். நல்லதொரு விஷயம் நடக்கும்போது, 'இதை ஏன் இப்படி செய்கிறார்கள்...' என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இல்லை.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு மிகச்சரியாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். மக்களுக்கு விரோதமான காரியத்தை யார் செய்தாலும், அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து சட்டம் தன் கடமையைச் செய்யும். உதாரணமாக நடிகர் எஸ்.வி.சேகர் விஷயத்தில், `மன்னிப்பு கேட்டால்தான் ஜாமீன் கொடுப்போம்... இல்லையென்றால் கொடுக்க மாட்டோம்' என்று சொல்லி இரண்டரை மணி நேரம் உட்காரவைத்து விசாரணை செய்திருக்கிறது அரசு.

இதேநேரம் தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால், காவல்துறையினரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சர்வாதிகாரம் செய்துகொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைக்கு அப்படியொரு குற்றச்சாட்டை அ.தி.மு.க-வினர் யார் மீதாவது நீங்கள் சொல்லமுடியுமா? எனவே, எங்கள் நடவடிக்கைகள் மீது யாரும் சந்தேகப்பட வேண்டாம்!'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு